மகிழ்ச்சி!

கூச்சல் குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் நடுவில், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தமமான ஒரு செயலை செய்திருக்கிறார்கள். இந்த நிதியாண்டின் குளிர்காலக்

கூச்சல் குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் நடுவில், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தமமான ஒரு செயலை செய்திருக்கிறார்கள். இந்த நிதியாண்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஒட்டுமொத்தமாக விரயமாகிவிடாமல், கடைசி நாளன்று நமது நாடாளுமன்றம் "மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா-2014'-ஐ நிறைவேற்றி புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் உரிமை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்ட
7 திறன் குறைவுகளை 21-ஆக அதிகரித்திருக்கிறது. திராவக வீச்சு பாதிப்பு, தலசீமியா, ஹிமோபிலியா உள்ளிட்ட ரத்தத் தொடர்பான நோய்கள், மஸ்குலர் டிஸ்ட்ரஃபி எனப்படும் தசை இறுக்க நோய், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு போன்றவையும் இந்த மசோதாவால் இப்போது மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 2.68 கோடி பேர். இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, அதிகாரபூர்வமான மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை ஏழு முதல் பத்து கோடியாக அதிகரிக்கக்கூடும். இதுவரை எலும்பு தொடர்பான பாதிப்புகள், பார்வையின்மை, கேட்கும் சக்தியின்மை ஆகிய மூன்று குறைகளைக் கொண்டவர்கள்தான் சலுகைகளையும் உரிமைகளும் பெற முடியும் என்று இருந்த நிலைமை மாறி, ஏனைய திறன் குறைவு உள்ளவர்களும் இனிமேல் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த மசோதா வழிகோலுகிறது.
மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைப்போல அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் எளிதாக சென்றுவர முடியாத வகையில்தான் நமது கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மசோதாவின் நிறைவேற்றம், இந்தியாவிலும் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தவையாக மாறுவதை உறுதி செய்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லா கட்டடங்களும், போக்குவரத்துகளும் சிரமமில்லாமல் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த மசோதா.
அத்துடன் முடிந்துவிடவில்லை. எல்லா தனியார் நிறுவனங்களும்கூட மாற்றுத் திறனாளிகள் எந்தவிதத் தடையோ, சிரமமோ இல்லாமல் பயன்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும் என்கிறது மசோதா. அரசின் நிதி உதவி பெறும், அங்கீகாரம் பெறும் பொறியியல், மருத்துவ, நிர்வாக இயல் கல்லூரிகள் உள்ளிட்ட எல்லா கல்வி நிறுவனங்களும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கு உகந்ததாகக் கட்டமைப்பு வசதிகளைச் செய்தாக வேண்டும்.

இந்த மசோதாவில் மிகவும் முக்கியமான அம்சம், அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை தரப்பட்டு வந்த 3 விழுக்காடு ஒதுக்கீடு, 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது. அதுமட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் தரும் வகையிலான இடமாறுதல்களோ, பணி ஒதுக்கீடோ தரப்படுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக நடத்தப்படும் வேறுபாடு காணல் குற்றங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிகோலுகிறது.
முந்தைய "மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995'-க்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் "மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014' பல வகையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிகோலும் புரட்சிகரமான ஒன்று. மாற்றுத் திறனாளிகளுக்கு இடையேயிருந்த ஏற்றதாழ்வுகளை அகற்றி, எந்தவிதத் திறன் குறையுடையவர்களையும் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்த்திருப்பதுதான் இந்தச் சட்டத்தின் தனிச்சிறப்பு. தொழு நோயாளிகள், ஆட்டிஸம் பாதித்தவர்கள், கற்கும் திறன் குறைந்தவர்கள் உள்ளிட்டோர்கூட இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் இதுவரை எதிர்கொண்ட பல தடைகளை இந்தச் சட்டம் உடைத்
தெறிந்துவிடும்.
மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் கல்வி கற்பதுதான். 127 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை வெறும் 78.449 பேர் மட்டுமே. இதற்குக் காரணம், அவர்களது பயன்பாட்டுக்கு வசதியாக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, போதியபுத்தக, நூலக வசதிகள் செய்து தரப்படாதது, நிர்வாகத்தின் ஈடுபாடின்மை, வெறுப்பு ஆகியவையே. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் 3 விழுக்காடு இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை பின்பற்றப்படுவதே இல்லை.
மாற்றுத் திறனாளிகளாக உள்ள ஆண்களைவிட பெண்கள்தான் மிக அதிகமான பாதிப்பையும், ஒவ்வாமையையும் எதிர்கொள்கிறார்கள். மாணவர்களில் வெறும் 22 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். பெண் மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதிலும் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவது இதற்கு முக்கியமான காரணம்.
எல்லா கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவக் குழுவினர் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இருப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் 15 பேருக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது விதி. இதுவும் பின்பற்றப்படுவதில்லை.
இந்தக் குறைகளுக்கு எல்லாம், "மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014' பதிலாக அமையாவிட்டாலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையிலும், அவர்களைப் பற்றிய கண்ணோட்டத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com