இப்போதாவது...!

'மரம்' என்று மூங்கில் அழைக்கப்பட்டாலும், தாவரவியல்படி அது புல் ரகத்தைச் சேர்ந்ததுதான்.

'மரம்' என்று மூங்கில் அழைக்கப்பட்டாலும், தாவரவியல்படி அது புல் ரகத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அரசின் பார்வையில் இதுநாள்வரை அது ஒரு மரமாகத்தான் கருதப்பட்டது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் காடுகளில் விளைவதால் மூங்கிலை மரம் என்று வகைப்படுத்தி இருந்தார்கள்.
கடந்த வாரம் மக்களவையில் இந்திய வனச் சட்டம்-1927-இன் பிரிவு எண் 2(7)இல் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட சட்டத்தின்படி மரம் என்கிற பிரிவைச் சார்ந்தது மூங்கில். அந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தத்தில் அந்தப் பகுப்பு அகற்றப்பட்டிருக்கிறது.
இது வெறும் சம்பிரதாயம்போல தோன்றலாம். ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். மரம் என்கின்ற பிரிவிலிருந்து மூங்கிலை அகற்றிவிட்டிருப்பதால்,வனத்துறைக்கு இந்த இயற்கை வளத்தின் மீதான அதிகாரம் அகற்றப்படுகிறது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில், மூங்கிலை மரம் என்று வகைப்படுத்தி இந்திய வனச்சட்டம் 1927-இன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போது காட்டிலுள்ள மரங்கள் வனக்கொள்ளையரிடமிருந்து காப்பாற்றப்படுவதற்குக் கடுமையான சட்ட விதிமுறைகள் தேவைப்பட்டன. மூங்கில் அதிகமாகக் காடுகளில் விளைவதால் அதையும் தேக்கு, கருங்காலி, சந்தனம், ஈட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏனைய மரங்களுடன் இணைத்து வகைப்படுத்திவிட்டார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த வகைப்படுத்தலை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்கூட வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் மூங்கில் ஒரு மரம் என்பதால் வனத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடரட்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.
மூங்கில், வனத்துறையினரால் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் மட்டுமே சந்தைக்கு வருகிறது. மூங்கிலை சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்டவைபோல பயிரிட்டு விவசாயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதை வனத்துறையால் மட்டுமே ஏலம் விட முடியும்.
உலகச் சந்தையிலான மூங்கில் விற்பனை சுமார் 6,000 கோடி டாலர் (சுமார் ரூ.3.9லட்சம் கோடி) அளவுக்குக் காணப்படுகிறது. மூங்கிலுக்குப் பரவலான தேவையும் உள்ளது. ஆனாலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்தியாவால் உலக அரங்கிலான மூங்கில் விற்பனையில் பங்கு பெற முடியவில்லை. உலகத்தின் மொத்த மூங்கில் வனத்தில் சுமார் 30% இந்தியாவில் இருந்தும்கூட நாம் மூங்கிலை இறக்குமதி செய்கிறோம் என்கிற சோகத்தை யாரிடம் போய்ச்சொல்ல?
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மூங்கில் குறித்து ஓர் ஆராய்ச்சிக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவின் ஓராண்டுக்கான மூங்கில் தேவை 2.7 கோடி டன். ஆனால், உற்பத்தியோ வெறும் 1.3 கோடி டன் மட்டும். இந்தியாவில் சுமார் 1.4 கோடி ஹெக்டேர் பரப்பில் மூங்கில் வனங்கள் காணப்படுகின்றன. சர்வதேச மூங்கில் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 4.5% மட்டுமே. 67 லட்சம் ஹெக்டேர் அளவிலான மூங்கில் வனம் கொண்டிருக்கும் சீனா சர்வதேச மூங்கில் சந்தையில் 50% அளவிலான விற்பனையை மேற்கொள்கிறது.
வெட்டப்பட்ட மூங்கில் என்பது மரமல்ல என்று 1996-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல, 2006-இல் கொண்டு வரப்பட்ட வனஉரிமைச் சட்டம், மரமல்லாத மலைவிளைபொருள் என்று மூங்கிலை வகைப்படுத்தி இருக்கிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு முடிவுகளுமே மூங்கிலை மரம் என்கிற பிரிவைச் சேர்ந்ததல்ல என்று தெளிவுபடுத்தியிருந்தாலும்கூட, அதனால் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. காரணம், இந்திய வனச்சட்டம் 1927-இல் திருத்தம் ஏற்படுத்தாமல் மூங்கில் குறித்த குழப்பத்தை மத்திய அரசு நீட்டித்துக்கொண்டு இருந்தது.
கடந்த வாரம் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திருத்தம் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிகோலும். காரணம், இனிமேல் மூங்கிலை விவசாயிகள் வியாபாரரீதியாக பயிரிடத் தொடங்குவார்கள். தேவைக்கு அதிகமாக விளைந்து காடுகளில் வீணாகும் மூங்கில்கள் இனிமேல் வனத்துறையின் தடையில்லாமல் வெட்டப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.
அதுமட்டுமல்லாமல், இந்தியக் காடுகளில் அளவுக்கு அதிகமாக காணப்படும் மூங்கில்கள் அவ்வப்போது ஒன்றுக்கொன்று உரசி காட்டுத்தீ உருவாகும் அவலம் குறையும். மூங்கில் ஒன்றுக்கொன்று உரசி அதனால் காட்டுத்தீ உருவாகும்போது, 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் வயதுள்ள விலை மதிக்க முடியாத பல மரங்கள் கருகிச் சாம்பலாவது தடுக்கப்படும்.
இந்தியாவிலுள்ள 1.4 கோடி ஹெக்டேர் மூங்கில் காடுகளில் பெரும்பாலான மூங்கில்கள் பயன்படுத்தப்படாமல் காய்ந்து வீணாகின்றன. இந்த மூங்கில்கள் சரியான பருவத்தில் அவ்வப்போது வெட்டப்படும்போது அதன் விளைவாக சந்தைக்கு மூங்கில்கள் வருவது மட்டுமல்லாமல், மூங்கில் உற்பத்தியும் அதிகரிக்கும்.
காடுகளில் உள்ள ஏனைய மரங்களுக்கும் மூங்கிலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பல அன்றாட உபயோகங்களுக்குத் தேவைப்படும் ஏனைய மரங்கள் வளர்ந்து பயன்பாட்டுக்குத் தயாராவதற்கு குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரையில் தேவைப்படும். ஆனால், ஒரு மூங்கில் குருத்து உயர்ந்து வளர மூன்று முதல் ஐந்து மாதங்கள் போதும். வெட்ட, வெட்ட வளர்ந்துகொண்டிருக்கும் மூங்கில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பயனளிக்கும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால், இந்தியாவுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் அந்நியச் செலாவணி கிடைத்திருக்கும். இப்போதாவது 
மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே, அதை நினைத்து ஆறுதலடைவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com