மாற்றம் காணுமா பஞ்சாப்?

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 4-ஆம் தேதி நடந்தது. 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தலில், எதிர்பார்த்ததைவிட அதிகமாக 75% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
முந்தைய சட்டப்பேரவையில் 50.57% வாக்குகளுடன் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலின் சிரோமணி அகாலிதளம் 56 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி 7.15% வாக்குகளுடன் 12 இடங்களையும் வென்று கூட்டணி ஆட்சியை அமைத்தன. 41% வாக்குகள் பெற்றிருந்த காங்கிரஸ் 46 இடங்
களைப் பெற்று எதிர்க்கட்சியானது. மூன்று சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் திடீர் திருப்பம், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி இருப்பதுதான். கடந்த மக்களவைத் தேர்தலில், யாருமே எதிர்பாராத விதமாக நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது முதல், பஞ்சாப் அரசியலில் ஆம் ஆத்மி கட்சியும் ஒரு சக்தியாக உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே தில்லியில் ஆட்சியைப் பிடித்ததுபோல, பஞ்சாபிலும் ஆளும் அகாலிதளக் கூட்டணியையும், எதிர்க்கட்சியான காங்கிரûஸயும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து
விடுமோ என்கிற அளவுக்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது.
யூனியன் பிரதேசமான தில்லியைப்போல அல்லாமல், பஞ்சாபில் வெற்றி பெறும்போது முழுமையான மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்க முடியும் என்கிற ஆம் ஆத்மி கட்சியின் முனைப்பு, தேர்தல் களத்தை மிகவும் பரபரப்பாக்கி இருக்கிறது. பஞ்சாபில் போட்டியிடுவது என்கிற முடிவை எடுத்தது முதல் தில்லி முதல்வர் பஞ்சாபி படிக்கத் தொடங்கி இருக்கிறார் என்பதில் இருந்தே, எந்த அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்குப் பல பிரச்னைகளும் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மாநிலத்தவர் அல்ல என்பது அந்தக் கட்சியின் முதல் பலவீனம். அதிக அளவில் இளைஞர்களும், நடுநிலையாளர்களும் ஆம் ஆத்மியால் கவரப்பட்டிருந்தாலும், அந்த ஆதரவை வாக்குகளாக மாற்றுவதற்கான அமைப்பு ரீதியான அடிப்படை பலம் ஆம் ஆத்மி கட்சிக்கு இல்லாமல் இருப்பது இரண்டாவது பலவீனம். அரவிந்த் கேஜரி
வாலின் தலைமை பிடிக்காமல் பல முன்னணி ஆம் ஆத்மி கட்சி
யினர் விலகி விட்டிருப்பது மூன்றாவது பலவீனம்.
ஆளும் அகாலிதளக் கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. 2011-இல் தி.மு.க. ஆட்சியின்மீது தமிழகத்தில் என்னவெல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்தனவோ அவையெல்லாம் அகாலிதளத் தலைமை மீது பஞ்சாபில் எழுப்பப்
படுகின்றன. முதல்வர் பிரகாஷ்சிங் பாதலின் குடும்பத்தினர்தான், பஞ்சாபின் திரைத்துறை, தொலைக்காட்சி உள்பட எல்லா பெரிய தொழில்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். போதை மருந்து விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத நடவடிக்கை
களையும் பிரகாஷ்சிங் பாதலின் குடும்பத்தினர் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவையெல்லாம், அந்தக் கட்சியின்மீது கடுமையான அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வானது அகாலி தளத்திற்கு வலு சேர்க்குமா என்றால் அதுவும் இல்லை. ரூபாய் நோட்டுச் செலா
வணியைச் செல்லாததாக்கியதால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடுமையான அதிருப்தியும், நடுத்தர, அடித்தட்டு மக்கள் அனுபவித்த சிரமங்களும் அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையை பஞ்சாபில் ஏற்படுத்திருக்கிறது.
இவையெல்லாம் எதிர்க்கட்சியான காங்கிரஸýக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றன. தேர்தலுக்கு முன்னால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் 56 முதல் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. அகாலிதள - பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு எதிரான மனநிலை காங்கிரஸýக்குத்தான் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறுவது சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் காங்கிரஸில் சேருவதற்கு ஏனைய கட்சிகளிலிருந்து முக்கியமான பல தலைவர்கள் வரிசை கட்டி நின்றனர், இணைந்தனர். அகாலிதளத்திலிருந்து 28, ஆம் ஆத்மியி
லிருந்து 11, பா.ஜ.க.விலிருந்து 6 முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார்கள். அதனால், வழக்கத்துக்கு அதிகமான உள்கட்சிப் பூசல்களும், போட்டி வேட்பாளர்களும்தான் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கக்கூடும்.
வழக்கம்போல, தேர்தல் பிரசாரத்தின்போது போதை மருந்து, பணம், தங்கம் என்று ரூ.116 கோடி பல்வேறு சோதனைகளில் சிக்கியிருக்கிறது. 2,142 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எந்த முக்கியத் தலைவரோ, அரசியல்வாதியோ, வேட்பாளரோ இதில் சிக்க மாட்டார், தண்டிக்கப்பட மாட்டார் என்பது திண்ணம். செலாவணி செல்லாததாக்கியதால் தேர்தலில் கருப்புப் பணப் புழக்கம் குறையும் என்பதைப் பொய்ப்பித்திருக்கிறது பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்.
உத்தரப் பிரதேச வெற்றிதான், அடுத்த மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் என்றால், பஞ்சாப் தேர்தல் முடிவுகள், வருங்கால தேசிய அரசியலில் எதிர்க்கட்சியாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும். மறந்து விடாதீர்கள், பஞ்சாபில் போட்டி என்பது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸýக்கும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com