தனிமைப்படுத்துவதே தீர்வு!

நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃப் இரண்டு பேருமே பிரதமர்கள்தான். ஆனால், இருவரும் ஆற்றிய உரைகள், இந்தியா...

நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃப் இரண்டு பேருமே பிரதமர்கள்தான். ஆனால், இருவரும் ஆற்றிய உரைகள், இந்தியா, பாகிஸ்தான் என்கிற இரண்டு நாடுகளின் அணுகுமுறை எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை வெளிச்சம் போடுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாத நடவடிக்கைகளை விமர்சிக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபோ ஆத்திரத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பயங்கரவாதத்திற்குத் துணைபோக முற்பட்டிருக்கிறார்.
கோழிக்கோடு பா.ஜ.க. தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பரப்புவதால் சர்வதேச அரங்கில் அந் நாடு தனிமைப்படுத்தப்பட வேண்டும், இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றெல்லாம் பேசினாரே தவிர, எந்தவொரு இடத்திலும் வரம்பு மீறவே இல்லை.
இந்தியாவுடன் நடப்பது ஆயிரம் ஆண்டு யுத்தம் என்று பாகிஸ்தானில் சிலர் பேசியதற்குக்கூட "நாங்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதற்கு முன்னால் நடந்த போர்களில் நாங்கள்தான் வெற்றியும் பெற்றிருக்கிறோம். போர்க்களத்தில் எதிர்கொள்வதைவிட வறுமை, வேலைவாய்ப்பின்மை, எழுத்தறிவின்மை ஆகியவற்றிற்கு எதிராக நாம் போர் நடத்தி எந்த நாடு வெற்றி பெறுகிறது என்று பார்த்து விடுவோம்' என்று ஒருபுறம் சவாலையும் ஏற்றுக்கொண்டு, இன்னொரு புறம் பாகிஸ்தானுக்குப் புதிய சவாலையும் விடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்து நிற்கிறார்.
இதற்கு நேர்மாறாக, ஐ.நா. பொதுச் சபையின் 71-ஆவது கூட்டத்தில் கடந்த புதன்கிழமை பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது உரையின் பெரும்பகுதியைக் காஷ்மீர் பிரச்னை குறித்து மட்டுமே பேசியதில் வியப்படைய எதுவுமில்லை. எதிர்பார்த்தது போலவே, காஷ்மீரில் இந்தியா அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறது, காஷ்மீரத்தின் சுயநிர்ணயத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுடன் நின்றுவிடாமல், கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியை ஏதோ சுதந்திரப் போராளி போன்று வர்ணிக்கவும் செய்தார்.
காஷ்மீரிகளுக்காகப் பேசவோ குரல் கொடுக்கவோ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அந்த மக்கள் உரிமை எதுவும் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் சார்பில் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் பிரதமருக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வியும் எழுகிறது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடுகிறார். காஷ்மீரில் சிலர் எழுப்புகின்ற "ஆசாதி' என்கிற சுதந்திரத்துக்கான கோரிக்கையின் அடிப்படையே, இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள் என்பதே.
"ஆசாதி'யை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது இருக்கட்டும். ஐ.நா. சபையில் காஷ்மீரத்துக்கு "ஆசாதி' தரப்பட வேண்டும் என்று உரத்துக் குரலெழுப்பும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரப் பகுதிக்கு ஆசாதியை அறிவிப்பதுதானே? அதற்கு ஏன் அவர் தயங்க வேண்டும்? இந்தியா வசம் இருக்கும் காஷ்மீரத்தை பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்வதுதான் அவர்கள் திட்டமே தவிர, காஷ்மீரத்தைத் தனி நாடாக்கி அதற்கு சுதந்திரம் அளிப்பதல்ல பாகிஸ்தானின் நோக்கம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர மக்கள் ஆசாதிக்காக நடத்தி வரும் அமைதிப் போராட்டம் குறித்துக் கண்ணீர் மல்காத குறையாக ஐ.நா. சபையில் முறையிட்ட பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அங்கிருக்கும் அமைதிப் போராளிகளுக்கு எப்படி கல்லும், பெட்ரோல் குண்டுகளும் கிடைக்கின்றன என்பது குறித்து ஏன் மௌனம் சாதிக்கிறார்? கல்லெறிவதும், பெட்ரோல் குண்டுகளை வீசுவதும் பாகிஸ்தானின் பார்வையில் அமைதிப் போராட்டம், அப்படித்தானே?
கடந்த புதன்கிழமை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஐ.நா. சபையில் ஆற்றிய உரைதான் இதுநாள் வரை பாகிஸ்தானியத் தலைவர் ஒருவர் பேசியிருக்கும் மிக மோசமான, வெளிப்படையாக பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் உரை என்று கூடச் சொல்லலாம். இந்த உரையை அவருக்குத் தயாரித்துக் கொடுத்ததே பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீஃப்தான் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுடனான பகையை அதிகப்படுத்துவது என்பது பாகிஸ்தானிய ராணுவம் தனது முக்கியத்துவத்தை நிலைநிறுத்தத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் உத்தி. இதன் மூலம் பாகிஸ்தானை ராணுவத்தின் தயவில் வைத்திருப்பதுடன், அரசுக்கும் பயங்கரவாத ஜிகாதிகளுக்கும் இடையே உறவை ஏற்படுத்தவும் ராணுவம் பயன்படுத்துகிறது. இந்தியா தனது அணுகுமுறையில் இந்த நிலைமையை ஏற்றுக்கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை.
இஸ்லாமாபாதின் ஐ.நா. பிரதிநிதி மலீஹா லோதி, தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார். வட கொரியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை அளிக்கவும் பாகிஸ்தான் தயங்கவில்லை. பிரதமர் மோடி கூறுவதுபோல, ஒன்று பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்படுகிறார்கள் அல்லது பாகிஸ்தானில் தஞ்சமடைகிறார்கள்.
சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத் தீவுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளும் உரியில் நடந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படாவிட்டால், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் தொடரும்; உலகம் மிரளும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com