விருது அரசியல்!

இந்தியா, சர்வதேச அரங்கில் விளையாட்டுத்துறையில்

இந்தியா, சர்வதேச அரங்கில் விளையாட்டுத்துறையில் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு நமது ஆட்சியாளர்களின் விளையாட்டு குறித்த பார்வை ஒரு முக்கியமான காரணம். கடந்த 70 ஆண்டுகளாக விளையாட்டுக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டும்கூட அவற்றை முறையாக பயன்படுத்தாமல் வீணடிக்கும் அதிகாரிகள் வர்க்கமும் ஒரு காரணம்.
வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு அவ்வப்போது நிதியுதவி அளித்து மத்திய - மாநில அரசுகள் பெருமை தேடிக்கொள்கின்றனவே தவிர, விளையாட்டு வீரர்களின் தேவைகளும் சேவை
களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கான "ராஜீவ் காந்தி கேல்ரத்னா' விருது வழங்குவதிலும், பயிற்சியாளர்களுக்கான (கோச்) "துரோணாச்சார்ய' விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்குவதிலும், "பத்ம' விருதுகள் வழங்குவதைப்போலவே ஏகப்பட்ட குளறுபடிகள், பாரபட்சங்கள், தவறான தேர்வுகள் காணப்படுகின்றன.
பயிற்சியாளர்களுக்கான "துரோணாச்சார்ய' விருது வழங்குவதில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் தவிர்க்கப்படுவது என்பது நியாயமாகப்படவில்லை. வெளிநாட்டவர்களே ஆனாலும்கூட, தங்களைப் பயிற்சியாளர்களாக ஏற்றுக்கொண்ட இந்தியா சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முழுமனதாக பயிற்சி அளித்து, இந்திய அணியையும் வீரர்களையும் வெற்றிவாகை சூட வைப்பவர்களை நாம் புறக்கணிப்பது எப்படி சரியாக இருக்கும்?
துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற அபிநவ் பிந்த்ராவுக்கு பயிற்சி அளித்த ஹெய்ன்ஸ் ரெயின்கீமியர் மற்றும் கேப்ரீலே புல்மேன் ஆகியோரின் பங்கு மகத்தானது. அவர்களைப் புறக்கணிப்பது எங்ஙனம்? அதேபோல, பளுதூக்கும் போட்டியில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கர்ணம் மல்லேஸ்வரியை வெண்கலப் பதக்கம் பெறுவதற்குப் பயிற்சி அளித்த லியோனிட் டரனென்கோவை நாம் கெளரவிக்காமல் இருப்பது என்ன நியாயம்?
சாய்னா நெவாலும், காஷ்யப்பும் சர்வதேச அளவில் பாட்மிண்டன் வீரர்களாக வலம்வருவதற்குக் காரணமான இந்தோனேஷியாவின் அதிக் ஜெளஹாரி விருதுக்கு தகுதியற்றவராக ஒதுக்கப்படுவது மிகப்பெரிய சோகம். கிரிக்கெட்டையே எடுத்துக்கொண்டாலும்கூட, உலகக் கோப்பையை வெற்றி பெற முடியாமல் 28 ஆண்டுகள் தளர்ந்து கிடந்த இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற வெளிநாட்டுப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனை நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறுத்துவிட முடியுமா?
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் டெஸ்ட் பந்தயக் கிரிக்கெட் வீரர் நரசிம்ம ராவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. எங்களது வடக்கு அயர்லாந்து பகுதியில் நீங்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதத்தில் பிரிட்டிஷ் அரசின் விருது உங்களுக்கு வழங்கப்படுகிறது என்கிற அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அரசியால் கெளரவிக்கப்பட்டார். ஓர் இந்திய பிரஜை என்றாலும்கூட அவரது சேவை வெளிநாடுகளில் மதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்திய விளையாட்டு வீரர்களை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தி, இந்திய அணியையும் வீரர்களையும் வெற்றிவாகை சூட உதவும் அயல்நாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மால் புறக்கணிக்கப்படுவது ஏற்புடையதல்ல.
விளையாட்டு வீரர்களுக்குத் தரப்படும் அதே அளவு மரியாதை விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தியாவில் தரப்படுவதில்லை என்பதும், விளையாட்டிலும் ஆணாதிக்கம் கோலோச்சுகிறது என்பதும் வேதனைக்குரிய உண்மை.
1997-98இல் சச்சின் டெண்டுல்கரும், 2007-இல் மகேந்திர சிங் தோனியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். வேடிக்கை என்னவென்றால் தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை அவர்கள் புரிந்திருந்தாலும் உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்கு அப்போது இந்திய அணியை அவர்கள் இட்டுச் சென்றிருக்கவில்லை. மிதாலி ராஜ் அப்படியல்ல, 2005-லும் 2017-லும் இரண்டு முறை மகளிர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணியை இட்டுச்சென்ற பெருமை அவருக்கு உண்டு.
இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை நூலிழையில் தவறவிட்ட இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜை, ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்காமல் விட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அவரது பெயரைப் பரிந்துரைப்பதற்கான இறுதித் தேதி முடிந்துவிட்டது என்று கிரிக்கெட் வாரியம் வாதிடமுடியாது. ஏனெனில், இறுதித் தேதி முடிந்தபிறகும்கூடப் பலருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் சார்பில் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இன்ன பிற இந்திய கிரிக்கெட்வீரர்களும், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா உள்ளிட்ட டென்னிஸ் வீரர்களும் கேல்ரத்னா விருதுக்கு தகுதி பெற்றார்களே அது எப்படி? ரோஹன் போபண்ணாவின் விஷயத்திலும் அதிகாரிகள் இறுதித் தேதி முடிந்துவிட்டது என்று காரணம் காட்டி தப்பித்துக்கொள்ளப் பார்ப்பார்களோ என்னவோ?
வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டால் மட்டும்தான் வெற்றிகள் சாத்தியமாகும். இதை அதிகார வர்க்கம் புரிந்துகொள்ளாத வரை சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியா முன்னணி இடத்தைக் கனவு காணக்கூட முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com