உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் உங்களுக்காக ஒரு செய்தி! படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்!

சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்ற பாடல் நினைவிருக்கிறதா? பாடலும் சரி அதன் பொருளுமான அந்தச் சிட்டுக்குருவி
உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் உங்களுக்காக ஒரு செய்தி! படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்!


சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை என்ற பாடல் நினைவிருக்கிறதா? பாடலும் சரி அதன் பொருளுமான அந்தச் சிட்டுக்குருவியும் சரி இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு தேடிப் பிடிக்கவேண்டியவையாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்தால் ஈரமுள்ள மனங்களுக்கு வலிக்கும். இன்று (20 மார்ச்) உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருந்த குருவிகளை நினைவு கூற வைத்துவிட்ட இந்த நவீன வாழ்வியலை என்ன சொல்ல?

முன்பு நம் வீட்டு முற்றத்தில் க்ரீச் க்ரீச் என்று தன் இருப்பை அறிவித்தபடி பறந்து வந்து, உரிமையுடன் கீழே சிதறி கிடக்கும் தானியங்களை சின்னஞ்சிறு அலகால் கொத்தி சாப்பிட்டுவிட்டு, தன் குடும்பத்துக்கும் உணவு சேகரித்துப் பறந்து செல்லும் அந்த அழகிய பறவைகள், தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில் அருகிப் போயின. பங்களூரூவில் தன் வீட்டையே குருவிகளின் சரணாலயமாக மாற்றி வாழும் ‘குருவி மனிதன்’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் எட்வின் ஜோசப் பற்றி படித்த போது உண்மையில் ஆச்சரியமாகிப் போனது. அவர் அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் குருவிகளைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

'12 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இது தொடங்கியது. என் மனைவி சமைப்பதற்காக அரிசியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீழே சிதறியிருந்த அரிசிக்காக நிறைய குருவிகள் அவர் காலருகே சுற்றி நின்று சிந்திய அரிசிகளை கொத்தி சாப்பிட்டன. 

நான் என் மனைவியிடம் அரிசியை தினமும் சற்று அதிகமாகப் போடச் சொன்னேன். அப்போதுதான் நிறைய குருவிகள் வந்து சாப்பிட முடியும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே நிறைய குருவிகள் தினந்தோறும் பசியாற்றிக் கொள்ள எங்களைத் தேடி பறந்து வரத் தொடங்கின.

குருவிகள் முட்டையிட ஒரு சிறிய தொட்டிச் செடிகளை நண்பர் ஒருவர் தந்தார். அதன்பின் நானே செயற்கை கூடுகள், சிறு வீடுகள் என அவர்களுக்காக கட்டினேன். முன்பு 12 குருவிகளாக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது 200 குருவிகளுக்கும் மேலாக மாறியுள்ளது’. என்றார் ஜோசப்.

குருவிகள் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று அவரிடம் கேட்டதற்கு, ‘என்னுடைய குழந்தைபருவத்தில் என் வீட்டருகே நிறைய குருவிகளை பார்ப்பேன். திருமணமான புதிதில் என் வீட்டிலும் கூட ஒரு குருவி கூடு கட்டியிருந்தது. நம்முடைய வாழ்வியலில் ஒன்றாக இணைந்திருந்த அந்தக் குருவிகள் திடீரென்று மறைந்து போக ஆரம்பித்தன.

ஒரு நாள் ம்யூசியத்தில் ஒரு குருவியை பாடம் செய்துவைத்து இதுதான் இந்திய குருவி என்று எழுதியிருந்ததைப் பார்த்து எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இப்போதே ஏதாவது செய்யாவிட்டால் உண்மையில் குருவிகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று நினைத்தேன். அவற்றை அழிவிலிருந்து தடுத்து என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாக்க முடிவு செய்தேன்.

முன்பெல்லாம் சாலையோரங்களில் மரங்கள் இருக்கும். அவை பல்லாயிரக்கணக்கான பறவைகளின் வீடுகளாக இருந்தன. ஆனால் இப்போது மரங்களை வெட்டிவிட்டார்கள். எங்கு திரும்பினாலும் கான்க்ரீட் மயமாகிவிட்டது. நீர்நிலைகளும் குறைந்து வருகின்றன. பசுமையும் இற்று வருகிறது. இந்த நிலையில் பறவைகள் உணவுக்கும் தாகத்துக்கும் நிழலுக்கும் என்ன செய்யும்? சரியான உணவு கிடைக்காதது, முட்டையிடுவதற்கான கூடு கட்டமுடியாத நிலை, செல்போன் டவர்களில் இருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் இன்றைய தேதியில் மொத்தமாக அழிந்து வருகின்றன.

குருவிகளின் இந்த பேரழிவிற்கு எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் செல்போன் டவர்களும் அதிலிருந்து வரும் மின் காந்த அலைகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தென் அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்த போது, செல்போன் டவர்கள் எதுவும் நகரத்தில் பார்க்க முடியவில்லை. அவரை எல்லாம் நகரத்துக்கு வெளியே ஒதுக்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கே? அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் டவரை கட்டிக் கொள்ளலாம்’ என்று வேதனையுடன் கூறினார் ஜோசப்.

எட்வின் ஜோசப் ஓய்வு பெற்ற ஒரு அரசுப் பணியாளர். தன்னுடைய சொற்பமான ஓய்வூதியப் பணத்திலிருந்துதான் அவர் குருவிகளைப் பராமரித்து வருகிறார். அவரது இந்த தன்னலமற்ற சேவைக்கு அரசு உள்ளிட்ட எந்த தன்னார்வ அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பதில் அவருக்கு வருத்தம் உண்டு. அவரது மனைவி மட்டுமே அவருக்கு இவ்விஷயத்தில் உற்ற துணை. மேலும் அவர் கூறுகையில், 'ஆனால் இது முடிவல்ல. குருவிகளைப் பொருத்தவரையில் என்னால் ஆனவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். மனிதர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது.

சக ஜீவன்களான பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். அவர்களுக்கு சிறிதளவு உணவும், கொஞ்சம் நீரும் தினமும் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்தால் போதும், இதுதான் ஒவ்வொருவரிடமும் என்னுடைய கோரிக்கை’ என்றார் ஜோசப்.

ஜோசப் தற்போது மகிழ்ச்சியான மனிதராக தன்னை உணர்கிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் பறவைகளின் ஒலியைக் கேட்டபடி தான் விழிக்கிறார். அவரது வீட்டைச் சுற்றி குருவிகள் அங்குமிங்கும் பறந்தபடி இருக்கும். அவை இரையை உண்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு நிம்மதியாக தனது கூடுகளுக்குத் திரும்பும். முதலில் அரிசியை மட்டும் வைத்துக் கொண்டிருந்த ஜோசப் தம்பதியர் தற்போது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பருப்பு, நவதானியங்கள் என விதவிதமான மெனுக்களை தயாரித்து அப்பறவைகளுக்கு உணவிடுகிறார்கள். தங்கள் வீட்டில் வசிக்கும் அந்தக் குருவிகளை தங்களுடைய குழந்தைகளைப் போலவே எண்ணி பராமரிக்கிறார்கள்.

சுறுசுறுப்பு, சிறிய உடல்வாகு, ரசிக்கத்தக்க நிறம் என அழகிய பறவைகளான சிட்டுக்குருவிகள், தற்போது அழிந்து வரும் நிலையை நாம் மாற்ற  முயற்சி செய்ய வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்க, அவற்றை நம் சக ஜீவனாக நினைத்துக் காக்க, ஒவ்வொருவரும் அவற்றுக்கு சிறிது இடம் மனத்திலும், சிறிது இடம் வீட்டிலும் அல்லது நம் மொட்டை மாடிகளிலும் தந்து அழிந்து வரும் அப்பறவை இனத்திஅக் காப்பாற்றுவோம். இதுவே சிட்டு குருவி தினத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உறுதிமொழி. செய்வோமா?

நன்றி - ஜோசப் எட்வின் நேர்காணல் - NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com