சிறைச்சாலைக்குள்ளே...

சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்துக் கடந்த அரை நூற்றாண்டுக்கும்

சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்துக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பலமுறை பலராலும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனாலும்கூட இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பதும், கைதிகள் மனிதாபிமானத்துடனும் மனித உரிமைகள் மீறப்படாமலும் நடத்தப்படவில்லை என்பதும் வேதனையளிக்கும் நடைமுறை உண்மை.
வெகுஜன நீதிக்கும், பழிவாங்கும் உணர்வுக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லியக் கோடு மட்டுமே. குற்றவாளி என்று ஒருவர் தண்டிக்கப்படுவது அவரது அன்றாட நடைமுறை சுதந்திரத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பறிக்கப்படுவது என்பதுதானே தவிர, அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்துவதாகவோ, துன்புறுத்துவதாகவோ இருப்பது அல்ல.
30 ஆண்டுகளுக்கு முன்பு பிகார் மாநிலம் பாகல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளின் கண்கள் குருடாக்கப்பட்ட கொடூரம் சிறைச்சாலைகளில் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் அங்கே நடத்தப்படுகின்றன என்பதை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது. சிறைச்சாலைகளே குற்றங்களின் ஊற்றுக்கண்ணாக மாறுவதும், கைதிகளாக இருக்கும் தாதாக்களின் கட்டுப்பாட்டில் மாறுவதற்கும் சிறை அதிகாரிகளும் துணைபோகிறார்கள் என்பது பல சிறைச்சாலைகளின் நடைமுறை நிஜங்கள்.
மும்பையிலுள்ள பைகுல்லா மகளிர் சிறைச்சாலையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஆயுள் கைதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்திய சிறைச்சாலைகளின் உண்மையான சொரூபத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. இந்தச் சம்பவம் எந்த அளவுக்கு சிறைச்சாலைக் கைதிகள் சிறை அதிகாரிகளின் அராஜகப் போக்கால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சிறைச்சாலைகளுக்குள்ளே காணப்படும் வன்முறையையும் வெளிப்படுத்துகிறது.
மஞ்சுளா ஷெட்டி என்பவர் கொலைக்குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். தனது நன்னடத்தையால் இவர் சிறைக் காப்பாளராக (வார்டன்) சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டவர். மகாராஷ்டிரா மாநிலம் புணேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையிலிருந்து இவர் சில மாதங்களுக்கு முன்னால் பைகுல்லா மகளிர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இவரது கண்ணியமான அணுகுமுறையும், கைதிகளிடம் பரிவுடனும் அதேநேரத்தில் கண்டிப்புடனும் நடந்துகொண்ட விதமும் அந்தச் சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் மத்தியில் இவர் மீது மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது. கைதிகளுக்குத் தரப்படும் உணவின் அளவு குறைவதையும், பதார்த்தங்கள் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி மஞ்சுளா ஷெட்டி தனது ஆட்சேபத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த முற்பட்டிருக்கிறார். இது ஏனைய சிறை அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுதான் மஞ்சுளா ஷெட்டி மீது சிறைக்காவலர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்.
சம்பவத்தின்போது அங்கே இருந்த கைதிகள் காவல்துறையிடம் அளித்திருக்கும் வாக்குமூலத்தின்படி, கைதிகளுக்குக் காலையில் வழங்கப்படும் உணவு குறைவாக இருப்பது குறித்து மஞ்சுளா ஷெட்டி கேள்வி எழுப்பியதால் ஆத்திரப்பட்ட சிறைக் காவலர்கள் சிலர் அவரைத் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கூர்மையான கம்பிகளாலும் கரண்டி உள்ளிட்டவையாலும் சிறைக் காவலர்கள் வெறித்தனமாக அவரைக் காயப்படுத்தியது தெரியவந்திருக்கிறது.
மஞ்சுளா ஷெட்டிக்குக் கைதிகள் மத்தியில் இருந்த மரியாதையும் அன்பும் அந்தக் கைதிகளைக் கோபத்தில் பொங்கி எழச்செய்திருக்கிறது. அதற்குப் பிறகு சிறைக்காவலர்களுக்கும் கைதிகளுக்குமிடையே மிகப்பெரிய மோதல் உருவாகிப் பல கைதிகளும் சிறைக்காவலர்களும் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிறை அதிகாரிகள் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள்.
சிறைச்சாலைக்குள் கலவரச் சூழல் ஏற்பட்டதற்கு பைகுல்லா மகளிர் சிறையில் காணப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத சூழலும், காவலர்களுக்கும் கைதிகளுக்குமிடையே நீருபூத்த நெருப்பாக இருந்தவந்த வெறுப்பும்தான் காரணம். காவல்துறையினர் ஆறு சிறை அதிகாரிகளை சிறைச்சாலைக்குள்ளே நடந்த மஞ்சுளா ஷெட்டியின் கொலைக்காகக் கைது செய்து,வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல்.
சிறைச்சாலையில் அடைக்கப்படுவதாலேயே ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகள் அகன்றுவிடுவதில்லை. கைதி ஒருவர் தனது சுதந்திரத்தை சட்ட நடைமுறைக்காக ஒப்புவிக்கும்போது அவரது உயிருக்கும், உடல் நலனுக்குமான ஏனைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்று கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மாதிரி சிறைச்சாலை நடைமுறைக் கையேடு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் வசதிகளும் செயல்பாடுகளும் நடைமுறைகளும் ஆழ்ந்த சோதனைக்கும் மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். சிறைச்சாலைகளின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படுவதும், அங்கே மனித உரிமை மீறல் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த பொதுமக்களின் நேரடிக் கண்காணிப்புக்கு அவை உட்படுத்தப்படுவதும் அவசியம்.
2016 மனித உரிமை மீறல் கண்காணிப்பு அறிக்கையின்படி 2010 முதல் 2015 வரையில் இந்தியாவில் 600 சிறைச்சாலை மரணங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டுமா, வேண்டாமா என்று உலகளாவிய அளவில் விவாதம் நடைபெறும்போது, கைதிகள் சிறையில் மரணிப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com