கருப்பு வெள்ளை நிஜம்!

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மற்றும்

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மற்றும் அசையாச் சொத்துகள் குறித்துத் தாமே முன்வந்து தெரிவிப்பவர்களுக்கு கூடுதல் வரியுடன் மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின்படி 2015-இல் ரூ.4,164 கோடி மட்டுமே வெளிவந்தது. வெளிநாட்டு அரசுகளின் சம்மதமும், வங்கிகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை எல்லாம் கொண்டுவர முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்ட மோடி அரசு, இந்தியாவில் புழங்கும் கருப்புப் பணத்தையாவது ளிக்கொணர்வோம் என்கிற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டதுதான் வருமானம் வெளிப்படுத்துதல் திட்டம் (இன்கம் டிஸ்க்ளோஷர் ஸ்கீம்).
அதுவரை கணக்கில் தெரிவிக்காத, கணக்கு காட்ட முடியாத கருப்புப் பணமோ, வெளிப்படுத்தாத அசையாச் சொத்துக்களோ இருந்தால் தெரிவித்து, அபராதத்துடன் வட்டியுடன் கூடிய வரியைக் கட்டிக் கொள்ள ஏதுவாக வருமான வரி இலாகா கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான நான்கு மாதங்கள், தனது கதவைத் திறந்து வைத்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வருமான வரி இலாகாவால் விளம்பரப்படுத்தப்பட்ட கணக்குக் காட்டாமல் மறைக்கப்பட்ட வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டம் இதுதான். 2016 வருமானம் வெளிப்படுத்தும் திட்டத்தின் கீழ் 64,275 பேர் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்துக்கு வரியும், வட்டியும், அபராதமுமாக ரூ.30,000 கோடி கட்டி, தங்களை யோக்கியர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல, 1997-இல் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது "தாமே முன்வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டம்' அறிவிக்கப்பட்டது. இப்போது 64,275 பேர் என்றால் அப்போது 4.75 லட்சம் பேர், வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்த வருமானத்தை வெளிப்படுத்தினார்கள். அரசுக்கு அப்போது ரூ.9,760 கோடிதான் வரி வருவாயாகக் கிடைத்தது என்றாலும், இன்றைய பணவீக்கத்தின்படி பார்த்தால் அதன் மதிப்பு ரூ.24,663 கோடி. 1997-இல் 4.75 லட்சம் பேர் வெளிப்படுத்திய மறைக்கப்பட்ட வருமானத்தின் அளவு, இன்றைய மதிப்பின்படி ரூ.85,153 கோடி.
அரசு இந்த "வருமானம் வெளிப்படுத்தும் திட்டம்' மிகப்பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டாலும், பெரிய அளவுக்கு விளம்பரப்படுத்தியும் கடந்த முறை தானே முன்வந்து வருமானத்தை வெளிப்படுத்தியதுபோல இந்த முறை பலரும் தங்கள் கருப்புப் பணத்தை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு இரண்டு காரணங்கள். அப்போது, நியாயமாக வரி கட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் உயர்ந்தப்பட்ச 30% வரிதான், வரி ஏய்த்தவர்களுக்கும் விதிக்கப்பட்டது முதலாவது காரணம். அசையாச் சொத்துகளைப் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பில் கணக்கிட அனுமதிக்கப்பட்டது இரண்டாவது காரணம்.
இந்த முறை தவறு இழைத்தவர்களுக்கு அபராதமும், வட்டியும் சேர்த்து 45% வரியாகக் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டதால், தொழிலதிபர்களும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, சொத்தின் மதிப்பு தற்போதைய மதிப்பாகக் கணக்கிடப்படுவதால், இதற்கு 45% வரி கட்டுவது லாபமாக இருக்காது என்று பலரும் தயக்கம் காட்டிவிட்டனர். நியாயமாகவும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் வரி கட்டியவர்களையும், வரி ஏய்ப்பவர்களையும் ஒன்றுபோல நடத்தக் கூடாது என்கிற அரசின் நல்லெண்ணம்தான் இந்தத் திட்டம் 1997-இல் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம்.
1997-ல் ப. சிதம்பரம் கொண்டு வந்த திட்டத்தில் அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும், வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும், தொழிலதிபர்களும், வியாபாரிகளும் பயனடைந்தார்கள். அவர்களது கருப்புப் பணம் அனைத்தையும் 30% வரியைக் கட்டி வெள்ளையாக மாற்றிக் கொண்டனர். இப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் 2016 வருமானம் வெளிப்படுத்தும் திட்டத்தில் பயன்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் மட்டுமே என்பதுதான் உண்மை.
உழைக்காமல் சம்பாதித்த ஊழல் பணத்தில் அரசுக்கு 45% என்ன 60% வரியாகக் கேட்டாலும் கொடுத்து வெள்ளையாக்கிக் கொள்ள யாருக்கும் தயக்கம் இருக்காது. ஆனால், வியாபாரிகளும், தொழிலதிபர்களும் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை உழைத்து சம்பாதித்ததாகத்தான் கருதுவார்கள். அவர்களுக்கு வருமான வரிக்கும் அதிகமாக 15% அபராதமும் வட்டியும் செலுத்த மனம் வராது என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை.
இந்தியாவிலேயே அதிகமாக ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும்தான் வருமானம் வெளிப்படுத்திக் கருப்பு வெள்ளையாக்கப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் தனி ஒருவரே ரூ.10,000 கோடிக்கு வரிகட்டி வெள்ளையாக்கி இருப்பது தெரியவந்திருக்கிறது. நாடு தழுவிய அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஊழல் பணத்தில் கணிசமான அளவு வெளிவந்திருக்கிறது என்கிற அளவில் வேண்டுமானால் நாம் திருப்தி அடையலாம்.
ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் புரளுவதாக 2012-இல் தயாரிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. இதை வெளிக்கொணர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுவதுபோல, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளே இல்லாமல் ஆக்குவது. அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிப் பரிமாற்றமாக்குவது என்கிற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கருப்புப் பணத்துக்கு கடிவாளம் போட்டு விடலாம்.
ஆனால், இதற்கு எந்த அரசும் முன்வராது. அதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இதுதான் கருப்பு வெள்ளை நிஜம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com