மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஆண், பெண், மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று வேறுபாடே இல்லாமல் நகர்ப்புற மக்களில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆண், பெண், மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று வேறுபாடே இல்லாமல் நகர்ப்புற மக்களில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபகாலமாக இது இளைஞர்களையும், ஏன், மாணவர்களையும்கூட பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.
தேசிய மனநோய் மற்றும் நரம்பியல் கழகம் என்றொரு அமைப்பு பெங்களூருவில் இயங்குகிறது. அந்த அமைப்பு சமீபத்தில் தேசிய மனநோய் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்தியா முழுவதும் பரவலாகவே மன அழுத்தம் காணப்படுவதாகவும், குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும் அந்தக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம் பரவலாகக் காணப்பட்டாலும், அப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 2% பேர் மிகவும் மோசமான மனநோயாளிகளாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 13.7% பேர் ஏதாவது ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 10.6% பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அந்தக் கணக்கெடுப்பின்படி, மனநோய் பாதிப்பு என்பது கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் அதிகம் பாதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, குறைந்த வருவாய்ப் பிரிவினரையும், அதிக கல்வியறிவு இல்லாதவர்களையும்தான் மிகவும் பாதித்திருக்கிறது.
இப்படி மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் எந்தவித சிகிச்சையையும் எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் இது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். மன அழுத்தத்திலிருந்தும், கவலையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
"எபிலப்சி' என்கிற வலிப்பு நோய் வந்தவர்களைத் தவிர, ஏனைய மனநலம், நரம்புகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முறையான மருத்துவர்களை நாடுவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. 60% பேர் தங்களுக்கு மனநிலை தொடர்பான பிரச்னை இருப்பதேகூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
மன அழுத்தம், அதைத் தொடர்ந்து மனநலம் பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு நமது பாரம்பரிய வாழ்க்கை முறை சிதைந்து, சிறு குடும்ப வாழ்க்கை முறை ஏற்பட்டிருப்பது ஒரு முக்கியமான காரணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்னைகள் இருந்தாலும், பொதுவான பாதுகாப்பு என்பது இருந்தது. சிறு குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்னைகள்கூடத் தீர்வு காணப்படாமல் பெரியதாக மாறி, விவாகரத்து, போதைப் பழக்கம், மன அழுத்தம் என்று விஸ்வரூபம் எடுத்துவருகின்றன.
இந்தியாவில் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வைத்தியம் செய்துகொள்ளப் பலரும் தயங்குகிறார்கள். மனநல மருத்துவரை அணுகினால் உடனே தனக்கு "பைத்தியம்' என்கிற முத்திரை வந்துவிடுமோ என்கிற அனாவசிய அச்சம் காணப்படுகிறது. தங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று தெரிந்தாலும் வெளியில் சொன்னால் கேலி பேசுவார்களோ என்கிற பயமும், தனது கணவர் அல்லது மனைவிக்குப் பிரச்னை என்பதைச் சுட்டிக்காட்டத் தயங்குவதும் பலரும் மனநல மருத்துவரை நாடாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்கள்.
அடித்தட்டு மக்களிடம் மனநோய் குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இன்றும்கூட, மனநலம் பாதிக்கப்படுவதற்கு ஆவிகள், பேய் - பிசாசுகள், பில்லி சூனியம் வைக்கப்படுதல் போன்றவைதான் காரணம் என்கிற நம்பிக்கை தொடர்கிறது. அரைகுறை மருத்துவர்களிடமும், பூசாரிகள், பேய் விரட்டுபவர்களிடமும் வைத்தியம் மேற்கொள்கிறார்கள். மனநோயாளிகளைச் சங்கிலியால் பிணைத்து வைத்து, அவர்களது நோய் மேலும் முற்றுவதற்கு வழிகோலுகிறார்கள்.
இயக்குநர் ருத்ரன் "வெற்றிச் செல்வன்' என்கிற தனது திரைப்படத்தை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில்தான் படம் பிடித்திருக்கிறார். சுமார் 3000 மன நோயாளிகளில், ஏறத்தாழ 500 பேர் முழுக்க குணமடைந்தவர்கள். ஆனால், அவர்களை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் யாருமில்லாமல் அந்த மருத்துவமனையிலேயே அவர்கள் தொடர்வதாகக் கூறுகிறார் இயக்குநர் ருத்ரன். மிகவும் அவலமான சூழலில் மனநோயாளிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு நாம் இதற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும்.
இந்தியாவில் லட்சம் பேருக்கு ஒரு மனநோய் மருத்துவர்தான் இருக்கிறார். மனநோயாளிகளுக்கான செவிலியர்கள், உதவியாளர்
களுக்கான எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. மன அழுத்தத்தை அகற்றும் ஆறுதல் உறைவிட (கவுன்சலிங்) பள்ளி, அலுவலர்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. இதுகுறித்த அச்சமோ, தயக்கமோ தேவையில்லை என்று பரவலாக மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோமா என்றால் அதுவும் கிடையாது. ஐந்து மனநோயாளிகளில் ஒருவர்தான் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாததும், அதிக செலவு ஏற்படுவதும்கூட அதற்கு காரணங்கள்.
இந்திய அரசு இப்போதுதான் இந்தப் பிரச்னை குறித்து விழித்துக் கொண்டு மனநல மருத்துவ வசதிகளைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மனநலக் கொள்கை வகுத்தது. விரைவிலேயே மனநல மருத்துவச் சட்டம் நிறைவேற்ற இருக்கிறது. ஆனால், பொதுவாக சுகாதாரத்திற்கு, குறிப்பாக, மனநோய் சிகிச்சைக்கு அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்து வருகிறது எனும்போது சட்டம் இயற்றி என்ன பயன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com