"காஷ்மீரியத்' மறைந்துவிடவில்லை!

கடந்த திங்கள்கிழமை அமர்நாத் யாத்ரிகர்கள்

கடந்த திங்கள்கிழமை அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்டிருக்கின்ற எதிர்பாராத தாக்குதலுக்குப் பாதுகாப்புப் படையினரை குறைகூறுவது சரியாக இருக்காது. மிகுந்த பாதுகாப்பு இருக்கும் நிலையில்கூட பலவீனங்களை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகளால் முடிகிறது என்பதைதான் இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது.
கடந்த சில வாரங்களாகவே அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறையினரின் எச்சரிக்கைகள் இருந்திருக்கின்றன. தீவிரவாதியான ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கெங்கும் காணப்படும் போராட்டங்களை மாநில அரசும் பாதுகாப்புப் படையினரும் கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சி எடுத்துக்கொண்டு வரும் நிலையில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது என்பதையும் தீவிரவாத ஊடுருவல் தொடர்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் முற்றிலும் எதிர்பாராதது அல்ல.
குஜராத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தில் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த அமர்நாத் யாத்ரிகர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பேருந்து ஸ்ரீ அமர்நாத் வாரியத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும், பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புடன் பயணிக்கும் வாகனமாக இருக்கவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இரவு ஏழு மணிக்குப் பிறகு பயணிகளின் யாத்திரையோ, பேருந்துப் பயணமோ தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் பேருந்து மட்டும் எப்படி பயணிக்க அனுமதிக்கப்பட்டது என்பதும் வியப்பாக இருக்கிறது. சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு விதிகளை மீறி இந்த வாகனம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தியாக வேண்டும்.
அந்தப் பேருந்தில் பயணித்த யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது பேருந்தின் ஓட்டுநர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் சாதுரியமாக வாகனத்தைச் செலுத்தியதால் தீவிரவாதத் தாக்குதலில் ஏழு பேர் மட்டுமே உயிரிழக்க நேரிட்டது. 15 பேர் காயமடைந்திருந்தாலும் அவர்களது நிலை கவலைக்கிடமானதாக இல்லை. இதற்கு வாகன ஓட்டியான சலீம் கஃபூர் ஷேக்குக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். புனிதப் பயணத்திற்கு செல்லும் இந்துக்களைக் கடமையுணர்வுடன் காப்பாற்ற முற்பட்ட இஸ்லாமியரான சலீம் கஃபூர் ஷேக்குக்கு இந்திய அரசு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்.
காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய ஆடு மேய்ப்பவர் ஒருவர் 1850-இல் தற்செயலாகக் கண்டுபிடித்ததுதான் அமர்நாத் குகைக் கோயில். ஆண்டுதோறும் அமர்நாத் குகையின் உள்ளே பனிலிங்கம் உருவாகும் ஆச்சரியத்தை அவர்தான் வெளியுலகுக்குத் தெரிவித்தார். அதுமுதல் புட்டா மாலிக்கின் குடும்பத்தினரும் இந்து பூசாரிகளும் இந்த ஆலயத்தின் பாதுகாவலர்களாகத் தொடர்ந்து வந்தனர். கடந்த 2000 ஆண்டில்தான் மாநில அரசு அமர்நாத் யாத்திரையை முறைப்படுத்த ஒரு வாரியத்தை அமைக்க முற்பட்டது.
அமர்நாத் யாத்ரிகர்கள் செல்லும் வழியில் எல்லாம் அவர்களைத் தங்களது விருந்தினர்களாக கருதி அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதைக் காஷ்மீர் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். யாத்ரிகர்களின் போக்குவரத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பவர்கள் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள்தான். இந்து - முஸ்லிம் இணைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தப் பண்பைத்தான் அந்தப் பகுதி மக்கள் "காஷ்மீரியத்' (காஷ்மீரத்துவம்) என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்.
1989-இல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கியது முதல் பல சந்தர்ப்பங்களில் அமர்நாத் யாத்திரை கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 1990 முதல் காஷ்மீர் வன்முறையின் பிடியில் சிக்கி காஷ்மீரிகளான பண்டிட்டுகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அவர்களுடைய வீடுகளைவிட்டுத் தப்பியோட வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும்கூட அமர்நாத் யாத்திரை தடைப்படவில்லை. மிக மோசமாகத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில்கூடத் தங்கள் வீடுகளை யாத்ரிகர்களுக்குத் திறந்துவிட்டு அவர்கள் பத்திரமாகவும் சிரமம் இல்லாமலும் பயணத்தைத் தொடர காஷ்மீரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உதவி வருகிறார்கள்.
÷இப்படிப்பட்ட பின்னணியில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் காஷ்மீரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கி போட்டிருக்கிறது. காஷ்மீரப் பிரிவினைவாதிகளான ஹுரியத் அமைப்பின் தலைவர் கிலானி, மீர்வாயிஸ் உமர் பருக், யாசின் மாலிக் ஆகியோர் உள்பட அனைவருமே யாத்ரிகர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். ஸ்ரீநகரில் வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதலுக்கு உள்ளான யாத்ரிகர்களுக்குத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தும் கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்வலம் சென்றிருக்கிறார்கள்.
÷முதல்வர் மெஹபூபா முஃப்தி அனந்தாக்கிற்கு நேராகவே சென்று தாக்குதலில் தப்பித்த யாத்ரிகர்களுடன் திங்கள்கிழமை இரவைக் கழித்தது மட்டுமல்லாமல், இந்தத் தாக்குதல் காஷ்மீருக்கு இழுக்கு என்று கூறியிருப்பதும், எதிர்க்கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தாக்குதலைக் கண்டித்திருப்பதும், "காஷ்மீரியத்' பலவீனப்பட்டுவிடவில்லை என்பதை உணர்த்துகிறது. இந்த உணர்வை பயன்படுத்தித் காஷ்மீரையும் காஷ்மீரியத்தையும் பாதுகாத்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com