முடிவு காட்டும் தெளிவு!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநகராட்சி

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநகராட்சி பிருஹன் மும்பை மாநகராட்சிதான். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியும் அதுதான். இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பை மாநகராட்சியின் வருவாய், பல சிறிய மாநிலங்களின் வருவாயைவிட அதிகம். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதற்குப் பிறகு நடை
பெறும் முக்கியமான தேர்தல் மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் முடிவு மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்பதால் மிகவும் அதிகமாக பணமும், கருப்புப் பணமும் புழங்கும் இடம் மும்பையாகத்தான் இருக்க வேண்டும். அதேபோல, உள்ளாட்சித் தேர்தல் என்பதால் எந்த அளவுக்கு சாமானிய, அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் செலாவணி செல்லாததாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டு பா.ஜ.க.வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதும் வாக்களிப்பில் தெரிந்துவிடும். மக்கள் மத்தியில் செலாவணி செல்லாததாக்கப்பட்டது எந்த பாதிப்பையோ, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையையோ ஏற்படுத்தவில்லை என்பதை மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் இன்னொரு காரணத்திற்காகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 2014 மக்களவைத் தேர்தல் வரை, மகாராஷ்டிராவில் சிவசேனாவின் தலைமையில்தான் சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருந்துவந்தது. அந்தக் கூட்டணி அதற்கு முன்னால் ஆட்சியைப் பிடித்தபோதெல்லாம், சிவசேனா தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவிலுள்ள 48 தொகுதிகளில் அந்தக் கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியது. அதில்
23 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க., சிவசேனாவைவிட ஐந்து இடங்கள் அதிகமாகவே வெற்றி பெற்றிருந்தது.
அதுவரை இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டுவந்த பா.ஜ.க.வும் சிவசேனாவும் சுருதிமாறிப் பேசத் தொடங்கின. 2014 அக்டோபரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தொகுதிப்பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. விளைவு, அதுவரை சிவசேனாவின் நிழலில் செயல்பட்டுவந்த பா.ஜ.க. 289 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் 122 இடங்களை வென்று, அதிக எண்ணிக்கையுள்ள கட்சியாக உயர்ந்தது. சிவசேனா 63 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாகியது. தேர்தலுக்குப் பிறகு, இரண்டு கட்சிகளும் சமரசம் செய்துகொண்டு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கின்றன.
மத்திய அரசிலும், மாநில அரசிலும் பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும்கூட, அந்தக் கட்சியுடனான உறவு சுமுகமாகத் தொடரவில்லை. பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அரசையும் பல்வேறு பிரச்னைகளில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான "சாம்னா' தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலைப்போலவே, தொகுதிப்பங்கீட்டு பிரச்னை ஏற்பட்டு, கூட்டணிக் கட்சிகள் பிரிந்து தனித்தனியே போட்டியிடுவது என்று முடிவெடுத்தன.
பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி பிளவு என்பது நியாயமாகப் பார்த்தால், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் போட்டிக் கட்சியான மகாராஷ்டிர நவநிர்மாண் சமிதி ஆகியவற்றிற்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் மிகப்பெரிய வியப்பு இந்தக் கட்சிகள் அனைத்துமே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கின்றன என்பதுதான்.
பிருஹன் மும்பை மாநகராட்சியையே எடுத்துக்கொண்டால், 227 இடங்களில் பா.ஜ.க. 82 இடங்களிலும், சிவசேனா 84 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் 31 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்ற முடிந்திருக்கிறது. பெரிய கட்சியாக சிவசேனா வெற்றி பெற்றாலும்கூட, மாநகராட்சியைக் கைப்பற்ற அதற்கு பா.ஜ.க.வின் ஆதரவு கிடைத்தாக வேண்டும். அப்படி காங்கிரஸýம், தேசியவாத காங்கிரஸýம் ஆதரிக்க முன்வந்தால் மட்டும்தான் சிவசேனாவால் மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற முடியும். அதற்கான வாய்ப்பில்லை.
தாணே மட்டும்தான் சிவசேனா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் ஒரே மாநகராட்சி. புணே, நாசிக், நாகபுரி, பிம்ப்ரி சிஞ்ச்வாத், அகோலா, அமராவதி ஆகிய மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடனும், உல்லாஸ் நகர், சோலாபூர் மாநகராட்சிகளை சுயேச்சைகளின் ஆதரவுடனும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் தயவில்லாமல் தனது சொந்த பலத்தில் பா.ஜ.க. காலூன்றிவிட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
சிவசேனாவைப் பொருத்தவரை, மும்பையிலும், தாணேயிலும் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சமிதி நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் முடிவுகள் காட்டும் தெளிவு. காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டதும், தேசியவாத காங்கிரஸ் வலுவிழந்து விட்டதும் முடிவுகள் தெரிவிக்கும் உண்மை.
செலாவணி செல்லாததாக்கப்பட்டதால் வாக்காளர்களால் பா.ஜ.க. நிராகரிக்கப்பட்டுவிடவில்லை என்பதே, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பா.ஜ.க.வுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com