தேதியை மாற்றுங்கள்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகார்களில் உண்மை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகார்களில் உண்மை இருப்பதாகக் கூறி தேர்தல் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளுக்கான தேர்தலும், சட்டப்பேரவை உறுப்பினரின் மரணத்தைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான தேதி (அக்டோபர் 17) முதலாகவே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

இத்தனை காலம் பொறுத்திருந்த தேர்தல் ஆணையம், குறைந்தபட்சம் தீபாவளி முடியும் வரை காத்திருக்கக்கூடாதா என்பதே தஞ்சை, கரூர், மதுரை மாவட்ட வணிகர்களிடம் ஏற்பட்டுள்ள ஆதங்கம். அலுவலர்களிடமும்கூட இதே எண்ணம்தான், ஆனால் அவர்கள் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை.

அக்டோபர் 29-ஆம் தேதி தீபாவளி. அரவக்குறிச்சி தொகுதி அமைந்துள்ள கரூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர், மதுரை மாவட்டம் மூன்றிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, வாகனச் சோதனைகள், உரிய ஆவணங்கள் இல்லாத ரொக்கம் பறிமுதல் என எல்லா வகையிலும் தேர்தல் அலுவலர்களின் கெடுபிடி ஏற்பட்டுவிடும். தீபாவளி நேரத்தில் இது வணிகர்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும் என்பதே அவர்களது கவலை.

நியாயமான வர்த்தக நடைமுறை நிலவினால் ஏன் அச்சப்பட வேண்டும் என்ற கேள்வி எழுப்பலாம். இருப்பினும் சில வர்த்தகங்
களில் உண்மையான கொள்முதல் விலை காட்டப்படுவதில்லை. குறிப்பாக, பட்டாசுத் தொழிலில். தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் கொண்டுவருவதில் மட்டுமின்றி, ஜவுளிகளைக் கொண்டுவருதல், தானியங்களைக் கொண்டுவருதல் ஆகியவற்றிலும்கூட வணிகர்கள் பெரும் இடையூறுகளைச் சந்திக்க நேரும். உண்மையான ரசீதுகளுடன் சரக்குகள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் விளக்கம் கேட்டு ஓரிரு நாள் லாரியை நிறுத்தி வைத்தாலும், வியாபாரம் அடிபட்டுப் போகும்.

கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அது தொழில்நகரம். சாயப்பட்டறை, கொசுவலை உற்பத்தி, போர்வைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நகரம். தீபாவளி நேரத்தில் பல வகைகளிலும், போனஸ், ஊதியம் என பணம் புரளும் நேரம். இந்த நேரத்தில் தேர்தல் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்வதும், அதை கொண்டு செல்வோர் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தி பணத்தை மீட்பதும் தேவையில்லாத இடையூறுகளையே ஏற்படுத்தும்.
இந்த மாவட்டங்களில் உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் ஒரு லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் செல்லும். ஆனால் தீபாவளி நேரத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை எடுக்காமல் எவ்வாறு போனஸ் அளிக்க முடியும்? பண நடமாட்டம் அதிகமாக இருக்கும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் போனஸை, நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை இன்னும் அமலுக்கு வரவில்லையே!

எல்லாவற்றுக்கும் மேலாக, பணப்பட்டுவாடா என்ற காரணத்தைக் காட்டி தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதியில் தீபாவளி நேரத்தில் தேர்தலை அறிவிப்பது, எந்த நோக்கத்துக்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு எதிரானதாக அமையவே வாய்ப்பு அதிகம். எல்லா பணப்பட்டுவாடாவும், போனஸ், அல்லது தீபாவளி இனாம் என்று சொல்லப்பட்டால், அத்தகைய பணப்பட்டு வாடாவை தேர்தல் ஆணையம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? யாரைத் தண்டிக்க முடியும்? எது போனஸ், எது தீபாவளி இனாம், எது பணப்பட்டுவாடா என்பதைப் பிரித்தறிவது எப்படி?

தீபாவளி நேரத்தில் சீட்டுப் பணத்தை கொடுப்பது மற்றும் சீட்டு கட்டியவர்களுக்கு பரிசுப்பொருள் அளிப்பது ஆகியன பதிவுபெற்ற வர்த்தகமாக இல்லாமல் பழக்கப்பட்ட நடைமுறையாக இருக்கிறது. இந்த நேரத்தில் சீட்டுக் கட்டியவர்கள் பெறும் பரிசுப் பொருள்களை, தேர்தலுக்கான பரிசுப்பொருளாக கருதுவார்களா? அல்லது தேர்தல் பரிசை சீட்டுப்பரிசு என்று தீபாவளி நேரத்தில் விநியோகம் செய்தால் அதை எப்படி அறிவது?

மேலும், இந்த இரு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடைபெற்றது என்பதை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்ததால் தேர்தலைத் தள்ளி வைத்த தேர்தல் ஆணையம், இத்தனை மாதங்களாக இந்தப் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட எத்தனை பேர் மீது வழக்கு தொடுத்தது? எத்தனை வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது?

வேட்பாளர்களை மாற்றி, புகார் உண்மைதான் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ள எந்த அரசியல்கட்சியும் முனையாது. ஆகவே அதே வேட்பாளர்கள்தான் களத்தில் இருப்பார்கள். யார் மீதும் வழக்கோ, வேட்பாளர் தகுதிநீக்கமோ இல்லையென்றால் இத்தனைக் காலம் தேர்தலை தள்ளி வைத்ததன் நோக்கம் குறைப்பட்டுவிடுகிறதே!

நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதலாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்விதமாக தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால், பல்வேறு பிரச்னைகளைத் தவிர்த்திருக்க முடியும். இரு மாவட்டங்களிலும் தீபாவளி நேரத்து வர்த்தகம் பாதிக்கப்படுவதாக புகார்கள் இருக்காது. பணப்பட்டுவாடா அனைத்தும் தீபாவளி இனாமாக மாறும் வாய்ப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும். கட்சிக்காரர்களும், அலுவலர்களும் தீபாவளியைக் கொண்டாடி முடித்திருப்பார்கள்.

தில்லியில் இருந்து முடிவுகள் வருவதால் ஏற்பட்ட குளறுபடி என்று இதனைக் கூறிவிட முடியவில்லை. இந்தியா முழுமையிலும்தானே தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தலை தீபாவளி முடியும்வரை தள்ளிவைக்கக் கோரினால் தேர்தல் ஆணையம் செவிசாய்க்கக்கூடும். ஆனால், அவர்கள் செய்ய மாட்டார்கள்!


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com