வெள்ளமும் சேதமும்!

வெள்ளத்தால் பாதிக்கப்படுவது என்பது பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு

வெள்ளத்தால் பாதிக்கப்படுவது என்பது பிரம்மபுத்ரா பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழ்பவர்களுக்குப் புதிதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கிழக்கு மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அஸ்ஸாமும் வடகிழக்கு மாநிலங்களும் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன.
அஸ்ஸாமிலுள்ள 32 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. ஏறத்தாழ 2.9 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. இதுவரை அஸ்ஸாமில் மட்டுமே
82 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள 7 காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 91 வனவிலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கின்றன. 363 நிவாரண முகாம்களில் ஏறத்தாழ 1.3 லட்சம் பேர் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இது அஸ்ஸாமுக்கு மட்டுமான புள்ளிவிவரம்.
அஸ்ஸாம் மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களும், விடாது பெய்யும் மழையாலும் பிரம்மபுத்ராவிலும் அதன் கிளை நதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அருணாசலப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஹெலிகாப்டர்கள்கூட அணுகமுடியாத நிலை. தேசிய நெடுஞ்சாலை 415 வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதால் நிவாரணங்களைக்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்துச்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 37-இல் உள்ள பராக் பாலம் உடைந்துவிட்டிருக்கும் நிலையில் மணிப்பூர் முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலைமைதான் நாகாலாந்துக்கும்.
பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பிரம்மபுத்ராவும், அதன் நூறு கிளை நதிகளும் கடந்த 10 வாரமாக வெள்ளப்பெருக்கால் கரையை உடைத்துக்கொண்டு பாய்ந்துகொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 4,000-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காண்டாமிருகங்களுக்கு பெயர்போன காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் ஏறத்தாழ 70 விழுக்காடு நீரில் மூழ்கிக் கிடக்கிறது. உயிரியல் பூங்காவின் பெரும் பகுதியில் வெள்ளம் புகுந்துவிட்டதால், காண்டாமிருகங்களும், யானைகளும் வெள்ளத்தில் இருந்து தப்பி வயல்வெளிகளிலும் கிராமப்புறத் தெருக்களிலும் அலைந்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் மீண்டும் பாதுகாப்பாக காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்கு மீட்டெடுத்து கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதி என்பது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 8 விழுக்காடு மட்டும்தான் என்றாலும், இந்தியாவின் மொத்த நீராதாரத்தில் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணமாக இருக்கிறது. அதற்குக் காரணம் ஜீவ நதியான பிரம்மபுத்ராதான். ஆண்டுதோறும் சராசரியாக 230 கியூபிக் மீட்டர் மழையை பிரம்மபுத்ரா டெல்டா பகுதியிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் பெறுகிறது. ஆண்டுதோறும் பிரம்மபுத்ராவிலும், அதன் கிளை நதிகளிலும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்து வெள்ளச் சேதம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது.
இதற்கு முன்னால் 2012-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ 69 லட்சம் பேர் இடம் பெயர நேர்ந்தது என்றால், இப்போது இதுவரையில் 26 லட்சம் பேர் இடம் பெயரும் அவலம் அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கிறது. அருணாசல பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் 26 ஆயிரம் பேர், நாகாலாந்தின் 11 மாவட்டங்களில் 6.5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்வதால் லட்சக்கணக்கான பேர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் நாசமாகின்றன. சாலைகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் என்று ஏற்படும் சேதம் கணக்கிலடங்காது. ஆண்டுதோறும் சுமார் 8,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் வெள்ள அரிப்பால் காணாமல் போகிறது. தேசிய வெள்ளப்பெருக்கு ஆணையத்தின் அறிக்கையின்படி அஸ்ஸாமின் நிலப்பரப்பில் 40 விழுக்காடு வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்தும்கூட இதுவரை நம்மால் எந்தவொரு தீர்வும் காண முடியவில்லை.
யார்லங் சாங்க்போ என்று திபெத்தில் அழைக்கப்படும் சியாங் நதி, அருணாசலப் பிரதேசத்தில் உருவாகும் திபாங், லோகித் நதிகள், அருணாசலப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு அஸ்ஸாமில் 2,906 கி.மீ. நீளமுள்ள பிரம்மபுத்ராவுடன் இணைகின்றன. பிரம்மபுத்ரா அஸ்ஸாம் மாநிலத்தில் 640 கி.மீ. நீளம் ஓடுகிறது. இமயமலையிலிருந்து பல நூறு ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கால் அடித்துவரும் கசடுகள் பிரம்மபுத்ராவில் படிந்து அதன் ஆழம் குறைந்துவிட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமான கசடுகள் படிந்திருக்கும் இரண்டாவது நதியாக பிரம்மபுத்ரா இருப்பதால்தான் இதுபோலக் கட்டுப்படுத்த முடியாத வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று 2012-இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
வெள்ளப்பெருக்கைப் பார்வையிட அஸ்ஸாமுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.2,350 கோடியை நிவாரணமாக அறிவித்திருக்கிறார். இதுபோல நிவாரணம் அறிவிப்பது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது. பிரம்மபுத்ராவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை நமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளில் காணப்படும் வறட்சியை அகற்ற முற்படுவதுதான் நமது முனைப்பாக இருக்க வேண்டும். நமது தேவைக்கு அதிகமான வெள்ளம் இருந்தும்கூட அவற்றை பயன்படுத்த நம்மிடம் முறையான நீர்மேலாண்மைத் திட்டம் இல்லாமலிருப்பது வேதனையளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com