சிறப்புரிமையா? தனிமனித சுதந்திரமா?

இந்திய அரசியல் சாசனம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு

இந்திய அரசியல் சாசனம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சில சிறப்பு உரிமைகளை வழங்கியிருக்கிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 305, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழுக்கள் ஆகியவற்றின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் பற்றியதுஎன்றால், சட்டப் பிரிவு 194, சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய அதிகாரங்கள், சிறப்புரிமைகள் குறித்தது. இந்த சட்டப் பிரிவுகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் வெளியிடும் கருத்துகள், குற்றச்சாட்டுகள், அவர்களது அவை நடவடிக்கைகள் ஆகியவை நீதிமன்ற வழக்குகளுக்கோ, விசாரணைக்கோ அவர்களை உட்படுத்தாமல் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சிறப்புரிமைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த சட்டப் பிரிவுகளின்படி, நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தங்களது சிறப்புரிமைகள் குறித்த கேள்விக்கோ, விவாதத்துக்கோ அவர்களேதான் நீதிபதிகளாக இருந்து முடிவு எடுக்க முடியுமே தவிர, வெளியிலிருந்து ஒருவர் அவர்களை கேள்வி கேட்க முடியாது.
இப்படி ஒரு சட்டப் பிரிவுக்கான தேவை இல்லை என்று முழுமையாக மறுத்து விட முடியாது. உறுப்பினர் ஒருவர் சபையில் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கு தொடரலாம் அல்லது அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் மக்கள் பிரச்னைகள் குறித்து அவர்கள் அவையில் குரல் எழுப்ப முடியாமல் போய்விடும்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் உரிமை மீறல் குறித்து விசாரிக்க 10 அல்லது 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஓர் உறுப்பினர் அரசு ஊழியரால் அவமதிக்கப்படுகிறார், பொது விழாக்களுக்கு அழைக்கப்படாமல் இருக்கிறார், புதிய திட்டங்கள், அமைப்புகளில் உறுப்பினரை அரசு ஊழியர் புறக்கணிக்கிறார் என்றால் அந்த உறுப்பினர் உரிமை மீறல் குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதினால் அது குறித்து அந்தக் குழு விசாரித்து சட்டப்பேரவைத் தலைவருக்கு பரிந்துரை வழங்கும். அது குறித்து அவை விவாதித்து, உரிமை மீறல் குழுவின் பரிந்துரைப்படி தண்டனை வழங்கலாம், அல்லது வழங்காமல் இருக்கலாம்.
அதே நேரத்தில் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் என்னென்ன என்பதை அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்காத நிலையில், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவர் பி.எச். பாண்டியன் குறிப்பிட்டதுபோல, வானளாவிய அதிகாரத்தை பெற்றுவிடுகிறது. இது சபையின், உறுப்பினர்களின் மாண்பைப் பாதுகாப்பதற்குப் பதிலாக விமர்சிப்பவர்கள் அனைவரின் வாய்க்கும் பூட்டுப் போடுவதாக அமைந்துவிடுகிறது.
இந்தியாவின் எந்த ஒரு குடிமகனுக்கும் சுதந்திரமான, நேர்மையான விசாரணைக்கு உரிமையுண்டு. ஆனால், அவை உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் விமர்சனங்களை விசாரிக்கும்போது அவையே நீதிபதிகளாக மாறி, அவர்களுக்கு எதிரான விமர்சனங்களை விசாரிக்கும் விபரீதத்துக்கு வழிகோலுகிறது.
சட்டப்பேரவைகள் பலவும் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் சிறப்புரிமை சட்டத்தைப் பயன்படுத்தித் தங்களை விமர்சிப்பவர்களை தண்டிக்க முற்படுவது வழக்கமாகிவிட்டது. மகாராஷ்டிரத்தில் அதிவிரைவாக வாகனத்தை ஓட்டிச் சென்ற உறுப்பினர் ஒருவரின் வாகனத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார். அவர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டு சட்டப்பேரவை முன் நிறுத்தி அந்த அதிகாரி குற்றவாளி ஆக்கப்பட்டார். உறுப்பினர் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார்.
கேலிச்சித்திரம் வரைந்ததற்காகவும், அரசை விமர்சித்து தலையங்கம், கட்டுரை எழுதியதற்காகவும் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் ஆண்டுதோறும் பலரை உரிமை மீறல் குழுவுக்கு அழைத்து விசாரணை நடத்துவது தொடர்கிறது. ஆனால், பெரும்பாலான நிகழ்வுகளில் விசாரணை கைவிடப்படுவது, சில நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களின் வருத்தத்தை ஏற்று அல்லது அவர்களது நிலைப்பாட்டை அங்கீகரித்து நடவடிக்கை கைவிடப்படுகிறது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர், உரிமை மீறல் குழுவின் வெவ்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறார். கர்நாடக உயர்நீதிமன்றம் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரியிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், 'ஹாய் பெங்களூரு' என்கிற பத்திரிகையின் ஆசிரியர் ரவிபெலகரெ மீது உரிமை மீறல் குழுவில் புகார் கொடுத்தவர், அந்தக் குழுவின் தலைவராக இருந்து தண்டனைக்கு பரிந்துரை செய்தவர், இப்போது அவைத் தலைவராக மாறியிருக்கும் நிலையில் தண்டனையும் வழங்கியிருக்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் கே.பி. கோலிவாட்டின் முடிவு பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் ஆதாரமற்றவையாகவோ, உறுப்பினரின் மாண்பைக் குலைப்பதாகவோ இருந்தால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை அணுகிக் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குத் தொடரலாம் எனும்போது சட்டப்பேரவை உரிமை மீறல் என்கிற அரசியல் சாசனக் கவசத்துக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டு, ஊடகங்களைப் பழிவாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? இதுகுறித்து தேசிய அளவிலான விவாதம் நடத்தப்பட்டு சிறப்புரிமைகள் இவை இவை என்று தெளிவாகப் பட்டியல் இடப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com