மாவோயிசத்திற்கு தீர்வு!

ஆந்திர, ஒடிஸா மாநிலங்களின் எல்லையில், மல்கான்கிரி வனப்பகுதியில்

ஆந்திர, ஒடிஸா மாநிலங்களின் எல்லையில், மல்கான்கிரி வனப்பகுதியில் இரு மாநில போலீஸார் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடைபெற்ற மோதலில், 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இது ஒரு அதிரடி நடவடிக்கை. இதை மாவோயிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை என்பதை பலி எண்ணிக்கையிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தத் தாக்குதல், ஒரு என்கவுன்ட்டர் போல நடத்தப்பட்டதாகவும், நீதிவிசாரணை தேவை என்றும், இது ஆந்திர அரசு நடத்திய படுகொலை என்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இரு மாநில அரசுகளும் இதை போலீஸாரின் தேடுதல் வேட்டை என்றும், அப்போது நடைபெற்ற மோதலாகவுமே சொல்கின்றன. போலீஸாரை இரு மாநில அரசுகளும் பாராட்டியிருப்பதைப் பார்க்கும்போது, நீதிவிசாரணைக்கு வாய்ப்பில்லை.
2010-ஆம் ஆண்டில், தண்டேவாடா வனப்பகுதியில் 79 போலீஸார் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்டதற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதே மல்கான்கிரி மாவட்டத்தில் 2013-ஆம் ஆண்டில் நடந்த மோதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல இடங்களில் மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் வடபகுதியில் தொடங்கி, சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரை பரவலாகவும், வலுப்பெற்றும் இருந்த மாவோயிஸ்டுகள், கடந்த 20 ஆண்டுகளில் மெல்ல மெல்ல சிதைந்துகொண்டே வந்துள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களால் தனித்தனிக் குழுக்களாக பிரிந்ததும், பல்வேறு பெயர்களில் பல குழுக்கள் வெளிப்படையான அரசியல் அமைப்புகளாக மாறியதும் இதற்கு முக்கியமான காரணங்கள்.
இன்னொரு காரணம், மலைவாழ் மக்களின் ஆதரவு மாவோயிஸ்டுகளுக்கு கிடைப்பது குறைந்துவருகிறது. மாவோயிஸ்டுகள் தோன்றக் காரணமே, மலைவாழ் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை அரசும், அரசு சார்ந்த தனியார் அமைப்புகளும் சுரண்டுகின்றன என்ற குற்றச்சாட்டை எழுப்பியதால்தான். அதனால் மலை வாழ் பகுதிகளுக்குள் அரசு நிறுவனங்களை மாவோயிஸ்டுகள் உள்ளே நுழையவே விடவில்லை. தொலைபேசி கோபுரங்களை சிதைப்பது, அரசு அதிகாரிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது, மின்சாரம் வராதபடி பார்த்துக்கொள்வது என எந்தவித வளர்ச்சிப் பணியையும் அரசு செய்துவிடாதபடி மாவோயிஸ்டுகள் பார்த்துக் கொண்டனர். ஆனால் அதுவே காலப்போக்கில் அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.
உலகம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைப் பெற்று வளம்பெறும்போது மலைவாசிகளான தங்களை மட்டும் இவர்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள், அரசின் நலத் திட்டங்கள், மேம்பாட்டுப்பணிகள் தங்களுக்கு வராமல் தடுக்கிறார்கள் என்ற கோபம், மலைவாசிகளின் ஆதரவை இழக்கச் செய்தது. மாவோயிஸ்டுகளால் இளைஞர்கள் கவரப்பட்டதுபோய், தங்களது வளர்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்கிற கோபம் அவர்களுக்கு ஏற்படத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக, நிலக்கரி மற்றும் கனிம வளங்களை அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இந்த பகுதியிலிருந்து பெருலாபத்துடன் கொண்டு சென்ற நிலைமை இன்றில்லை. இப்போது பழங்குடியினர் வாழ்வாதாரப் பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமம் மற்றும் நிலக்கரி போன்ற தாதுப்பொருள் அனைத்துக்கும் செஸ் வரி விதிக்கப்பட்டு, அந்த வரிப்பணம் முழுவதும் அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டுக்காக செலவிடும் சூழல் உருவாகியிருக்கிறது.
அரசின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பழங்குடியினர் மாவோயிஸ்டுகளுக்கு காட்டிய ஆதரவை குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். 2011-இல் மல்கான்கிரி ஆட்சியர் விநீல் கிருஷ்ணா கடத்தப்பட்டபோது மலைவாழ் மக்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று பெருங்குரல் கொடுக்கக் காரணம், அவர்களது வீடுகளுக்கு பல இடையூறுகளையும் மீறி மின்சாரம் வழங்கிய நேர்மையான அதிகாரி அவர் என்பதால்தான்.
இப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் என்பது தில்லியில் சில அறிவுஜீவிகளால் பேசப்படும் விவகாரமாக இருந்தாலும், இதற்கான களப்பணியாளர்களாக செயல்பட பழங்குடியினர் தயாராக இல்லை. இதற்கு மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
மாவோயிஸ்ட் இயக்கங்கள் பல்வேறு பெயர்களில் வெளிப்படையான அரசியலில், போராட்டங்களில் களம் இறங்கியிருப்பதை தமிழ்நாட்டிலும் காண முடியும். இது ஆரோக்கியமான போக்கு. இவர்களது முழக்கங்களும், சுவர் விளம்பரங்களும் சற்று வரம்பு கடந்த வாசகங்களைக் கொண்டிருந்தாலும் இவர்கள் ஜனநாயக அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது. இவர்கள் வெளிப்படையாக இணையதளம், வலைப்பூக்களுடன் சமூக, அரசியல், பொருளாதார குறைபாடுகளை மின்னூட்டம் பெறச் செய்வதும், சமூக வலைதளங்களில் பல பெயர்களில் இயங்குவதும்கூட இவர்களுக்கான வெளிப்பாட்டு வழிமுறைகளாகவே இருக்கின்றன. எதிர்க்கருத்தை காரசாரமாக முன்வைப்பதும், சில நியாயங்களை கோபமாக வெளிப்படுத்துவதும் தவறில்லை. வன்முறையைத் தவிர எந்த வகையிலும் அவர்கள் கருத்தை முன்வைக்கட்டும். அது மாவோயிஸ்ட் தீவிரவாதம் முனைமழுங்க வழிவகுக்கும்.
எந்தவொரு சமுதாயத்திலும் பாதிக்கப்பட்டவர்களும், தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அறிவுபூர்வமாக இல்லாமல் உணர்வுபூர்வமாக ஆவேசம் கொள்ளும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களைப் பேச விடுங்கள். அதுதான் இன்று மாவோயிச தீவிரவாதத்துக்கு மாற்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com