வேண்டாமே மோதல்!

அதிகார மையங்களில் மோதல் ஏற்படுவது

அதிகார மையங்களில் மோதல் ஏற்படுவது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடுவதால், மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்ல, அன்றாட அலுவல்கள்கூட முடங்கிவிடும். நோக்கம் நல்லதாகவே இருந்தாலும், அதை எட்டுவதற்குக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் அனைவரையும் அரவணைத்துப் போவதாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத மனக்கசப்பையும் மோதலையும் உருவாக்குமானால், நோக்கம் பழுதுபடும்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், தில்லியைப் போலவே துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. அதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் தனது கட்டளைக்குக் கீழ்
படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமே இல்லை. கிரண் பேடி புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே, ஆட்சி அதிகாரம் முழுவதையும் தானே வழிநடத்துவது என்கிற நோக்கத்தில் செயல்படத் தொடங்கியது வேதனைக்குரியது.
புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாக நடைமுறைச் சட்ட விதி 21(5)இன் கீழ், எந்தத் துறையைச் சேர்ந்த, எந்தக் கோப்பாக இருந்தாலும் அதைக் கேட்டுப் பெறும் உரிமை துணைநிலை ஆளுநருக்கு உண்டு. அந்தத் துறை சார்ந்த செயலாளர், துணைநிலை ஆளு
நரால் கோரப்பட்ட கோப்பை அனுப்பித் தரவேண்டும் என்பதும், அப்படி அனுப்பியிருப்பதைத் தொடர்புடைய அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதும்தான் விதி.
சில முக்கிய பிரச்னைகளில் துணைநிலை ஆளுநர் இதுபோன்று கோப்புகளைக் கோருவதும், அதை அமைச்சரின் ஒப்புதலுடன் செயலாளர்கள் அனுப்பி வைப்பதும் புதிதொன்றுமல்ல. ஆனால், அன்றாட அலுவல் தொடர்பான கோப்புகளை எல்லாம் துணைநிலை ஆளுநர் கோரத் தொடங்கியபோதுதான் பிரச்னை எழுந்தது. கோப்புகளில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னால், அந்தக் கோப்புகளை துணைநிலை ஆளுநர் கோருவதை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொள்ள மறுத்ததில் வியப்பொன்றும் இல்லை.
கோப்புகளில் துறை சார்ந்த அதிகாரிகள், செயலர், தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட அமைச்சர், முதல்வர் என்று பல கட்டக் குறிப்புகள் பரிமாற்றம் நடைபெறும். இறுதி முடிவு எட்டப்பட்ட பிறகு அந்தக் கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பித் தருவதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்பதும், குறிப்புப் பரிமாற்றங்களுக்கு இடையில் கோப்புகளைத் துணைநிலை ஆளுநர் கோரும்போது, நிர்வாக இயந்திரம் ஸ்தம்பிக்கிறது என்றும் முதல்வர் நாராயணசாமி கூறுவதில் நியாயம் இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பதவி ஏற்றவுடன், கட்செவி அஞ்சல் குழு ஒன்றை ஏற்படுத்தினார். இதில், புதுச்சேரி அரசைச் சேர்ந்த எல்லா மூத்த அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டார். அதில் அமைச்சர்களையோ, சட்டப்பேரவை உறுப்பினர்களையோ சேர்த்துக் கொள்ளவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கட்செவி அஞ்சலில் உத்தரவு போடுவது, விளக்கம் கேட்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது, நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் தெரியாத நிலைமை ஏற்பட்டது. கட்செவி அஞ்சல் குழு மூலம் நடக்கும் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு முதல்வர் தடைவிதித்ததைத் தொடர்ந்து, எல்லா அதிகாரிகளும் அந்தக் குழுவிலிருந்து விலகி விட்டனர். இது கிரண்பேடியின் ஆத்திரத்தை அதிகரித்தது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், துணைநிலை ஆளுநருக்கு நிர்வாக ரீதியிலான பல அதிகாரங்கள் உண்டு. அதைப் பயன்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்படும்போது, அதற்கு முட்டுக்கட்டை போட கிரண் பேடி முற்படுகிறார் என்பது முதல்வர் தரப்பு முன்வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.
கட்செவி அஞ்சல் குழு ஒன்றை அமைத்துக் கொண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தனக்குத் தகவல் தரும்படி மக்களிடம் கேட்க முற்பட்டிருப்பது, கிரண் பேடியின் உச்சகட்ட வரம்பு மீறல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து, மத்திய அரசால் துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் கருத்துக் கேட்பது, அவர்களது செயல்பாடுகள் குறித்து விசாரிக்க முற்படுவது போன்ற செயல்பாடுகள் ஜனநாயக முரண் மட்டுமல்ல, அதிகார வரம்பு மீறலுமாகும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமுறுகிறார்கள்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வரையும், அமைச்சரவை சகாக்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் தனது ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முற்பட்டிருந்தால் அது வரவேற்புக்குரிய ஒன்று. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தன்னைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்று தரம் தாழ்த்துவதற்கும் தனது பதவியைப் பயன்படுத்த கிரண் பேடி முற்பட்டிருப்பது தவறான அணுகுமுறை.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டும்கூட தன்னால் தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பதைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிந்தித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழலரசு, நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்று துணைநிலை ஆளுநர் கருதினால் அதைக் கலைக்கப் பரிந்துரைக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதும், தானே நிர்வாகத்தை நடத்த முற்படுவதும் ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com