உறுப்புதானம்!

மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்போது, உறுப்புதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய உத்தேசித்திருக்கிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்போது, உறுப்புதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய உத்தேசித்திருக்கிறது. ஓட்டுநர் உரிமத்தில் "உறுப்புதானம் செய்ய விழைகிறோம்' என்று குறிப்பிட்டிருந்தால், விபத்தில் அசாதாரண மரணம் சம்பவித்தால் அந்த நபரின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேறு அனுமதி பெற வேண்டிய அவசியமிருக்காது. ஏற்கெனவே உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தில் உறுப்புதானத்துக்கு அனுமதி வழங்கவும் வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. இது வரவேற்கத்தக்க முடிவு.
சாதாரணமாக விபத்தில் மரணமடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் அனுமதிப்பதில்லை. அது ஆசார விரோதம் என்று கருதுபவர்களும், மறைந்து போனவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று கருதுபவர்களும்தான் அதிகம். இந்த மூடத்தனமான பிடிவாதத்தால் வேறு யாருக்காவது உயிர்ப் பாதுகாப்பு அளிப்பது தடுக்கப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் உறுப்புதானம் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஆனால், ஒப்புதல் தந்திருந்தால், அவர் விபத்தில் மரணமடைந்தால் அவரது உறுப்புகளை இன்னொருவருக்கு பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல் இருக்காது.
2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஏறத்தாழ 1,49,000 பேர் சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறார்கள். சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திலும் 17 பேர் மரணமடைந்ததாக 2015 புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்படி சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 10.5% பேர், 18 வயது நிரம்பாத இளைஞர்களும் குழந்தைகளும். அந்தப் புள்ளிவிவரப்படி, இந்தியாவிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் நிகழ்வது உத்தரப் பிரதேசத்தில் (12.4%). தமிழகமும் (10.5%), மகாராஷ்டிரமும் (9.2%) இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.
இரு சக்கர வாகன விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2015-இல் 43,540 என்றால், பொறுப்பில்லாமலும், அதிவேகத்திலும் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட மரணங்கள் 48,093. இந்தியாவில், சுதந்திரம் அடைந்தது முதல், நமது ராணுவ வீரர்கள் போரில் வீரமரணம் அடைந்த எண்ணிக்கையைவிட அதிகமானவர்கள் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள்.
இத்தனை உயிர் இழப்புகள் எந்த அளவுக்கு வேதனை அளிக்கிறதோ, அதைவிட வேதனை அளிப்பது அப்படி மரணமடைந்தவர்களின் உறுப்புகள் இன்னொருவர் உயிரைக் காப்பாற்ற பயன்படாமல் போவது. இறந்தவர்களில் மிகவும் குறைவானவர்களின் உறுப்புகள் மட்டுமே தானம் செய்யப்பட்டு, வேறொரு உயிரைக் காப்பாற்ற பயன்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கான சிறப்பு மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுந்த அளவில் மருத்துவ வசதிகள் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. மாற்று உறுப்பு தேவைப்படும் பெரும்பாலானவர்களுக்கு உயிரோடு இருப்பவர்களிடமிருந்தும், மரணமடைந்தவர்களிடமிருந்தும் உறுப்புதானம் கிடைப்பதில்லை. அதனால்தான் அதற்கான கட்டமைப்பு வசதிகள் மருத்துவமனைகளில் அதிகரிக்கவில்லை.
"தேசிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனம்' என்கிற அரசு அமைப்பு 2014-இல் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் காணப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்று இரட்டிப்பாக அதிகரித்திருந்தால்கூட வியப்பில்லை. "நோட்டோ' என்கிற அந்த அமைப்பின் பரிந்துரையின்பேரில்தான் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, ஓட்டுநர் உரிமத்தின் உறுப்புதானத்தையும் இணைக்க முற்பட்டிருக்கிறது.
ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரகங்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது. ஆனால், 2014-இல் நடந்த மொத்த சிறுநீரக அறுவை சிகிச்சைகள் வெறும் 1,917 மட்டுமே. ஏனைய சிறுநீரக நோயாளிகளின் விதி என்னவாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான தேவை இருக்கும்போது, வெறும் 803 மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடைபெற்றன. இதே நிலைமைதான் இருதய மாற்று அறுவை சிகிச்சையிலும், கண், கணையம் மாற்று அறுவை சிகிச்சையிலும் காணப்படுகிறது. இந்தியாவில் உறுப்புதான விகிதம் பத்து லட்சம் பேருக்கு 0.26 மட்டும் என்றால் அமெரிக்காவில் இதுவே பத்து லட்சத்திற்கு 26 பேர். ஏனைய சில மேலை நாடுகளில் இந்த விகிதம் மேலும் அதிகம்.
உறுப்புதானத்தை ஊக்குவிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சட்ட திட்டங்கள், விதிமுறைகள் மாற்றப்பட்டு, அதற்கான சேவை மையங்களை உருவாக்கி மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட, மக்கள் மத்தியில் இது குறித்தான விழிப்பு ஏற்பட்டபாடில்லை. அதிக அளவிலான உறுப்புதானம் இல்லாததால், பல தவறான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
உறுப்புதானம் என்பது பலருக்கு ஜீவ மரணப் போராட்டத்திற்கான தீர்வு. ஆகவே, உறுப்புதானத்தை ஊக்குவிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவரும் முனைப்பு காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்புதலை ஓட்டுநர் உரிமத்தில் இணைப்பது புதிது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். இப்போதுதான் செய்கிறார்கள். காலம் கடந்தாவது இதுகுறித்து சிந்தித்திருக்கிறதே அரசு, அதற்காகப் பாராட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com