முதல் வெற்றி!

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்பதற்கு இலக்கணமாக அவரது பெயரில் 44 ஆண்டுகளுக்கு முன்னால் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித முணுமுணுப்போ, சலசலப்போ இல்லாமல் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடமை உணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் கண்ணியம் காத்து, ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்கூட கட்சி கட்டுப்பாடாகத் தொடரும் என்பதற்கான அறிகுறி இது.
ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மறைவு ஒட்டுமொத்த சமு
தாயத்தையே புரட்டிப்போட்டுவிடுவது இயல்பு. அதிலும் குறிப்பாக, அமைச்சர்களிலிருந்து அடிமட்டத் தொண்டர் வரை "அம்மா'வின் விழியசைவிற்கும் விரலசைவுக்கும் ஏற்ப செயல்பட்டு வந்த கட்சி, அவரது மறைவை எதிர்கொண்ட விதமும், அவரது பெயருக்கும் புகழுக்கும் துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் நடந்துகொண்ட முறையும் ஒட்டுமொத்த இந்தியாவையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் மரண அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி முதல்வரைத் தேர்ந்தெடுத்து பதவிப் பிரமாணமும் எடுத்துக்கொண்ட விதத்திற்குப் பின்னால் இருந்த அப்பழுக்கில்லாத திட்டமிடுதலும், அரசியல் சாதுர்யமும் யாரும் எதிர்பார்க்காதது. அதிலும் குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருமே சாட்சிகளாகப் பங்கு கொண்டது என்பது, தலைவியின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வலிமையையும், அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய ஆலமரம் சாய்ந்து விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறிஞர் அண்ணா காலமானபோதும் சரி, எம்.ஜி.ஆர். மறைந்தபோதும் சரி, தமிழகம் முழுவதும் நடந்த கலவரங்கள் எத்தனை, பொருள் இழப்பும் பாதிப்புகளும் எத்தகையவை என்பது அனைவருக்கும் தெரியும். இயல்பு வாழ்க்கை திரும்பப் பல நாட்கள் ஆயின.
நீண்ட கால உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு
களைச் செய்து சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்காவிட்டால், தமிழகமே கலவர பூமியாக மாறிவிட்டிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு அடித்தட்டு மக்கள் மத்தி
யிலும், தொண்டர்களிடையிலும் ஏற்பட்டிருக்கும் அபரிமித செல்வாக்கு அத்தகையது. இதற்கு முன்னால் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்த உணர்ச்சி எரிமலை இப்போதும் வெடித்திருக்கக்கூடும்.
அப்படிப்பட்ட சூழலை சாதுரியமாகக் கையாண்டு, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையிலும் அனை
வரும் பாராட்டும் வகையிலும் தனது தலைவியின் இறுதி யாத்திரையை நடத்தியது என்பது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிர்
வாகத் திறமைக்குக் கிடைத்த முதல் வெற்றி. மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார் என்றாலும், சுதந்திரமாக அவர் தலைமையில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய பிரச்னை, மிகத் திறமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. தொடக்கமே தெம்பூட்டும் விதமான ஆரம்பமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சசிகலாவின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாதது. குறைத்து மதிப்பிட முடியாதது. எம்.ஜி.ஆரின் மறைவில் தொடங்கி, கடந்த 29 ஆண்டுகளாக
ஜெயலலிதாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் அவரது வெற்றியிலும் தோல்வியிலும் பக்கபலமாகவும், பின் துணையாகவும் இருந்து வந்திருப்பவர் சசிகலா மட்டுமே. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்கூட, நீண்ட நாள் ஜெயலலிதாவால் சசி
கலாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை எனும்போது, எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு.
"மற்றவர்களால் மிகவும் தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். எனக்காக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடைய நட்பு மட்டும் இல்லையென்றால் அவரை யாரும் இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். எனது உடன்பிறவாச் சகோதரி. என் அம்மாவின் இடத்தை நிரம்பிய பெண் அவர்' என்று
ஜெயலலிதாவே, சிமி கரேவாலுடனான தனது பேட்டியில் சசிகலா குறித்து கூறியிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சசிகலா ஜெய
லலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்று தெரிந்து
கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருக்கும்போதே, அவரது எண்ணப்படியும், வழிகாட்டுதல்படியும் கட்சியினரை வழிநடத்தி வந்திருப்பவர் சசிகலாதான். அதனால், அ.தி.மு.க.வின் கட்சித் தலைமை என்பது இயற்கையாக சசிகலாவைச் சேரும் என்பதுதான் எதிர்பார்ப்பு. எதிர்கால கட்சித் தலைமைக்கு சசிகலாவும், நிர்வாகத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வமும் என்பது ஜெயலலிதா சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி என்றுதான் கூற வேண்டும். இந்த ஏற்பாடு சுமுகமாகத் தொடர்வதுதான் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஜெயலலிதாவின் அடிச்சுவட்டில் அடுத்து நான்கரை ஆண்டுகள் திறமையாகவும், சுமூகமாகவும் ஆட்சியை நடத்திச் செல்வதுதான் 2016-இல் மக்கள் அ.தி.மு.கவுக்கு அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதாக அமையும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com