பிரச்னையில் பாகிஸ்தான்!

உள்நாட்டிலும் எல்லையிலும் மிகவும் பதற்றமான

உள்நாட்டிலும் எல்லையிலும் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவும் வேளையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக கமர் ஜாவேத் பாஜ்வாவை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுத்திருக்கிறார். புதிய தளபதிகளைத் தேர்ந்தெடுப்பது பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குப் புதிதொன்றுமில்லை. நவாஸ் ஷெரீஃபால் நியமிக்கப்படும் ஆறாவது தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா.
வேறு நாடுகளில் எல்லாம் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஓய்வுபெறுவதும், புதியதொரு தளபதி பதவி ஏற்பதும் வழக்கமான நடைமுறை. ஆனால் பாகிஸ்தானில் அப்படியல்ல. அந்த நாட்டு அரசியலையும் அரசையும் வழிநடத்திச் செல்வதே ராணுவம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் வித்தியாசமானது. அதேபோல, எந்தவொரு தலைமைத் தளபதியும் அவ்வளவு எளிதில் ஓய்வுபெற்று விடுவதும் இல்லை.
தற்போது ஓய்வு பெற இருக்கும் ஜெனரல் ரஹீல் ஷெரீஃபுக்கு முன்னால் பதவி வகித்த பர்வேஸ் கயானி, பதவி நீட்டிப்புப் பெற்றுத் தொடர்ந்தவர். அவருக்கு முன்னால் இருந்த தலைமைத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், ராணுவ சர்வாதிகாரியாகவும் இருந்ததால் பதவி நீட்டிப்பு, பதவி விலகுதல், ஓய்வு பெறுதல் என்கிற பேச்சே எழவில்லை. அயூப் கான், யாஹ்யா கான், ஜெனரல் ஜியா என்று பல ராணுவத் தளபதிகள், முஷாரஃபுக்கு முன்பும் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரியாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் திட்டமிட்டு தனது செல்வாக்கை வளர்த்து வந்த ரஹீல் ஷெரீஃப், ஓய்வு பெறுவது முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காகக்கூட இருக்கக்கூடும். அப்படி ஈடுபடும்போது அதற்குத் துணை நிற்பதற்கு ராணுவத்தை அவர் தயார்படுத்தி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நவம்பர் முதல் வாரத்தில் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போகும் நிலைமை ஏற்பட இருந்தது. நல்லவேளை, பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் நிம்மதியாக மூச்சுவிட முடிந்திருக்கிறது.
"பனாமா பேப்பர்ஸ்' என்று பரவலாக அறியப்படும் தகவல் கசிவுகளின்படி, நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு பெரும் பணம் சேர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதைச் சாக்காக வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தனது தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியின் தொண்டர்களைத் திரட்டி நவம்பர் 2-ஆம் தேதி இஸ்லாமாபாத் முற்றுகைக்கு அறிவிப்புக் கொடுத்திருந்தார்.
இம்ரான் கான் இப்படிச் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. 2014-இல் இதேபோல நாடு தழுவிய அளவில் தொண்டர்களைத் திரட்டி பாகிஸ்தானையே, குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்தார். அப்போது ராணுவம் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சியைப் பின்னுக்குத்தள்ளி தனது தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியை, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீகிற்கு மாற்றாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் உருவாக்கும் இம்ரான் கானின் முயற்சிதான் இது.
"பனாமா தகவல்கள்' கசிவு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. நவாஸ் ஷெரீஃபுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கவே தனது முடிவை மாற்றிக் கொண்டது. ஆனால், பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைப்பதாக நீதிமன்றம் நவம்பர் 1-ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் இம்ரான் கான் தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
பிரதமரின் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைக் கமிஷன் என்பது ஏதோ மிகப்பெரிய ஜனநாயக வெற்றி என்றெல்லாம் கருதிவிட வேண்டாம். ஆனால், அதே நேரத்தில் பிரதமர் ஷெரீஃபுக்கு இது ஒரு பின்னடைவு என்பது மட்டுமல்ல, அவர் மேலும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதிலும் ஐயப்பாடே இல்லை. ஏற்
கெனவே பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் வேளையில் அரசும் பலவீனப்படுவது என்பது, ராணுவத்திற்கும், ராணுவத்தின் துணையுடன் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
உள்நாட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் - இந்திய எல்லையில் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. உரி தாக்குதலையும் அதற்கு எதிர்வினையாக இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதலையும் தொடர்ந்து தினந்தோறும் இரண்டு பக்கத்திலும் சில வீரர்கள் மரணமடைவது வழக்கமாகிவிட்டிருக்கிறது. எல்லையோரப் பகுதிகளிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இன்று பதவி ஏற்க இருக்கிறார். பாகிஸ்தானின் 69 ஆண்டுகால வரலாற்றில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மட்டும்தான் ஜனநாயக முறையில் நடந்திருக்கிறது. ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவே விரும்பாவிட்டாலும், ராணுவம் அரசியல் தலைமைக்கு அடங்கி இருக்குமா என்பது சந்தேகம்தான். அவரேகூட, பதவி
ஓய்வுபெறும் ரஹீல் ஷெரீஃபின் ஆதரவாளராக இருக்கலாம்.
ஜெனரல் ரஹீல் ஷெரீஃபுக்கு அரசியல் ஆசை உண்டு. அவர் அரசியலில் குதிப்பாரா, இல்லை ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவின் துணையோடு ராணுவப் புரட்சிக்கு முயற்சிப்பாரா என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள வெளியில் பேசப்படாத சந்தேகம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com