வளர்ச்சியா.. வன்முறையா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் வெடித்த வன்முறை சற்று அடங்கியதுபோலக் காணப்பட்டு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் வெடித்த வன்முறை சற்று அடங்கியதுபோலக் காணப்பட்டு, இப்போது பழையபடி தீவிரமடைந்திருக்கிறது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரத்தில் இருக்கும் பயங்கரவாதிகளின் தளங்களின்மீது நடத்திய துல்லியத் தாக்குதலும், ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதும் பயங்கரவாதிகளை பலவீனப்படுத்தியதாக நாம் நினைத்தது உண்மையல்ல என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் மீதான கல்வீச்சுத் தாக்குதல் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் உண்மையான காரணம் கடுமையான குளிர்காலம் தானே தவிர, அரசின் நடவடிக்கைகள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன தற்போது மீண்டும் பரவலாக வெடித்திருக்கும் போராட்டங்களும், வன்முறைகளும்.
கடந்த வாரம் சமூக வலைதளங்களில் இரண்டு விடியோ காட்சிகள் விஷக் காய்ச்சலாகப் பரவின. முதலாவது விடியோ பதிவில், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களால் தாக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அவர்களைத் திருப்பித் தாக்காமல், வேதனையைப் பொறுமையாக சகித்துக் கொண்டிருப்பதாய் படம் பிடித்தது. இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களின் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த விடியோவை எல்லா குழுவினரும் பகிர்ந்து கொண்டனர்.
இன்னொரு விடியோ பதிவு, முதல் பதிவுக்கு நேரெதிரானது. ராணுவ ஜீப் ஒன்றின் முன்பகுதியில், காஷ்மீர இளைஞர் ஒருவர் கட்டப்பட்டிருக்கிறார். ராணுவ வாகனங்களின் மீது சிறுவர்கள் கல்லெறிவதிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்புப் படையினர் கையாளும் நடவடிக்கை இது என்று, இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சிப்பவர்களால் பரப்பப்பட்ட விடியோ பதிவு இது. ராணுவத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இந்த விடியோ பதிவும் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர் என்பதற்கும், மனிதாபிமானமே இல்லாமல் செயல்படுகிறார்கள் பாதுகாப்புப் படையினர் என்பதற்கும் இடையில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது உண்மைநிலை.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது. ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது, தொகுதி முழுவதுமே வன்முறைக் களமாகக் காட்சி அளித்தது. பொதுமக்கள் எட்டு பேர், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 170 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கல்லடிபட்டு காயம்பட்ட பாதுகாப்புப் படை
யினரும் அடக்கம்.
இதன் விளைவால் பொதுமக்களில் பலரும் வாக்களிக்க முன்வரவில்லை. தாக்குதலுக்கு பயந்து பல வாக்குச்சாவடிகள் மூடப்பட்டன. மொத்த வாக்குப்பதிவு வெறும் 7 சதவீதம் மட்டும்தான். ஏப்ரல் 13-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதைவிடக் குறைவு. வெறும் 2 சதவீதம் மட்டும்தான்!
இடைத்தேர்தல்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதால், பொதுமக்களுக்கும் வாக்களிப்பதில் அதிக ஆர்வமில்லை. அவர்கள், தேர்தலை புறக்கணித்துவிட அறிவித்திருந்த தீவிரவாதிகளுக்கு பயந்தார்களா, இல்லை வெளியில் சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று கருதினார்களா என்பது தெரியவில்லை. பலரும் துணிவுடன் வந்து வாக்களிக்க முற்படவில்லை. அதனால் 7.4 சதவீத வாக்குப்பதிவுடன் நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வெறும் கேலிக் கூத்தாக அமைந்தது.
இடைத்தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு பிரதமர் ஜம்மு - காஷ்மீர் சென்றிருந்தார். ஜம்முவில் உள்ள உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது காஷ்மீர இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு சுற்றுலாவை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். ரத்தம் சிந்தும் தீவிரவாத விளையாட்டால் யாரும் பயனடையவில்லை என்பதை எடுத்துரைத்தார்.
காஷ்மீரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர போதுமான நிதியுதவி, வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு என்று எல்லாவித உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி கூறினார். கணினியை பயன்படுத்த வேண்டிய காஷ்மீரத்து இளைஞர்களின் கரங்கள் கற்களை ஏந்தும் அவலம் குறித்து வேதனை தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரத்தில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கும் சினானி - நஷ்ரி நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதை ஒரு தொழில்நுட்ப அதிசயம். 9.2 கி.மீ. நீளமுள்ள இந்த சாலைதான் இந்தியாவிலேயே நீளமான சுரங்கச்சாலை. அதனுடைய சிறப்பு 9.2 கி.மீ. நீளம் என்பதில் இல்லை, அதை அமைத்திருக்கும் விதத்தில் இருக்கிறது.
'கட்டிங் எட்ஜ்' தொழில்நுட்பத்தைக் கையாண்டு, மிகவும் ஆபத்தான பனிபடர்ந்த மலையைக் குடைந்து இந்தச் சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்திற்குள்ளே உள்ள காற்றோட்டம், உள்ளே ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனே பயணிகளை வெளியேற்றும் வசதி, வாகனங்கள் பழுதடைந்தால் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையுமே வெளியிலிருந்து கண்காணித்து செயல்படுத்தும் முறையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல, எல்லா அம்சங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதைகள் உலகிலேயே ஆறு மட்டுமே.
சினானி - நஷ்ரி சுரங்கப்பாதை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்முவுக்கும், இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் பயணம் செய்யும் சிரமங்களைக் குறைத்து விடுகிறது. ஸ்ரீநகருக்கும் ஜம்முவுக்கும் இடையேயான தூரத்தை 30 கி.மீட்டரும், பயண நேரத்தை 2 மணி நேரமும் குறைக்கிறது என்பது மட்டுமல்ல, குளிர்காலத்தில் நெடுஞ்சாலைகள் பனிச்சரிவுகளால் மூடப்படுவதும், வாகன நெரிசல்கள் ஏற்படுவதும் இனிமேல் இருக்காது. இதுபோல இன்னும் சில சுரங்கப்பாதைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தீவிரவாதத்தில் இறங்கி இருக்கும் இளைஞர்களுக்குப் பிரதமரின் அறைகூவலும், அறிவுரையும் ஒருபுறம். மத்திய அரசு செயல்படுத்தும் வளர்ச்சிப் பணிகள் இன்னொருபுறம். இவையெல்லாம் காஷ்மீரத்து இளைஞர்களைத் தீவிரவாதத்தைக் கைவிட்டு வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லுமா என்கிற கேள்விக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் 7.4 சதவீத வாக்குப்பதிவின் மூலம் விடையளித்திருக்கிறது.
பாகிஸ்தானையும் ஒரு தரப்பாக அழைத்து பேச்சுவார்த்தை மூலம் வன்முறைக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்கிற ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், 7.4 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்ற ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான பரூக் அப்துல்லா சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரத்தில், காஷ்மீரத்துப் பிரச்னைக்கு மத்திய அரசு அரசியல் தீர்வு காணாமல், முன்னெடுத்துச் செல்லும் எந்த வளர்ச்சிப் பணிகளும், அமைதிக்கான முயற்சிகளும் பயனளிக்காது! வளர்ச்சியா, வன்முறையா, அரசியல் தீர்வா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com