வெறுப்பை வளர்க்கிறார்கள்!

மாநில மொழிகளைப் புறந்தள்ளி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவும், அரசின் செயல்பாடுகள் முழுமையாக இந்தியில் நடத்தப்படுவதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்திருப்பது,

மாநில மொழிகளைப் புறந்தள்ளி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவும், அரசின் செயல்பாடுகள் முழுமையாக இந்தியில் நடத்தப்படுவதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, வலியப்போய் பிரச்னையை விலைக்கு வாங்கும் செயல்பாடு. 2011-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசு பதவியில் இருந்தபோது நாடாளுமன்றக் குழு ஒன்று அளித்த பரிந்துரைகள், நடைமுறை சாத்தியம் இல்லை என்பதாலும், இந்தி பேசாத மாநிலங்களில் அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதாலும், கிடப்பில் போடப்பட்டன. இப்போது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அந்தப் பரிந்துரைகளைத் தூசுதட்டி எடுத்து நடைமுறைப்படுத்த முற்பட்டிருக்கிறது.
நமது சென்னை அளவுகூட இல்லாத சிறிய நாடு சிங்கப்பூர். அந்த நாட்டில் ஆங்கிலம், மலாய், மாண்டரின் என்று அழைக்கப்படும் சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. இலங்கையில் சிங்களமும், தமிழும், ஆங்கிலமும் ஆட்சி மொழிகள். பெல்ஜியம், ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடு. இந்த நாடு டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டுள்ளது. அதேபோல, 80 லட்சம் பேரை மட்டுமே மக்கள்தொகையைக் கொண்ட ஸ்விட்சர்லாந்தில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ரொமானிஷ் என நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அப்படி இருக்கும்போது, ஏறத்தாழ 120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் எப்படி சரியாகும்?
இந்தியா போன்ற பல்வேறு மொழிகளும், கலாசாரங்களும் உள்ள ஒரு தேசத்தை ஒரே மொழியின் பெயரால் இணைப்பது என்பது சாத்தியமே இல்லை என்பதை பா.ஜ.க. தலைமையும், நரேந்திர மோடி அரசும் உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
மத்திய கல்வி வாரியப் பள்ளிகளிலும் (சி.பி.எஸ்.இ.), கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்கிற 2011 நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்கிறது நரேந்திர மோடி அரசு. அடுத்த கல்வி ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது.
குடியரசுத் தலைவரின் மார்ச் 31-ஆம் தேதி ஆணைப்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பத்தாம் வகுப்பு வரை மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும்படி கேட்டுக் கொள்கிறது. அத்தனை மத்திய, மாநில அரசுப் பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு பதிலாக, மாநில மொழிகள் அழிந்துபோகும் விதத்தில் இந்தியைக் கட்டாயமாக்குவது என்கிற முடிவு மிகவும் கண்டனத்துக்குரியது.
உலகில் இன்று பயன்பாட்டில் இருக்கும் 7,105 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷியன், ஸ்பானீஷ், இந்தி உள்ளிட்ட வெறும் 13 மொழிகள் மட்டும்தான் 10 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளாக இருக்கின்றன. உலக அளவில் அடுத்த 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாக யுனெஸ்கோ பத்து ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகள் பலவும்கூட இந்தப் பட்டியலில் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் ஏறத்தாழ 220 மொழிகள் வழக்கொழிந்து விட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
தமிழ் மொழிதான் வேண்டும் என்பதோ, இந்தியோ ஆங்கிலமோ கூடாது என்பதோ அல்ல நமது வாதம். எல்லா குழந்தைகளும் குறைந்தபட்சம் தொடக்கக் கல்வியை அவரவர் தாய்மொழியில்தான் கற்க வேண்டும் என்பதும், உயர்நிலைப் பள்ளி வரை தாய்மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்பதும்தான் அந்தக் குழந்தைகள் பண்பாளர்களாகவும், கலாசாரப் பற்றுள்ளவர்களாகவும், இன உணர்வுடனும் இருப்பதை உறுதி செய்யும்.
தமிழில் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்ட அறநூல்கள் இருப்பதுபோல, இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்களும் பஞ்சதந்திரம் உள்ளிட்ட கதைகளும் இருக்கின்றன. குழந்தைகள் தாய்மொழியில் தொடக்கக் கல்வி கற்கும்போது, நல்ல பல கருத்துகளும் நீதிநெறிகளும் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விடுகின்றன. ஆங்கிலம், இந்தி என்று பிற மொழிகளில் கல்வி கற்கும்போது இதற்கான வாய்ப்பு இருப்பதில்லை.
தொடக்கக் கல்வி தாய்மொழியிலும், இடைநிலைக் கல்வியில் தாய்மொழியும் ஆங்கிலமும் கட்டாயமாகவும், உயர்நிலைக் கல்வியில் அதனுடன் சேர்த்து இந்தியோ அல்லது அந்த மாணவன் விரும்பும் வெறேந்த மொழியோ கற்றுத்தேறும் நிலைமை தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏற்பட வேண்டும். எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், குழந்தைகள் தாய்மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்தி கூடாதென்பதல்ல நமது வாதம். தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதும், ஆங்கிலத்துடன் மாணவர்கள் விரும்பும் வேறு ஏதாவது ஒரு மொழியையும் கற்றுத் தேறும் வகையிலான மும்மொழிக் கொள்கைதான் வருங்கால இந்தியாவுக்கு உகந்தது என்பதும்தான் நமது கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com