வெற்றிக் களிப்பில்...!

இந்திய பாட்மிண்டன் மிகப்பெரிய அளவில்

இந்திய பாட்மிண்டன் மிகப்பெரிய அளவில் மறுமலர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. நமது வீரர்களும் வீராங்கனைகளும் சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சர்வதேச பாட்மிண்டன் ஒற்றையர் தரவரிசையில் 8-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்தியர் இவர்தான்.
சாய் பிரணீத் 15-ஆவது இடத்திலும், அஜய் ஜெயராம் 16-ஆவது இடத்திலும், எச்.எஸ். பிரணாய் 23-ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பி.வி. சிந்து 5-ஆவது இடத்திலும், சாய்னா நெவால் 15-ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பந்தயத்தில் ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற நேர் செட்களில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஷென் லாங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பந்தயத்தில் ஜப்பானின் கஜுமாஸô சக்காயை வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த். இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றிருக்கிறார்.
இந்தோனேசிய ஓபன் போட்டியில் ஜப்பானியரான கஜுமாஸô சக்காயையும், ஆஸ்திரேலிய ஓபன் பந்தயத்தில் சீனாவின் ஷென் லாங்கையும் ஸ்ரீகாந்த் தோற்கடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இது சர்வதேச பாட்மிண்டன் வட்டாரங்களில் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.
கஜுமாஸô சக்காயும், ஷென் லாங்கும் உலகளவில் தலைசிறந்த பாட்மிண்டன் விளையாட்டுக்காரர்கள் என்று அறியப்பட்டவர்கள். அவர்களுடன் மோதி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சர்வதேசத் தரவரிசையில் எட்டாவது இடத்தை ஸ்ரீகாந்த் அடைய முடிந்திருக்கிறது.
24 வயது ஸ்ரீகாந்த்தின் அபார விளையாட்டைப் போலவே இந்திய அணியின் ஏனைய வீரர்களும் சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். இந்திய பாட்மிண்டன் வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், எச்.எஸ். பிரணாய் ஆகியோர் உலகின் முன்னணி வீரர்கள் பலரை வெற்றிக் கண்டு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
இப்போதைய உலக நெம்பர் 1 ஆன தென் கொரியாவின் சன் வான்கோவை கடந்த மாதம் 2 முறை ஸ்ரீகாந்த் வெற்றி கண்டிருக்கிறார். சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் சீனாவின் ஷென் லாங்கை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் உலகின் நான்காம் நிலை வீரரான சீனாவின் ஷி யூகியை இரண்டு முறை இந்த ஆண்டில் ஸ்ரீகாந்த் தோற்கடித்திருக்கிறார். இத்தனைக்கும் 2014 ஜூலையில் மூளைக்காய்ச்சலால் ஸ்ரீகாந்த் பாதிக்கப்பட்டபோது இனிமேல் அவரது வெற்றிப் பயணம் முடிந்துவிட்டது என்றுதான் பலரும் கருதினார்கள். இப்போது அநேகமாக எல்லா முன்னணி சீன விளையாட்டு வீரர்களையும் அவர் தோற்கடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீகாந்துக்கும் பிரணாய்க்கும் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல பிரணீத்தின் சாதனைகள். சிங்கப்பூர் ஓபன் பந்தயத்திலும், தாய்லாந்து ஓபன் பந்தயத்திலும் வெற்றி பெற்று அவரும் தரவரிசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீகாந்த், பிரணீத், பிரணாய் ஆகியோர் அடங்கிய மூவர் அணி அடுத்து ஆகஸ்ட் மாதம் கிளாஸ்கோவில் நடக்க இருக்கின்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சித் தோல்விகளை அளித்து இந்திய பாட்மிண்டனுக்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
சாய்னா நெவாலும், பி.வி.சிந்துவும் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றி பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். ஐந்தாவது இடத்திலிருக்கும் பி.வி.சிந்துவும் சரி, 15-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா நெவாலும் சரி ஆடவர்களுக்கு நிகரான வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். பி.வி.சிந்து, சாய்னா நெவால் இருவருடன் ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர்கள் காஷ்யப், அஜய் ஜெயராம், ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், சமீர் வர்மா, எச்.எஸ். பிரணாய் என்று சர்வதேச அரங்கில் இந்திய பாட்மிண்டன் வீரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
இந்திய பாட்மிண்டன் அணியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் வீரர்களின் உறுதியான நிலைப்பாங்கு (கன்சிஸ்டன்சி). இந்திய வீரர்கள் தங்களால் எந்தவொரு சர்வதேச விளையாட்டு வீரருடனும் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பது அவர்களது விளையாட்டில் தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக ஸ்ரீகாந்த்தின் ஆட்டத்தில் முரட்டுத்தனமான அசுர அடிகளை (ஸ்மாஷஸ்) விட்டுவிட்டு புத்திசாலித்தனமான லாவக கையாளுதல் (டெப்த் டச்) மற்றும் துல்லியத் தாக்குதல்கள் (சாப்ட் ஸ்ட்ரோக்) அவரின் விளையாட்டைப் புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
இன்றைய எல்லா சர்வதேச பாட்மிண்டன் விளையாட்டு வீரர் களும் ஏதாவது ஓர் இந்திய வீரரிடம் தோல்வியை தழுவியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இந்த ஆண்டு பாட்மிண்டனுக்கான உலகச் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஆடவர், மகளிர் ஒற்றையர் பந்தயத்தில் இந்தியா நிச்சயமாக வெற்றிவாகைச் சூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com