கண்துடைப்பு!

மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவை தமிழகத்தின் நீட் தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்குக் கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றன. நிகழாண்டுக்கு மட்டும் விலக்குப் பெறும் வகையில் இயற்றப்பட்டிருக்கும் இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதில் பிரச்னை இருக்கப்போவதில்லை. அதனாலேயே எல்லாம் முடிந்துவிட்டது என்றோ, மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்றோ கருதிவிட முடியாது.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் குளறுபடியால் ஒட்டுமொத்த மாணவச் சமுதாயமே பாதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் அரசியல்வாதிகளாலும் நீதிமன்றத்தாலும் பந்தாடப்படும் அவலம் தொடர்கிறது. இதை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். நீதிமன்றம் தடைவிதித்தால் மீண்டும் இழுபறி தொடருமே தவிர, முடிவு எட்டப்படாது.
இன்னொன்றும் புரியவில்லை. இப்போது ஓர் ஆண்டு விலக்குக்கான தமிழக அரசின் அவசரச்சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க முன்வந்திருக்கும் மத்திய அரசு, நீட் தேர்வு எழுதப்படுவதற்கு முன்னாலேயே ஏன் இந்த ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை? அப்படி முன்வந்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 80 ஆயிரம் பேர் எதிர்பார்ப்புடன் காத்திருந்திருக்க மாட்டார்கள். இப்போது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாத குழப்பத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தேவையில்லாத மன அழுத்தத்துடன் காத்திருக்கும் திரிசங்கு நிலைக்கு மத்திய அரசுதான் காரணம்.
மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வு எதற்காக உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டது என்பது இப்போது பலருக்கு மறந்தே போய்விட்டது. தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாக செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதால் மருத்துவத் துறை பாதிக்கப்படுகிறது என்கிற காரணத்தால், பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவை உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்ற 20 ஆயிரம் மாணவர்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பம்போல் சேர்த்துக்கொள்கின்றன. நன்கொடை தருபவர்கள் மருத்துவர்களாகிவிடுவதால் மருத்துவம் முழுக்க முழுக்க வணிகமாகி விடுகிறது என்கிற பிரச்னைக்குத் தீர்வாகத்தான் நீட் தேர்வு பரிந்துரைக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள 41 மருத்துவக் கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 18. இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. வசதி இருக்கிறது என்பதால், மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள், நீட் தேர்வின் மூலம் அதற்கான தகுதியைப் பெற்றவர்கள். அவர்கள் தனியார் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தின் அடிப்படையில் சேர்ந்து படிப்பதை யாரும் குற்றமோ குறையோ காண முடியாது. 'நீட்' தேர்வின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை என்பதுதான் ஏற்புடையதாக இல்லை.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புவரை படித்து அதிக மதிப்பெண் பெற்று சமுதாயத்தின் மேல்தட்டுக்கு முன்னேறும் எல்லா வாய்ப்பும் இருந்தும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை என்பதால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் போவது என்பது மிகப்பெரிய அவலம். வசதியான குடும்பத்தில் பிறந்து தனியார் பள்ளியில் நன்கொடையும் கல்விக் கட்டணமும் வாரி வழங்கி படித்துத் தேறிய ஒருவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதால் கிராமப்புற மாணவன் வாய்ப்பை இழப்பது என்பது மிகப்பெரிய சமூக அநீதி.
பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் மருத்துவக் கல்விக்கு இடம் பெற முடியும் என்றால்,பிளஸ் 2 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவுடன் படித்தது வீண்தானா என்கிற கேள்வியை எழுப்புகிறது நீட் தேர்வு. தனியார் பள்ளிகளில் மாற்றுக்கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்
துவக் கல்லூரியில் சேராமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிப்பதும், அப்பாவி ஏழை கிராமப்புற மாணவர்கள் நன்றாக படிப்பவராக இருந்தும் அவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதும் மிகப்பெரிய கொடுமை.
அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கத்தோடு மிகப்பெரிய சமுதாய புரட்சிக்கு வித்திட்டது அரசு பள்ளிக்கூடங்கள்தான், தனியார் பள்ளிக்கூடங்கள் அல்ல. இந்த மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மாநில அரசு மாவட்டத்துக்கு மாவட்டம் மருத்துவக் கல்லூரிகளை மக்களின் வரிப்பணத்தில் நிறுவியிருக்கிறது. சமச்சீர் கல்வி திட்டத்தின் தரம் குறைவானது என்றால், அது அரசின் தவறு, மாணவனின் தவறல்ல. இந்தக் கல்வி திட்டத்தை மாற்றி புதியதொரு தலைமுறையை உருவாக்க பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை நீட் தேர்வு என்பது நியாயமானதாக இருக்காது.
நீட் தேர்வு விஷயத்தில் சரியான அணுகுமுறையை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. தேவையில்லாமல் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மாணவர்கள் பகடைக்காய்களாக உருட்டப்படுகிறார்கள். ஓர் ஆண்டு விலக்கு என்பது வெறும் கண்துடைப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com