தேவைதான் 'நோட்டா'!

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான 'நோட்டா'
தேவைதான் 'நோட்டா'!

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான 'நோட்டா' முறை மாநிலங்களவைத் தேர்தலில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு உடனடி தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தலில் நோட்டா பயன்படுத்தப்படக் கூடாது என்கிற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்ததில் வியப்பொன்றுமில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த 2014 ஏப்ரல் முதல், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா இடம்பெற்று வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் இப்போது காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் குஜராத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நோட்டாவை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோர முற்பட்டதற்கு இன்றைய அரசியல் சூழல்தான் காரணம்.
மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் நடைபெறும் பொதுத்தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை பின்பற்றப்படுகிறது. போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தங்களது எதிர்ப்பை நோட்டாவுக்கு வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. நோட்டாவுக்குப் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்றாலும்கூட, அவை வெற்றியை பாதிப்பதில்லை. நோட்டா என்பது பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக வாக்காளர்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்கு ஓர் அடையாளமாக மட்டுமே பயன்படுகிறது.
மாநிலங்களவைக்கான தேர்தல் பொதுத்தேர்தல்களைப்போல அல்ல. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் முதல் விருப்ப வாக்கு, இரண்டாவது விருப்ப வாக்கு என்கிற உரிமை வழங்கப்படுகிறது. முதல் விருப்ப வாக்கில் ஒருவருமே தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் இரண்டாவது விருப்ப வாக்கின் அடிப்படையில் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, மாநிலங்களவைத் தேர்தலின்போது ரகசிய வாக்கெடுப்பு முறை பின்பற்றப்படுவது இல்லை. எந்த உறுப்பினர் யாருக்கு வாக்களித்தார் என்பதில் வெளிப்படைத் தன்மை உண்டு.
மாநிலங்களவைத் தேர்தலில் இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை தனது கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால், அந்த உத்தரவை மீறி ஒருவர் வாக்களித்தாலும்கூட அந்த சட்டப்பேரவை உறுப்பினரின் பதவி பறிபோகாது. காரணம், மாநிலங்களவைத் தேர்தலில் கட்சித் தாவல் தடைச் சட்டம் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தாது. மாநிலங்களவைத் தேர்தலில் கட்சிக் கொறடாவின் கட்டளையை மீறி வாக்களிப்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் உறுப்பினரின் பதவியை பறிக்க முடியாது என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்தல் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு அதை உட்படுத்த முடியாது என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து.
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா வாய்ப்பு அளிக்கப்படுவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலை பேசப்படும் நிலைமையை ஏற்படுத்தும் என்கிற காங்கிரஸ் கட்சியின் வாதத்தை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கவில்லை. தேர்தல் ஆணைம், 2013 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2014 ஜனவரி முதல், மாநிலங்களவைத் தேர்தலிலும் நோட்டாவை பயன்படுத்தி வரும் நிலையில், இப்போது அவசர அவசரமாக அதற்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அந்த அமர்வின் கருத்து.
குஜராத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸும் பா.ஜ.க.வும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் இருக்கிறது. பா.ஜ.க. வேட்பாளர்களான அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் முதல் விருப்ப வாக்கிலேயே வெற்றி பெற்றுவிடுவார்கள். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தில் அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், கட்சித் தலைவி சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேலும் முதல் விருப்ப வாக்கிலேயே வெற்றி பெற்றுவிட முடியும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆறு பேர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். சங்கர் சிங் வகேலா, காங்கிரஸிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மேலும் ஏழு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸிலும் பா.ஜ.க.விலும் இருக்கும் கட்சித் தலைமைக்கு எதிரான அதிருப்தியாளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பதுபோல அமையாது. அதனால்தான் நோட்டாவுக்கு எதிராக, காங்கிரஸும் பா.ஜ.க.வும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கின்றன.
தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழக்காமல், கட்சித் தலைமையின் மாநிலங்களவை வேட்பாளர் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க எம்.எல்.ஏக்களுக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்புதான் நோட்டா. 2013 முதல் இதுவரை 16 மாநிலங்களவைக்கான தேர்தல்களும், மாநிலங்களவைக்கான 25 இடைத்தேர்தல்களும் நடைபெற்றிருக்கின்றன. அவற்றின்போதெல்லாம் நோட்டா குறித்து கவலைப்படாத காங்கிரஸும் பா.ஜ.க.வும் இப்போது கூக்குரல் எழுப்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com