தாய்மைக்குத் தலைகுனிவு!

தேசியக் குற்ற ஆவணத் துறையின்

தேசியக் குற்ற ஆவணத் துறையின் 2016-ஆம் ஆண்டுக்கான அறிக்கை தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் அளவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மகளிருக்கும், மழலைகளுக்கும் வாழத் தகுந்த இடமாக இந்தியா இல்லை என்கிற கசப்பான உண்மையைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
குற்றங்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசமும், தலைநகர் தில்லியும் இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிட மோசமாக இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் பதிவாகியிருக்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் நாற்பது சதவிகிதம் தலைநகர் தில்லியில் நடந்திருக்கின்றன.
ஊழல் தொடர்பான கிரிமினல் குற்றங்களில் மகாராஷ்டிர மாநிலமும், முதியோருக்கு எதிரான வன்முறையிலும், குற்றங்களிலும் சண்டீகர் நகரமும் முன்னணி வகிக்கின்றன. பிணை இல்லாத குற்றங்களில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அதேபோல, தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
பாலியல் வன்கொடுமை, கடத்தல், தாக்குதல், கணவராலும் அவரது உறவினர்களாலும் துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட மகளிருக்கு எதிரான குற்றங்கள் தேசிய அளவில் 2015-இல் இருந்ததைவிட 2016-இல் 2.9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல, ஊரகப்பகுதிகளைவிட நகர்ப்புறங்களில்தான் மகளிருக்கு எதிரான வன்முறை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தில்லியும், மும்பையும்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நகரங்கள் என்று தேசியக் குற்ற ஆவணத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தேசிய சராசரியைவிட தில்லியில் குற்றங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. ஆனால், மாநில அளவில் சில மாநிலங்களில் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2016-இல் உத்தரப் பிரதேசத்தில் 4,889 கொலைகளும், பிகாரில் 2,581 கொலைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட கேரளாவில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 2016-இல் வெறும் 305 மட்டுமே. கல்வி வளர்ச்சியும், சமுதாய முன்னேற்றமும் கொலைகள் போன்ற கிரிமினல் குற்றங்கள் குறைவதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
குற்ற ஆவணத் துறை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கும் புள்ளிவிவரங்களில் தலைகுனிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவது குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்திருக்கும் அவலம். 2015-உடன் ஒப்பிடும்போது 2016}இல் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் 82 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. ஒருவேளை இப்படி அதிகரித்திருப்பதற்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும்கூடக் காரணமாக இருக்கக்கூடும். 
இந்த அளவுக்குக் குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும்போது இதயம் வெடிக்கிறது. நாம் நாகரிகத்தை நோக்கி நகராமல் காட்டுமிராண்டிகளாக மாறிக்கொண்டிருக்கிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 82 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களும், குற்றங்களும்கூடக் கணிசமாகவே அதிகரித்திருக்கின்றன. வீடுகளும் சரி, பள்ளிக்கூடங்களும் சரி, பொதுஇடங்களும் சரி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றப்பட வேண்டும் என்பதைப் போர்க்கால நடவடிக்கையுடன் நமது சமுதாயம் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், நம் வீட்டுக் குழந்தைகளை தைரியமாக வீட்டுக்கு வெளியே அனுப்பப் பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படக்கூடும்.
குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பது குறித்துப் பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டியது மிக மிக அவசியம். அதேபோல, அக்கம்பக்கத்து ஆடவர்கள், இளைஞர்கள், உறவினர்கள், ஏன், ஆசிரியர்கள் உள்பட அனைவருடைய பார்வையையும், நடவடிக்கையையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விரைந்து விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களையும், சிறப்பு நீதிமன்றங்களையும் அமைப்பது அவசியம். குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைத் தாக்குதல் செய்பவர்களைத் தயக்கம் இல்லாமல் உடனடியாகப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் காவல் துறையினருக்கு வலியுறுத்த வேண்டும்.
பெரியவர்களைப்போல குழந்தைகளால் தங்களுக்கு நேரும் அவலத்தை துணிந்து வெளியில் சொல்ல முடியாது என்பதால் சமூகம்தான் அவர்களுக்காக உரத்தக்குரலில் எதிர்ப்பை எழுப்ப முடியும். அப்படிச் செய்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். 
கொலை, கொள்ளை, வழிப்பறி, வன்முறை ஆகிய குற்றங்கள் குறைந்துவருவதுபோல அரசின் கொள்கைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு, கண்காணிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, விரைந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டால் மகளிர் மீதும், குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும், வன்முறைகளும் நிச்சயமாகத் தடுக்கப்பட முடியாவிட்டாலும் கணிசமாகக் குறையும். குற்றமற்ற சமுதாயத்தால்தான் முன்னேறிய சமுதாயமாக மாற முடியும்.
இந்தியா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நாடு என்று தொடருமேயானால், அது நாம் கடவுளைத் தாயாகவும் சக்தியாகவும் வணங்குவது வெறும் போலித்தனம் என்பதைத்தான் வெளிப்படுத்தும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com