இரு விபத்துகளில் 11 பேர் சாவு! விபத்துக்கான காரணங்களில் ஒன்று ஓட்டுநரின் தூக்கமின்மை!

பெரும்பாலான விபத்துகளில் ஒரு நபரே தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும், வாகன ஓட்டிகளுக்கு நேரும் உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வினாலும், தூக்கமின்மையினாலும் தான் விபத்துகள் நேருகின்றன.
இரு விபத்துகளில் 11 பேர் சாவு! விபத்துக்கான காரணங்களில் ஒன்று ஓட்டுநரின் தூக்கமின்மை!

நேற்று சாத்தூர் மற்றும் தஞ்சை என இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சம்பவ இடத்திலேயே 11 பேர் மரணமடைந்தனர். இரண்டு விபத்துக்களுமே மிக மோசமான வகையில் நிகழ்ந்தவை மட்டுமல்ல. இரண்டுமே கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்று திரும்புகையில் நேர்ந்த விபத்துகள். கோயிலுக்குச் சென்று திரும்புவது மட்டுமல்ல உற்றார், உறவினர் என அனைவரையும் அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் மொத்தமாகத் திரளும் இத்தகைய நிகழ்வுகளின் போது நேரக்கூடிய விபத்துகள் கணிசமான நபர்களைப் பலிகொள்வது இன்று நேற்றல்ல காலங்காலமாக நடந்து வரும் சங்கதி தான். இத்தகைய கோர விபத்துகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைவது வாகன ஓட்டுனரின் தூக்கமின்மையே.

  • இந்த மோசமான நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒரே நபரையே தொடர்ந்து வாகன ஓட்டியாகப் பயன்படுத்தாமல் வாகனங்களை இயக்கத் தெரிந்த ஓரிருவர் மாற்றி மாற்றி வாகனங்களை ஓட்டினால் இத்தகைய விபத்துகளை ஓரளவுக்குத் தவிர்த்திருக்க முடியும்.
  • அதுமட்டுமல்ல, வாகன ஓட்டிகளில் சிலர் தங்களது பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பணத்தேவைகளுக்காக போதுமான ஓய்வெடுத்தல் இல்லாமலேயே தொடர்ந்து வாகனங்களை இயக்க நேரும் போது சில சந்தர்பங்களில் தங்களது கட்டுப்பாடுகளை இழந்து விபத்து நேர்ந்து விடுகிறது. இவைகளைத் தவிர்க்க வேண்டுமெனில் முதலில் வாகன ஓட்டுனர்களை நாம் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
  • வாடகை வாகனமோ அல்லது சொந்த வாகனமோ கட்டணமாகவோ அல்லது எரிபொருளுக்காகவோ பணம் கொடுத்து விட்டோம், என்பதோடு முடிந்து விடுவதல்ல நமக்கான பயணத்திட்டங்கள். பாதுகாப்புடன் பயணிப்பதில் துவங்கி பயண நேரத்திலும் நமது பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாக வீடு திரும்பும் போது தான் அது மன நிறைவுடனும், நிம்மதியுடனும் முடிவடைகிறது.
  • பெரும்பாலான விபத்துகளில் ஒரு நபரே தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும், வாகன ஓட்டிகளுக்கு நேரும் உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வினாலும், தூக்கமின்மையினாலும் தான் விபத்துகள் நேருகின்றன. இதைத் தவிர்க்க;
  • இரவுப் பயணங்களின் போது வாகன ஓட்டியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர ஒரு நபராவது விழித்திருக்க வேண்டியது அவசியம்.
  • இரவுகளில் தாலட்டித் தூங்க வைப்பதான மென்மையான பாடல்களைக் கேட்பதை விட துள்ளலிசைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணிக்கலாம். வாகனத்தில் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு இது தொல்லையாக இருந்தாலும் உயிரை விட தூக்கம் பெரிதில்லை தானே?!
  • நீண்ட தூரப் பயணமெனில் பயணத்தின் இடையே இரண்டு மூன்று முறை மோட்டல் ஹைவேக்களில் நிறுத்தி ஸ்ட்ராங்கான காஃபீ, டீ அருந்திய பின் பயணத்தைத் தொடரலாம்.
  • வாகனஓட்டிகளை அடிமைகளாகவோ, ஏவல் பணி செய்பவர்களாகவோ எண்ணாமல் அவர்களிடம் கூடுமான வரையில் பயண நேரம் முழுதும் நட்பாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வரலாம். இதனால் இருவருக்குமிடையே தோன்றும் ஆத்மார்த்தமான உறவில் பயணிகளைப் பற்றிய கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் இருப்பார்கள் ஓட்டுனர்கள்.
  • நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள், சுற்றுலாத்தளங்கள் போன்ற இடங்களை அடைந்ததும் வாகன ஓட்டுனர் ஓய்வெடுக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியதும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று. ஏனெனில் நம்மையெல்லாம் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திரும்பும் மிகப்பெரிய கடமை அவருக்கு இருக்கிறது. எனவே அவருக்கான போதுமான ஓய்வு, தூக்கம் இரண்டையுமே நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அங்கேயும் சென்று பணம் கொடுத்திருக்கிறோமே என்ற ஹோதாவில் அவர்களை ஓய்வெடுக்க விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருக்கக் கூடாது.
  • வாகன ஓட்டிகளுக்குக் குடிப்பழக்கம் இருப்பின் அவர்கள் நமது பயணத்தின் போது குடிப்பதில்லை என உறுதியளித்தால் மட்டுமே அத்தகையவர்களை பயணத்திற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும். பெரும்பாலும் குடிப்பழக்கமிருக்கும் ஓட்டுநர்களை தவிர்த்து விடுவது நல்லது.
  • வாகன ஓட்டிகள் திருமணமாகாத இளைஞர்கள் எனில் அவர்களுக்கு அதி விரைவாக வாகனம் ஓட்டப் பிடித்திருக்கலாம், அதற்காக அதி வேகமாக வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. சாலைப் போக்குவரத்துத் துறையின் வரம்பிற்குற்பட்ட மித வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் நமது கடமையே.
  • கடைசியாக ஒரு விஷயம், வாகன ஓட்டிகளுக்கும் நம்மைப் போலவே ஒரு அன்பான குடும்பம் இருக்கக் கூடும். விபத்தில் சிக்கி உயிர் மற்றும் உடலுறுப்புகளை இழப்பதென்பது இரு சாரருக்குமே வேதனையான விஷயம் தான். எனவே பயணத்தின் போது இருவருமே கூடுதல் கவனத்துடனும் ஒருவர் மீதான மற்றவரது அக்கறையுடனும் இருந்தால் பயணம் துன்பமின்றி இனிதாக முடியும். அதற்கான பொறுப்புணர்வு இரு தரப்பினரிடையேயும் இருக்க வேண்டும். என்பதை பயணத்தின் முன் இருவருமே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இத்தனைக்குப் பிறகும் வண்டிக்குள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருக்கையில் சாலை வெறிச்சிட்டிருந்தால் நாமும் கொஞ்சம் கண்ணயரலாம் என வாகன ஓட்டி நொடியில் முடிவெடுத்து விட்டால் அப்புறம் அதோகதிதான். ஆகவே என்ன தான் சோர்வு என்றாலும் ஒருவர் வாகனம் ஓட்டுகிறார் எனில் அவருடன் குறைந்த பட்சம் ஒருநபராவது வாகனத்துக்குள் விழித்திருக்க வேண்டும். 

ஆதாரச் செய்தி...

இரு வேறு விபத்துகளில் 11 பேர் சாவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். 

இதேபோன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.


முதல் விபத்து:

சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கெங்கையா (45). இவரது குடும்பத்தின் காதுகுத்து விழா இருக்கன்குடி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க மாதாங்கோவில்பட்டியிலிருந்து வேன் மூலம் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பின்னர் விழா முடிந்து, வேனில் ஊருக்குப் புறப்பட்டனர்.
 அப்போது சாத்தூர் - தாயில்பட்டி சாலையில் ராமசந்திராபுரம் சந்திப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து செங்குத்தாக நின்றது. இதில், போத்தையா (65), அவரது மகன் மணிகண்டன் (34), அவரது சகோதரி அமுதா (45) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 காயமடைந்த 17 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பேச்சியம்மாள் (50), குருவம்மாள் (65), குருலட்சுமி (18) ஆகிய 3 பேர் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


இரண்டாவது விபத்து: 

தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பன்னீர்செல்வத்தின் மகன் விஜயகுமார் (27). லாரி உரிமையாளர். இவரது மனைவி சரண்யா (24). இவர்களது மகள் தனுஸ்ரீ(3). இவர்கள் கீழவஸ்தாச்சாவடியில் உள்ள சரண்யாவின் தந்தை தட்சிணாமூர்த்தி (55), தாய் உமாராணியுடன் (50) வசித்து வந்தனர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு விஜயகுமார், சரண்யா, தனுஸ்ரீ, விஜயகுமாரின் மாமனார் தட்சிணாமூர்த்தி, மாமியார் உமாராணி, சரண்யா சகோதரி இந்துமதியின் குழந்தைகள் ஸ்ரீவர்ஷா (12), சாய்வர்ஷினி(10) ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்றிருந்த னர். காரை கீழவஸ்தாச்சாவடியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் (27) ஓட்டினார். 
தரிசனம் முடிந்து சனிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விளார் பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியது. 
இதில், விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, குழந்தை தனுஸ்ரீ, ஓட்டுநர் அரவிந்த் ஆகிய 4 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சரண்யா, சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா, உமாராணி ஆகியோரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் சரண்யா இறந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் கிராமியப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்த விபத்துக்கு கார் ஓட்டுநரின் தூக்க கலக்கமே காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com