வல்லான் வகுப்பதே சட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலே சர்ச்சைகள் தொடர்கின்றன. தைவான் அதிபர் சாய் இங்க்-வென் அவருக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தபோது,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலே சர்ச்சைகள் தொடர்கின்றன. தைவான் அதிபர் சாய் இங்க்-வென் அவருக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தபோது, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் எரிமலையே வெடித்தது. தைவான் தனக்குச் சொந்தமான பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதனால், தைவான் நாட்டு அதிபரின் வாழ்த்தை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஏற்றுக் கொள்வதை சீனாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவுடனான நெருக்கத்தை அமெரிக்கா 1980-இல் ஏற்படுத்திக் கொண்டது முதல் இருந்த இடைவெளியை, தைவான் அதிபர் சாய் இங்க்-வென்னின் தொலைபேசி வாழ்த்து அகற்றியது. பதிலுக்குத் தனது பதவி ஏற்புக்குத் தைவான் நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
அத்துடன் நின்றுவிடவில்லை. தனது ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட தொழில் அணுகுமுறையிலும், செலாவணிக் கொள்கையிலும் சீனா மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் "ஒரே சீனா' என்கிற சீனாவின் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று தடாலடியாக ஒரு பேட்டியில் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இந்தப் பரபரப்புக்கெல்லாம் திடீரென்று முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது கடந்த வாரம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனான அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல்.
அதிபர் டிரம்ப் பதவி ஏற்று மூன்று வாரங்களுக்குப் பிறகுதான், உலகின் மிக முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றான சீனாவின் அதிபருடன் தொடர்பு கொள்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்றுதான். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரத் தொடர்பின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டியது சீனா அதிபருடன்தான். சீனா அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேசுவதற்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
அமெரிக்காவால் அவ்வளவு எளிதாக சீனாவைப் புறம்தள்ளிவிடவோ, ஒதுக்கிவிடவோ முடியாது. நூறுக்கும் அதிகமான அமெரிக்கப் பன்னாட்டு வணிகக் குழுமங்கள் சீனாவில் செயல்பட்டு வருகின்றன. சீனாவில் அமெரிக்க முதலீடு என்று எடுத்துக்கொண்டால், அது 48 பில்லியன் டாலர்களைத் தாண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க - சீனா வர்த்தகத்தில், அமெரிக்கா மிக அதிகமான பற்றாக்குறை வைத்திருக்கும் நாடு சீனாதான். சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் இறக்குமதி அந்த அளவுக்கு அதிகம்.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் சீன முதலீடும் கணிசமானது. சீனா தனது அமெரிக்க முதலீடுகளைத் திரும்பப் பெறுமானால் அமெரிக்காவே திவாலானாலும் வியப்படையத் தேவையில்லை. இப்படி இருக்கும்போது, சீனாவைக் கோபப்படுத்தும் விதத்தில், சீனா தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் பாராட்டுவதை பெய்ஜிங் எப்படி சகித்துக் கொள்ளும்?
அமெரிக்க நிர்வாகம் சுறுசுறுப்பானது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிப்படைவதற்குள், சீனாவுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள்.
மிகவும் தாமதமாக, சீனா அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு அதிபர் டிரம்ப் சீனப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து செய்தி அனுப்பினார். "ஒரே சீனா' கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அதிபர் டிரம்பின் சார்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இரண்டு அதிபர்களும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள்.
தனது "ஒரே சீனா' கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளுடன் சீனா தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அதேதான் நிலைமை. தைவானுடன் ராஜீய உறவு வைத்துக்கொள்வதை சீனா அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியாவில் தைவான் தூதரகம், தைவான் வர்த்தக மையமாக செயல்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி ஏற்பு விழாவுக்கு தைவானின் வர்த்தகப் பிரதிநிதிகளையும், திபெத்தின் தலைவர் தலாய் லாமாவையும் அழைத்ததற்கு சீனா கடும் அதிருப்தியைத் தெரிவித்தது.
தைவான், திபெத் ஆகிய இரண்டு நாடுகளுமே தாங்கள் சீனாவின் பகுதி என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. திபெத் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்றால், தைவான் தனி நாடாக சுதந்திரமாக இயங்குகிறது. 1959-இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த தலாய் லாமாதான், சீனப் போருக்கான முக்கியமான காரணம் என்றுகூடக் கூறலாம்.
தனது பகுதிகள் என்று கருதும் தைவான், திபெத் குறித்து இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படும் சீனா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஏற்றுக் கொள்கிறதா என்றால் இல்லை. அருணாசலப் பிரதேசத்திலிருந்தும், காஷ்மீரிலிருந்தும் சீனாவுக்குப் போகும் இந்தியர்களுக்கு நுழைவு மறுக்கப்படுகிறது. அவை பிரச்னைக்குரிய பகுதிகள் என்று கூறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்தியப் பகுதிகளான கில்ஜித் - பால்டிஸ்தானில் தனது ராணுவத்தை அனுப்பி, பாகிஸ்தான் ராணுவம் சாலைகள் அமைக்கவும், அணைகள் கட்டவும் உதவுகிறது.
"ஒரே சீனா' கொள்கை சரி, அதேபோல, "ஒரே இந்தியா' என்பதையும் ஏற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை. சீனாவின் இந்த இரட்டை நியாயத்தைத் தட்டிக்கேட்க ஆளில்லை. அதிபர் டிரம்பே அடங்கிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com