தொடரக்கூடாது மோதல்...

கடந்த வாரம் தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு நடந்த இரண்டு நாள்

கடந்த வாரம் தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மீண்டும் பொதுவெளியில் வெளிப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் கலந்து கொண்டனர். இவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் பொது விவாதமாகவே மாறிவிட்டிருக்கிறது.
முதல் நாள் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை இவை மூன்றின் தனித்தனி அதிகாரங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதுடன் நின்றிருக்கலாம். நிர்வாகத்தின் தவறுகளை நீதித்துறை சுட்டிக்காட்டவும், வழிகாட்டவும் செய்யலாமே தவிர நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தானே ஈடுபடுவது வரம்புமீறல் என்று குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட விளையாட்டு நிறுவனங்களை நெறிப்படுத்துவது, வங்கிகளின் வாராக்கடன் குறித்துத் தானே நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது போன்றவற்றை சுட்டிக்காட்டினார். 
பெரும்பாலான சட்ட சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் பொதுநல வழக்குகளின் மூலம் நீதி மன்றங்களால் பரிந்துரைக்கப்பட்டவை என்பதை அருண் ஜேட்லி கவனத்தில் கொள்ளத் தவறி விட்டார். சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் அனைத்துமே நீதித்துறையின் தலையீட்டால்தான் சாத்தியப்பட்டன. நிர்வாகமும், நாடாளுமன்றமும் முறையாகச் செயல்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமேயானால், அவர்கள் பொதுநல வழக்கின் மூலம் நீதித்துறையை அணுக வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதித்துறைக்கும், நிர்வாகத்துக்கும் இடையேயான சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல் இந்த மூன்றுக்கும் இடையிலான சமநிலை தவறிவிடக்கூடாது என்றும், அவை சுதந்திரமாகச் செயல்படும் அதே வேளையில் ஏனைய இரண்டு அரசியல் சாசன அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் பொதுப்படையாகப் பேசி முடித்து விட்டார். நீதித்துறை என்பது நிர்வாகம், நாடாளுமன்றம் இரண்டுக்கும் சமமாக இருந்தாலும்கூட அவற்றில் முன்னுரிமை பெறுவது நீதித்துறைதான் என்பது அடிப்படையில் வழக்குரைஞரான குடியரசுத் தலைவருக்கு தெரியாததல்ல. நிர்வாகமோ, நாடாளுமன்றமோ எடுக்கும் எந்த முடிவையும் பரிசீலனை செய்யும் உரிமையை அரசியல் சாசனம் நீதிமன்றத்துக்குத்தான் வழங்கி இருக்கிறது.
நாடாளுமன்றம் சுதந்திரமாக சட்டம் இயற்றவும், நிர்வாகம் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருக்கிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி விவாதத்திற்குரிய பிரச்னைகளை எல்லாம் தனது நிதியமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் விட்டுவிட்டு, மூன்று முக்கிய அரசியல் சாசன அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் நிறுத்திக் கொண்டார்.
அரசியல் சாசனம் பிரதமர் மீது வைத்திருந்த அதே அளவு நம்பிக்கையை இப்போதும் நீதித்துறை வைத்திருக்கிறது என்கிற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் கருத்தும், அரசியல் சாசனம் ஒவ்வோர் அமைப்புக்கும் வழங்கியிருக்கும் சுதந்திரத்தை நீதித்துறை மதிக்கிறது என்கிற கருத்தும் பாராட்டுக்குரியவை.
தேசிய சட்ட தின நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் உரைதான். எப்போது அணு ஆயுதத்தை இயக்கலாம் என்பதுவரை பிரதமர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அதனால் நீதிபதிகளை நியமிப்பதிலும் அவர் மீது நீதித்துறை நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் கூறியிருப்பது விசித்திரமான வாதம். 
முதலாவதாக, பிரதமர் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர மக்கள் மன்றத்தால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. அதுமட்டுமல்லாமல் சட்டப் பேரவையோ, நாடாளுமன்றமோ, பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதால் எந்த முடிவையும் எடுக்கவோ சட்டமாக்கவோ முடியாது. இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சாசன வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நீதித்துறைக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்படவில்லை என்கிற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ஆதங்கம் அவரது உரையில் வெளிப்பட்டது. ஆணையம் அமைவதை நிராகரித்து, முந்தைய கொலீஜியம் முறையைப் பின்பற்றுவது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பிரச்னையில் நீதிபதிகள் நியமனத்திற்கான செயல்முறை திட்டத்தில் கருத்து வேறுபாடு தொடர்வதுதான் முடிவு எட்டப்படாமல் இருப்பதற்கான காரணம்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் இப்போதைய கொலீஜியம் முறை தவறானது என்பதிலும், அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நீதிபதிகளை நியமிப்பதில் இதைவிடச் சிறந்த முறை பின்பற்றப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதைப் பொதுவெளியில் விவாதிக்காமல் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதில் இரு தரப்பினரும் ஏன் தயங்க வேண்டும்?
எல்லாம் சரி, விவாதத்துக்குரிய இந்தப் பிரச்னை, உச்சநீதிமன்ற நீதிபதிகளை வைத்துக்கொண்டு ஒரு பொது நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டிருக்க வேண்டுமா? நீதித்துறையைத் தேவையில்லாமல் சர்ச்சைக்கு இழுத்து, வலுக்கட்டாயமாக முடிவெடுக்க அழுத்தம் கொடுப்பதுபோல இருக்கிறது சட்ட அமைச்சரின் முனைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com