பெருவழி மரணங்கள்

சாலைப் பாதுகாப்பு விதிகள், அனுசரிப்பதற்கு என்பதைவிட

சாலைப் பாதுகாப்பு விதிகள், அனுசரிப்பதற்கு என்பதைவிட மீறுவதற்கு என்பதுபோன்ற தோற்றம்தான் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன. இதுகுறித்த எந்தவித அக்கறையும் நமது நிர்வாகத்துக்குக் கிடையாது என்பது இந்திய சாலைகளைப் பார்க்கும் எவருக்கும் தெரியும். உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது சாலைப் பாதுகாப்பு குறித்த பொதுநல வழக்கு வருவதும், நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்குவதும் எந்தவிதமான பெரிய மாற்றத்தையும் அதிகாரிகள் மத்தியிலோ வாகன ஓட்டிகள் மத்தியிலோ ஏற்படுத்தவில்லை.
இத்தனைக்கும் உச்ச நீதிமன்றம் சாலைப் பாதுகாப்புக் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த மூத்த வழக்குரைஞர் ஒருவரைக் கண்காணிப்பாளராகவும் நியமித்திருக்கிறது. அப்படியிருந்தும்கூட சாலைப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் காவல் துறையினர் முனைப்புக் காட்டுவதில்லை. அவர்கள் மட்டுமல்ல, மோட்டார் வாகனத் துறை அதிகாரிகளும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதிலும் வாகனத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதிலும் போதிய கவனம் செலுத்துவதில்லை. 
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் இந்தியாவில் 1,50, 785 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 2015-ஐவிட 2016-இல் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்திருப்பது பிரச்னையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. 
சாலை விபத்து மரணத்துக்கு யார் காரணம் என்பதை அடையாளம் கண்டு குறிப்பிடுவதில் தெளிவின்மை காணப்படுகிறது. 2007-இல் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அமைத்த சுந்தர் குழு இதைச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகன மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடையவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
சாலை விபத்தைத் தடுக்க சில வழிமுறைகளையும், அவற்றை நடைமுறைப்படுத்த காலவரம்பையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சாலைப் பாதுகாப்பு செயல்திட்டம் ஒன்றை ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் அறிவித்தாக வேண்டும் என்பது. அதற்குப் போதுமான விளம்பரம் வழங்கும் பொறுப்பு அரசுடையது. 
இந்தச் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்வரை காவல்துறையினரும் வாகனத் துறையினரும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு தவறு செய்பவர்களிடமிருந்து அபராதம் பெறுவதோ தண்டிப்பதோ விதிவிலக்கில்லாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் சாலைப் பாதுகாப்புக் குழு எல்லா மாநிலங்களுக்கும் சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி இருக்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதை மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் தண்டிக்காமல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 279-ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்வதன் மூலம் சிறை தண்டனைக்கு ஆளாக்குவது; முறையான உரிமம் இல்லாமலோ, தரத் தகுதியில்லாத வாகனங்களை ஓட்டினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை சாலைப் பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியிருக்கிறது. 
ஆனாலும் இன்னும்கூட சாலை விதிமுறை மீறல்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் குறைந்த அளவு அபராதத்துடன், மீறுவோர் மன்னிக்கப்படுவது கையூட்டு எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
சாலை விபத்து மரணங்களுக்கு விதிமுறை மீறல்கள் மட்டுமே காரணமல்ல. இந்தியாவிலுள்ள சாலைகளின் தரமும் அகலமும் மிகப்பெரிய காரணம். அளவுக்கு அதிகமாக வாகன உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துவிட்டு சாலைகளை அதற்கேற்றாற்போல் மேம்படுத்தாமல் இருப்பதுதான் சாலை விபத்து மரணத்துக்கும், சாலை நெரிசலுக்கும் முக்கியமான காரணம் என்பது அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
எந்த சாலையிலும் மூன்று அடிக்கு அதிகமான அகலமுள்ள நடைமேடை கிடையாது. நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, ஊரகப்புறச் சாலைகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளிலும் குறிப்பிட்ட தூரங்களில் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான 'ஜீப்ரா கிராஸிங்' என்பது கிடையவே கிடையாது. 
சாலைகள் என்பது வாகனங்களுக்கு மட்டும்தானே தவிர, பாதசாரிகளுக்கானதல்ல என்பதுபோன்ற நிலைதான் இங்கே காணப்படுகிறது. இந்தியாவில் பாதசாரிகளுக்கு சாலை விதிகளை மதிக்கத் தெரியாது என்றும், கண்ட இடத்தில் சாலையைக் கடப்பார்கள் என்றும் வாகனங்களில் அமர்ந்து குறை கூறுவோர் சாலைகளில் நடந்துபார்த்தால்தான் யதார்த்தம் அவர்களுக்குப் புரியும்.
தொழில்நுட்ப மாற்றங்கள், சாலைப் பயன்பாடு, வாழ்க்கை முறை மாற்றம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாகனப் பயன்பாட்டிலும் சாலைப் பாதுகாப்பிலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. 
இந்திய சாலைகளைப் பாதசாரிகளுக்கு ஏற்றதாக மாற்றியமைக்காமல், சாலைகள் மற்றும் நடைமேடைகளின் அகலத்தை அதிகப்படுத்தாமல், விதிமுறை மீறல்களை கையூட்டுப் பெறாமல் தண்டிக்கும் நிலை ஏற்படாமல் சாலை விபத்து மரணங்கள் அதிகரிப்பதை அரசாலோ நீதிமன்றத்தாலோ தடுக்கவே முடியாது.
விடை தெரிகிறது. நிறைவேற்றுவது எப்போது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com