மாற்றம்... முன்னேற்றம்!

சுதந்திர இந்திய தமிழகத்தின் சரித்திரத்தில்

சுதந்திர இந்திய தமிழகத்தின் சரித்திரத்தில், கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி அமைச்சர்களாக இருந்தபோதெல்லாம், மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்து ஆற்றிய அரும் பணிகள் ஏராளம். சி. சுப்பிரமணியம், கல்வியமைச்சராக இருந்தபோது நடைமுறைப்படுத்திய மதிய உணவுத் திட்டத்துடன் கூடிய இலவச கல்வித் திட்டம் அகில இந்திய அளவில் ஒரு முன்னோடி செயல்பாடு.
கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முனைந்திருக்கிறார். அவரும் பள்ளிக்கல்வித் துறை செயலர் த. உதயச்சந்திரனும் நடைமுறைப்படுத்த விழைகிற மாற்றங்களால், தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறது என்று பரவலாக குற்றம்சாட்டப்படும் தமிழகத்தின் பள்ளிக்கல்வியில் வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை மக்கள் மன்றத்தில் நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது. அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும்போது அந்தப் பள்ளிகளின் வளர்ச்சியும் தரமும் உறுதிப்
படுத்தப்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட மன்னிக்கப்பட்டாலும், மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும்போது, அவர்களே அரசுப் பள்ளிகளின் தரத்தை தாழ்வாக கருதுகிறார்கள் என்பதுதான் பொருள். அரசுப் பள்ளி ஆசிரியரே தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காதபோது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அதனால்தான் வேறுவழியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பும் அவலநிலை காணப்படுகிறது.
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தரத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் கல்வியின் தரம் இல்லை என்கிற கூற்றும் ஏற்புடையதல்ல. அதற்குக் காரணம், அகில இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெறும் பலர் சமச்சீர் கல்வி முறையில் பயின்றவர்களாகவே இருக்கிறார்கள்.
மருத்துவத்திற்கான "நீட்' தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சமச்சீர் கல்வி முறை தரம் தாழ்ந்தது என்பதனால் அல்ல. "நீட்' தகுதித் தேர்வு பொதுவான தேர்வாக நடத்தப்படாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால்தான். சமச்சீர் கல்வி முறையில் நீட் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சொன்னால் அதை எப்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ அதேபோலத்தான் இதுவும்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலோ, செயல்முறை பயிற்சிக்கும் மாணவர்களின் சுய சிந்தனை திறனை மேம்படுத்துவதற்கும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இப்போது அதுகுறித்த தீவிர சிந்தனையில் அமைச்சரும் துறை செயலாளரும் பள்ளிக்கல்வித் துறையும் ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.
இந்த ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் 25 விழுக்காடு இடங்களை நிரப்புவதற்கு இணைய வழி விண்ணப்பங்கள் தரப்பட்டன. 9 ஆயிரம் சிறுபான்மை நிறுவனங்கள் அல்லாத தனியார் பள்ளிக்கூடங்களில் ஆரம்பக் கல்வி, மெட்ரிகுலேஷன் என்று இரண்டு பிரிவுகளுக்கான ஒதுக்கீடாக சுமார் 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இதற்கு 79,840 விண்ணப்பங்கள் மட்டும்தான் வந்து சேர்ந்தன.
2013-14-இல் கல்வி பெறும் உரிமையின்கீழ் மாநில ஒதுக்கீட்டில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-16-இல் 94,811 ஆக உயர்ந்தது. இப்போது விண்ணப்பங்கள் 79,840}ஆக குறைந்திருப்பது வியப்பை அளிக்கிறது.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் அதனை எல்லா பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை சிந்தித்தாக வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களும் தன்னார்வலர்களும் முனைப்புடன் பணியாற்றியாக வேண்டும்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு முறையில் இடங்கள் ஒதுக்கப்படுவது போல தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கும் ஏதாவது வழிமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், நிரப்பப்படாத இடங்களைத் தங்களது நிர்வாக இடங்களாக மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை தடுப்பதும்கூட இன்றியமையாதது.
தவறு செய்யும்போது தட்டிக் கேட்கும் ஊடகங்கள் நல்லது செய்யும்போது பாராட்டுவதற்கும் கடமைப்பட்டிருக்கின்றன.
பள்ளிக்கல்வித் துறை நல்ல பல முயற்சிகளுக்குத் தயாராகிறது. பாராட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com