ஒபாமாவின் குரல்!

இன்றுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் எட்டாண்டு வெள்ளை மாளிகை வாசம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவின் 44-ஆவது அதிபராக, மிகவும் சிக்கலான சர்வதேசச் சூழலில்,

இன்றுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் எட்டாண்டு வெள்ளை மாளிகை வாசம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவின் 44-ஆவது அதிபராக, மிகவும் சிக்கலான சர்வதேசச் சூழலில், எட்டாண்டுகள் பதவி வகித்த பராக் ஒபாமா, விடைபெறும்போது, அவருடன் வெள்ளை மாளிகையிலிருந்து பல ஜனநாயகப் பண்புகளும் விடை பெற்று விடக்கூடாது என்கிற அச்சம் நடுநிலையாளர்களிடம் எழுகிறது.
பத்து நாள்களுக்கு முன்னால், வழக்கமாக எல்லா அமெரிக்க அதிபர்களையும் போல, ஒபாமாவும் விடைபெறும் முன்பாக கடைசி உரையை சிகாகோவில் நிகழ்த்தினார். முதலாவது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் காலத்திலிருந்து பின்பற்றப்படும் வழக்கம் இது. அதிபர் பராக் ஒபாமாவின் விடைபெறும் உரை, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே விடுக்கப்பட்ட செய்தியாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
உலகுக்கு, அதன் விசாலப் பார்வையையும், பன்முகத் தன்மையையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாட்டையும் நினைவுபடுத்திய அதிபர் ஒபாமா குறுகிய தேசிய உணர்வு கடந்த பல ஆண்டுகளாக உருவாக்கிய மனித இனத்தின் ஒற்றுமையையும், நட்புறவையும் குலைத்துவிடக் கூடாது என்று எச்சரித்திருப்பது காலத்திற்கேற்ற வேண்டுகோள். வழிகாட்டுதல். "இனவெறி கைவிடப்பட்டாலும் இன உணர்வு அகன்றபாடில்லை. இது சக்தி வாய்ந்த பிளவுபடுத்தும் சக்தியாகத் தொடர்கிறது' என்கிற அதிபர் ஒபாமாவின் கருத்து உலகுக்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.
"மக்களை தேசியத்தின் பெயரிலும், இன ரீதியாகவும் பிளவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. அமெரிக்க முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், வருங்காலத்திற்கும் இது நல்லதல்ல என்று அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே பேசி இருப்பது, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை மீதான மறைமுகத் தாக்குதல்.
உலகிலுள்ள பல ஜனநாயக நாடுகளில், பன்முகத் தன்மை மறைந்து, சிறுபான்மையினருக்கு எதிராகவும், புலம்பெயர்ந்து அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு எதிராகவும் வெறுப்பு மனப்போக்கு மேலெழுந்து வருகிறது. குடியேறிய சிறுபான்மையினரின் கடுமையான உழைப்பால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிறது என்கிற ஆத்திரம் மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை மக்களுக்கு பரவலாக ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவையே எடுத்துக் கொண்டால், சிறுபான்மையினரான ஆசியர்கள்மீதும், மெக்சிகோவினர்மீதும் வெறுப்பு காணப்படுகிறது.
"எல்லோருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்படாவிட்டால், தேசங்கள் கருத்து வேறுபாடுகளால் பிளவுபடும். அதேநேரத்தில், எந்தவொரு ஜனநாயகமும் ஒரே இனம், ஒரே கலாசாரம், ஒரே மதம் என்கிற இரும்புக் கூண்டுக்குள் செயல்பட்டுவிட முடியாது. ஜனநாயகம் என்று சொன்னாலே, கருத்து வேறுபாடுகள் என்பதாகவும் விவாதத்தின் மூலம் தீர்வு காண்பதாகவும்தான் இருந்தாக வேண்டும் என்கிற அதிபர் ஒபாமாவின் கூற்று, புலம்பெயர்தலுக்கும் குடியேற்றத்துக்கும் ஆதரவாக எழுப்பப்பட்டிருக்கும் வலிமையான வாதம்.
"ஒருபுறம் வணிகமும் முதலீடும் உலகமயமாக வேண்டும் என்று குரலெழுப்பிக் கொண்டு, இன்னொருபுறம் எல்லை கடந்து பணிபுரியும் தொழிலாளர்களின் குடியேற்றத்தைத் தடுப்பது என்பது எப்படி சாத்தியம்? மதத்தின் பெயரால் செயல்படும் தீவிரவாதிகளும் சரி, கலாசார அறிவுறுத்தல் மூலம் அரசியல் லாபம் தேடுபவர்களும் சரி, மனித குலத்தின் மனத்தில் விஷம் பாய்ச்சுகிறார்கள். இதை எதிர்கொள்ளத் தலைசிறந்த ஆயுதம் சட்டத்தின் மேன்மையையும், மனித உரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும், சுதந்திரமான ஊடகங்களையும் அனுமதிக்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதான்' என்று விடைபெறும் உரையில் கூறியிருக்கும் ஒபாமாவின் கருத்தை உலகம் உள்வாங்கிக் கொள்வதுதான் உய்வுக்கு ஒரே வழி. இன்னும் நான்கு ஆண்டுகள் நீங்களே தொடர வேண்டும் என்று எழுந்த மக்களின் கோரிக்கையை புன்சிரிப்புடன் மறுத்த அதிபர் ஒபாமா, தங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எப்படி அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தாரோ, அதேபோல கண்ணியமாகத் தானும் டொனால்ட் டிரம்பிடம் பதவியை ஒப்படைக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.
2008-இல் அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தவரான பராக் ஒபாமா கடந்த எட்டு ஆண்டுகளில் உள்நாட்டு அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் விட்டுச் செல்லும் சாதனைகள் ஏராளம். மூழ்கிக் கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தனது முதல் நான்காண்டுப் பதவிக் காலத்தில் தூக்கி நிறுத்தியது மிகப்பெரிய சாதனை. அவர் குறிப்பிடுவதுபோல, வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த பத்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தமும், கியூபாவுடனான நட்புறவும், ஒஸாமா பின்லாடனுக்கு முடிவுகட்டி அமெரிக்கா எதிர்கொள்ளும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியது, 2009-இல் நோபல் பரிசு வழங்கப்பட்ட அதிபர் ஒபாமாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறலாம். ஆனால், உலகத்தின் மனசாட்சியாக, அவரது குரல் இன உணர்வுகளுக்கும், பிரிவினைகளுக்கும் எதிராக ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது மனிதநேயத்தின், சமதர்ம சிந்தனையின், தர்மத்தின் குரல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com