இவர்களும் மனிதர்கள்தான்! கருணை இல்லாத முதலாளிகளின் சுயநலத்தால் வீழ்ந்த மனிதம்!

சில காலத்திற்கு முன்பு, தமிழ்நாட்டில் பணியாற்றிய சார்-ஆட்சியற் ஒருவருக்கு, தொழிலாளர்கள் மோசமாக சுரண்டப்படும்
இவர்களும் மனிதர்கள்தான்! கருணை இல்லாத முதலாளிகளின் சுயநலத்தால் வீழ்ந்த மனிதம்!

ஆழ்துளை கிணற்றின் முடிவில்லாத குழாய்கள்: கட்டாயத் தொழில்முறை

சில காலத்திற்கு முன்பு, தமிழ்நாட்டில் பணியாற்றிய சார்-ஆட்சியற் ஒருவருக்கு, தொழிலாளர்கள் மோசமாக சுரண்டப்படும் ஒரு நிகழ்வு குறித்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அத்தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியில் அவர் இறங்கினார்.

ஆழ்துளை கிணறு தோண்டுகின்ற ஒரு லாரி முன்பாக இது அவரைக் கொண்டுபோய் நிறுத்தியது. அங்கே, அழுக்கான ஆடைகளுடன் சோர்வடைந்த, பார்க்க சகிக்காத தோற்றத்தில் வடஇந்திய இளைஞர்கள் சிலரை அவர் பார்த்தார். ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் நிறுவனங்கள், ஒரு நிரந்தர அல்லது தற்காலிக அமைவிடத்தில் இருந்து கொண்டு செயல்படுவதில்லை. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் இடங்களுக்கு அந்த லாரியிலேயே தொடர்ந்து பயணம் செய்து தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு ஊர்களுக்கு செல்கின்ற ஒரு சர்க்கஸ் குழுவைப் போலவே இந்த தொழிலாளர்களும் அந்த லாரியிலேயே பயணித்து, அதன் கீழேயே உணவு சமைத்து, உண்டு, உறங்க வேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தொழிலாளர்கள் வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்ட் வழியாக இங்கு வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்டனர் என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் சார்-ஆட்சியருக்கு தெரிய வந்தது. ‘நல்ல ஊதியம்’ தரப்படுமென்றும் அவ்வூதியம் அவர்கள் பணியை முடித்த பிறகு சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் போது மொத்த ஊதியமும் சேர்த்து தரப்படுமென்றும் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதில் பிரச்னை என்னவென்றால் சொந்த ஊருக்கு அவர்கள் எப்போது திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் அவர்கள் சம்பாதித்த ஊதியம் எப்போது அவர்களுக்கு கிடைக்குமென்று அந்த முதலாளி ஒரு போதும் கூறியதில்லை.

லாரியில் ஊர் ஊராக  சென்று வேலை செய்தபோது அவர்கள் ஏதோ சாப்பிட்டு உயிர் வாழ்வதற்கு போதுமான அளவுக்கு மட்டும் ஒரு குறைந்த தொகையில் பிழைப்புக்கான படி மட்டும் வழங்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில், தங்கள் அன்புக்குரிய மனைவியையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு அத்தொழிலாளர்கள் திரும்ப வேண்டுமென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தபோது, அவர்களுக்கு தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த சேர்த்து வைக்கப்பட்ட ஊதியமானது மறுக்கப்பட்டது. ‘எந்த நேரத்திலும் இங்கிருந்து நீங்கள் கிளம்பலாம். ஆனால் உங்களது ஊதியத்தை எப்போது தருவதென்று நான்தான் தீர்மானிப்பேன்,’ என்று அந்த முதலாளி கூறியது அத்தொழிலாளர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. அவர்களுக்குரிய ஊதியத்தை தராமல் பிடித்து வைத்துக் கொண்டு அத்தொழிலாளர்களை அநியாயமாக நிர்ப்பந்தித்து வேலை வாங்குகிற முழு அதிகாரமும் அந்த முதலாளியிடமிருந்தது.

மாதங்கள் கடந்தோடியபோது, தொடர்ந்து அங்கேயே வேலை செய்து கொண்டிருந்த அத்தொழிலாளர்களின் வேதனையும், பயமும் அதிகரித்தன. அங்கிருந்து தப்பியோட ஒரு தொழிலாளர் முடிவு செய்வாரானால், அவரது குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த ஊதியப்பணம் அனைத்தையும் அவர் இழக்க வேண்டியிருக்கும். வேலை வழங்கும் முதலாளியுடனே தொடர்ந்து இருக்கலாம் என்று அவர் முடிவு செய்வாரானால், பல மாதங்கள் தரப்படாமல் பிடித்து வைத்துள்ள பெருந்தொகையானது, மனதில் தோன்றி, அது கிடைக்குமா? அல்லது கிடைக்காதா என்ற ஏக்கத்தை உருவாக்கும். தனது சொந்த நிலைமை குறித்து, தீர்மானிக்கின்ற எந்த உரிமையும் அல்லது கட்டுப்பாடும் அவருக்கு இருக்காது.

இந்த வழக்கில், இந்த முதலாளி தனது இஷ்டப்படி அவர்களை ஆட்டுவித்து கட்டாயமாக வேலை செய்வதற்கு நிர்ப்பந்திப்பதற்கு பல மாதங்கள் தரப்படாத உறுதியளிக்கப்பட்ட ஊதியத்தொகையை மீனை சிக்க வைப்பதற்கான இரை போலப் பயன்படுத்தியிருக்கிறார். இது உண்மையிலேயே மிக மோசமான, அநியாயமான சுரண்டலாகும்.

சமூக அல்லது பாரம்பரிய அல்லது சாதி அடிப்படையிலான காரணங்களுக்காக அல்லது வேலை தருபவரிடம் ரொக்கமாக முன் பணத்தை பெற்றதன் காரணமாக அவரிடம் வேலை செய்யுமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்தப்படும்படி வழக்கமாக இருந்து வருகிறது. இதுதான் கொத்தடிமைத் தொழில்முறை என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், இந்த கொத்தடிமைத் தொழில்முறையை எதிர்த்து போராடுவதற்காக செயல்நடவடிக்கைத் திட்டங்களையும், பட்ஜெட் ஒதுக்கீடுகள், நடைமுறைகளையும் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இந்த ஆழ்துளை கிணறு விஷயத்தில் நிர்ப்பந்திக்கப்படும் கட்டாய தொழில்முறையானது, ஒரு நவீன வடிவத்தை பெற்றிருக்கிறது. சிக்குண்ட ஒரு தொழிலாளரை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு பல மாதங்கள் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற ஊதியமானது, அத்தொழிலாளியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அந்த முதலாளி அவர்களது அடிப்படை உரிமையை மறுத்து வந்திருக்கிறார். மாநில அரசும், மத்திய அரசும் இப்பிரச்னையை இன்னும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அநியாயமான, மனிதாபிமானமற்ற இந்தச் சூழலில் சிக்கியிருக்கிற தொழிலாளர்களுக்கு, அவர்களது ஊதியத்தை இழப்பது அல்லது அவர்களது சுதந்திரத்தை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கட்டாய வேலை செய்வதற்கு தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பதற்கு அவர்களது கல்விச் சான்றிதழ்களை வேலை வாங்கும் முதலாளிகள் தங்கள் வசம் வைத்துக் கொள்கின்ற பல சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்குக் தீர்வு காண தொழிலாளர் நல நீதிமன்றங்களை அல்லது அலுவலர்களை அத்தொழிலாளர்கள் அணுகலாமே என்று சில நபர்கள் வாதம் செய்யலாம். முறைப்படுத்தப்படாத தொழில்துறையை, அங்கு பணியாற்றியதாக எந்தவொரு ஆவணமும் இருக்கப் போவதில்லை. கல்விச் சான்றிதழ்களை தராமல் வைத்துக் கொள்கின்ற நேரும்போது, அவற்றை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக எந்த ரசீதும் தரப்படவில்லை. இத்தகைய எதார்த்தமே தங்களது முதலாளிகளுக்கு பயந்து அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும்படியாக இவர்களை நிர்ப்பந்திக்கிறது. இங்கிருந்து வெளியேறி சுதந்திரத்தை பெறுவதை அவர்கள் தேர்வு செய்யலாம் அல்லது ஊதியப்பணம் எப்போதாவது கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம்.

1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம், பிரிவு 374, கட்டாய தொழில்முறையை குற்றச்செயலாக குறிப்பிடுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 23, கட்டாயத் தொழில்முறையை தடை செய்கிறது மற்றும் தண்டிக்கிறது. 1976-ம் ஆண்டின் கொத்தடிமைத் தொழில்முறை (ஒழிப்பு) சட்டத்தின் பிரிவு 12, ‘கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களை / முறைகளை’ ஒழிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பதை அவசியமாக்குகிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடை) சட்டம் 1976-ன் பிரிவு 3(1) (h)இ கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை குறிப்பிட்டிருக்கிறது.

எனினும், 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களை / முறைகளை’ கையாள்வதற்காக எந்தவொரு தேசிய / மாநில அளவிலான கொள்கையோ, பட்ஜெட் ஒதுக்கீடோ, 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களினால்’ பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான நடைமுறைகளையோ அல்லது அவற்றை கையாள்வதற்கான எந்த முன்தடுப்பு இயக்க முறைகளையோ நம்மால் காண இயலாது மற்றும் கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களுக்காக குற்றமிழைப்பவர்கள் மீது எந்தவொரு வழக்குகள் பதிவு செய்யப்படுவதோ அல்லது தண்டனை வழங்கப்படுவதோ இல்லவே இல்லை.

கொத்தடிமைத் தொழில்முறையை ஒழிப்பதற்காக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றபோது, முதலாளிகளின் / பணி வழங்கும் நிறுவனங்களின் சுரண்டல் முறைகளும், 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களாக / முறைகளாக’ மாற்றம் கண்டு செயல்படுத்தப்படும் என்று சில குடிமைச் சமூக அமைப்புகள் நம்புகின்றன, கவலை தெரிவிக்கின்றன.

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு வழக்கில் (1982 யுஐசு 1473) இந்திய உச்சநீதிமன்றம், 'மாற்று வழிமுறைகளுக்கான விருப்பத் தேர்வை ஒரு நபர் இழக்கச் செய்யும் எந்தவொரு காரணியும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை வழிமுறையை மட்டுமே பின்பற்றி செயல்படுமாறு அவரை கட்டாயப்படுத்துகிற எதுவும், 'நிர்ப்பந்தம் என முறையாக கருதப்பட வேண்டும்; ஏனெனில் இது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் கட்டாயமாக செய்யப்படும் பணிமுறையாக இருக்கும்,’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசும், கொத்தடிமைத் தொழில்முறை பிரச்னைக்குத் தீர்வுகாண தீவிரமாக செயலாற்ற முனைகின்ற போது, ‘கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்கள் / முறைகள்’ என்ற மற்றொரு குற்றச்செயல் உருவாகக்கூடும் என்பதையும் அவர்கள் முன்கூட்டியே கணித்து, அது வலுப்பெற்று நடைமுறையாக மாறிவிடுவதற்கு முன்பாக அது நிகழாமல் திறம்பட தடுக்கப்பட இந்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- ஜான் ரிச்சர்டு எபனேசர், வழக்கறிஞர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com