சுக்மா: யார் குற்றவாளி?

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள பர்கவால் என்கிற

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள பர்கவால் என்கிற இடத்தில் முன்னூறு நானூறு நக்சலைட்டுகளால் மத்திய சிறப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. 2000-இல் சத்தீஸ்கர் மாநிலம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை 1,100க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரை நாம் பலி கொடுத்திருக்கிறோம். சுக்மா பகுதியில் மட்டும் ஏறத்தாழ 550 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சத்தீஸ்கரில் இதே பஸ்தர் கோட்டத்தில் உள்ள அண்டை மாவட்டமான தண்டேவாடாவில் 2010 ஏப்ரல் மாதம் 76 காவல் படை வீரர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். அப்போது அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதையும், 'இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது' என்று பேட்டி கொடுத்ததையும், இப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செய்திருக்கிறார். உள்துறை அமைச்சர் மாறி இருக்கிறாரே தவிர, தாக்குதல் முறையோ, நிலைமையோ மாறவில்லை.
கடந்த ஏழு ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்கும் கொடூரமான தாக்குதல் இதுதான். டோர்னபால் - ஜகர்குண்டா பாதையில் நடைபெற்று வந்த சாலை போடும் பணிக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த மத்திய சிறப்புக் காவல் படையினர் உணவு அருந்தும் நேரத்தில் பாதுகாப்பில் சற்று மெத்தனம் ஏற்பட்டதை பயன்படுத்திக் கொண்டு மாவோயிஸ்டுகள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். சுமார் 27 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
இப்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில்தான் கடந்த மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு 12 காவல் படையினர் பலியாகி இருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்கூட, பாதுகாப்புப் படையினர் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளிடம், கடந்த மாதம் எடுத்துச் சென்ற துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர் என்று அழைக்கப்படும் ரகத் துப்பாக்கிகள், அன்டர் தி பாரல் ராக்கெட் லாஞ்ச்சர்கள் உள்ளிட்டவை காணப்பட்டதாகத் தெரிகிறது. இவை எல்லாமே, காவல் துறையினரிடமிருந்தும், சிறப்புக் காவல் படையினரிடமிருந்தும் தாக்குதல்களின் மூலம் கைப்பற்றப்பட்டவை. ஏறத்தாழ மூன்று மணி நேரம் மாவோயிஸ்டுகளுக்கும், மத்திய சிறப்புக் காவல் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது என்றால், எந்த அளவுக்குத் தயார் நிலையில் மாவோயிட்டுகள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
டோர்னபால் - ஜகர்குண்டா சாலை போடப்படுமானால், அது சுக்மா பகுதியிலுள்ள மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளுக்கு சத்தீஸ்கரின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும். அந்தப் பின்தங்கிய பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கின்றன. நிர்வாகத்தின் அடையாளமான பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை அமைக்கப்படுவதையும், ஏனைய பகுதிகளுடனான போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்தும் பாலங்கள், சாலைகள் அமைக்கப்படுவதையும் தகர்ப்பது, தடுப்பது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் திட்டமாக இருந்து வருகிறது. அதனால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது வியப்பை ஏற்படுத்தவில்லை.
மாவோயிஸ்டுகள் எந்த நேரத்திலும் சாலைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டிய கடமை மாநில காவல் துறைக்கும் புலனாய்வுத் துறைக்கும் உண்டு. ஆனால், மாநில காவல் துறை மாவோயிஸ்டுகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் செயல்படுவதையே நிறுத்திவிட்டு, அந்த வேலையை மத்திய சிறப்புக் காவல் படையிடம் ஒப்படைத்து விட்டிருக்கிறது.
அதைவிட வேடிக்கை, நிரப்பப்படாமல் இருந்த மத்திய சிறப்புக் காவல் படையின் தலைமை இயக்குநர் (டைரக்டர் ஜெனரல்) பதவிக்கு நேற்றுதான் ராஜீவ்ராய் பட்நாகர் என்பவர் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாவோயிஸ்டுகள் இந்திய அரசுடன் மோதி வெற்றி பெறவும் முடியாது, எதையும் சாதித்து விடவும் முடியாது. மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி என்கிற பெயரில் நமது வனங்களிலிருந்து ஆதிவாசிகளை அகற்றி, சுரங்க நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அந்தப் பகுதிகளில் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தகவல் தொடர்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்டால் மாவோயிஸ்டுகள் காணாமல் போய்விடுவார்கள். மாவோயிஸ்டுகளின் பலமெல்லாம் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் மாவோயிஸ்டுகளுக்குத் துணையிருக்கும் ஆதிவாசிகளும், பொதுமக்களும்தான்.
எல்லாம் தெரிந்திருந்தும், மாவோயிஸ்டுகளின் தாக்குதலை எதிர்பார்க்காமல் நிர்வாகம் மெத்தனமாக இருந்திருக்கிறதே அது ஏன் என்பதுதான் நமது கேள்வி. ஆந்திரப் பிரதேசத்திலும், ஒடிஸாவிலும் மாவோயிஸ்டுகள் வலுவிழந்து விட்ட நிலைமை காணப்படும்போது, சத்தீஸ்க்ரிலும், ஜார்க்கண்டிலும் மட்டும் ஏன் மத்திய, மாநில அரசுகளால் அவர்களை செயலிழக்க வைக்க முடியவில்லை என்கிற கேள்விக்கும் பதிலில்லை.
மத்திய மாநில அரசுகளின் தவறுகளால், திங்கள்கிழமை தேசத்துக்காக உயிரைத் தியாகம் செய்த அந்தப் பாதுகாப்பு வீரர்களின் ஆன்மா நம்மை மன்னிக்குமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com