யார் தடுக்கிறார்கள்?

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகி விட்டிருக்கிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, இடைக்கால பிரதமராக ஷாஹித் காகான் அப்பாஸியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. விரைவிலேயே நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரைத் தகுதி நீக்கம் செய்திருப்பது யாருமே எதிர்பாராத திருப்பம். ஊழலுக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் நடத்திவரும் போராட்டத்துக்கு, உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வலு சேர்த்திருக்கிறது. நவாஸ் ஷெரீஃபின் மூன்று குழந்தைகளின் பெயரிலும் அளவில்லாத சொத்துகளும், கணக்கிலடங்காத அளவு பணமும் வெளிநாடுகளில் சேர்த்து வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீஃபைத் தகுதி நீக்கம் செய்திருக்கிறது.
பனாமா ஆவணத் தகவல்கள் கசிந்தபோது, அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் வெளிநாடுகளில், எந்தெந்த ஊர்களில் என்னவெல்லாம் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
தனக்கு வெளிநாட்டில் தொழில் நிறுவனம் இருப்பது குறித்தோ, மிக அதிக சொத்துகள் இருப்பது குறித்தோ தேர்தலில் போட்டியிடும்போது தெரிவிக்காமல் மறைத்தார் என்கிற பனாமா ஆவணக் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் குன்லாக்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகினார். இப்போது இரண்டாவதாக, நவாஸ் ஷெரீஃபின் பிரதமர் பதவி, பனாமா ஆவணத்தின் அடிப்படையில் பறிபோயிருக்கிறது.
மொசாக் பொன்சேகா என்பது பனாமா நாட்டில் செயல்படும் ஒரு கார்ப்பரேட் சட்ட நிறுவனம். இந்த நிறுவனம் பல சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும், அவர்களது நிதி நிர்வாக ஆலோசகராகவும் செயல்படுகிறது. சர்வதேச அளவிலான மோசடி, வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், பதுக்கல் ஆகியவை குறித்த ஆலோசனையும் வழங்கி வந்திருக்கிறது. இந்த நிறுவனத்திடம் பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள், கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அல்லது வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் குறித்த ஆவணங்கள் இருந்தன.
'ஜான் டோ' என்கிற புனைபெயருடைய மர்மநபர் இந்த நிறுவனத்திலிருந்து ஆவணங்களைத் திருடி ஒரு ஜெர்மானியப் பத்திரிகையாளர் மூலம் அம்பலப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலான ஆவணங்களும், வெளிநாட்டில் உள்ள 2,14,489 சொத்துகள் குறித்த குறிப்புகளும் 2015-இல் 'ஜான் டோ'வால் இணையத்தில் கசியவிடப்பட்டன. 'பனாமா ஆவணங்கள்' பொது வெளிக்கு வந்தபோது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
பனாமா ஆவணக் கசிவின் அடிப்படையில் இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி, பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 2013 பொதுத்தேர்தலில் போட்டியிடும்போது, வெளிநாடுகளில் தனக்கு இருக்கும் சொத்துகள் குறித்த முழுமையான தகவலை நவாஸ் ஷெரீஃப் தராமல் மறைத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்றின்படி, அரசியல்வாதிகள் உண்மையானவர்களாகவும், அப்பழுக்கற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதனடிப்படையில்தான் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதும் அவரது மூன்று குழந்தைகள் மீதும் ஊழலுக்கான தனி விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலையற்றதன்மை ராணுவத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. நீதிமன்ற விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும், நீதிபதிகள் ராணுவத்தின் தூண்டுதலில் பேரில்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் என்றும் கூறி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர், இந்தத் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தகுந்த ஆதாரங்களுடன்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ராணுவத்தின் பங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்கு மிகவும் அதிகம். இந்தத் தீர்ப்பினால் நவாஸ் ஷெரீஃபுக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அது அவரது குடும்பத்தையோ, கட்சியையோ அரசியல் ரீதியாக பாதித்துவிடும் என்று தோன்றவில்லை. இந்தத் தீர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானின் கரத்தை பலப்படுத்தி இருக்கிறது என்பதையும் அவர் பெரிய அளவில் அரசியல் ஆதாயம் பெறக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதெல்லாம் இருக்கட்டும், நாம் நமது நாட்டுக்கு வருவோம். பனாமா ஆவணங்கள் கசிந்ததால், அந்த ஆவணத்தில் இடம்பெற்ற 500-க்கும் அதிகமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், இடைத்தரகர்கள் ஆகியோர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டது. அதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமா, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் நமது உச்சநீதிமன்றத்தால் முடிவெடுக்க முடியவில்லையே ஏன்? யார் தடுக்கிறார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com