கூடாது... வேண்டாம்!

தலைமைத் தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு

தலைமைத் தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருக்கிறது. தனக்கு அவமரியாதை விளைவிக்கவோ, தனது கட்டளைகளை மீறவோ செய்தவர்கள் மீது நீதிமன்றங்களைப்போலவே தண்டிக்கும் அதிகாரம் தரப்பட வேண்டும் என்பதுதான் மத்திய தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோள்.
கடந்த ஒரு மாதமாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த வேண்டுகோள் மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது. அவ்வப்போது தலையெடுக்கும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நிரந்தரமான சட்டதிட்டங்களை வகுத்துவிட முடியாது. குறிப்பாக, தவறாக பயன்படுத்தக்கூடிய அதிகாரங்களை எந்த ஓர் அமைப்புக்கும் வழங்குவது ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடியக்கூடும். மத்திய சட்ட அமைச்சகம், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை நிராகரிக்காமல் பரிசீலனை செய்கிறது என்பதே வியப்பாக இருக்கிறது.
தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களது தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்கத் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டுவது என்பது புதிதொன்றுமல்ல. தேர்தல் ஆணையத்தின் ரகசிய வாக்கெடுப்பு முறை குறித்து கேள்விகள் எழுப்பப்படுமானால் அதற்கு வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதுதான் விடையாக இருக்க முடியுமே தவிர, குறை கூறுபவர்களின் வாயை அடைப்பது என்பது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அமைப்பின் அணுகுமுறையாக இருக்க முடியாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. அக்குற்றச்சாட்டுக்கு பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டில் குறைகாண தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்தது. தேசிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஐயப்பாடு எழுப்பிய ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் சவாலை எதிர்கொள்ளாமல் பின்வாங்கின.
இந்த அணுகுமுறையை தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போதே கையாண்டிருந்தால் பிரச்னை ஆரம்பத்திலேயே அடங்கியிருக்கும். தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் மீது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சில குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அந்த அதிகாரி ஆம் ஆத்மி கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளிலிருந்தும் தாம் விலகி நிற்பதாக அறிவித்து குற்றச்சாட்டின் முனையை மழுங்கடித்துவிட்டார். இதுதான் தேர்தல் ஆணையம் கையாள வேண்டிய அணுகுமுறையே தவிர, அரசியல் கட்சிகளுடன் தேவையில்லாமல் நேரடி மோதலில் ஈடுபடுவதல்ல.
தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என். சேஷன் பதவி ஏற்றதுமுதல் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் குறித்த மதிப்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது. அவரைத் தொடர்ந்து பதவி வகித்த எல்லா தலைமைத் தேர்தல் ஆணையர்களும் அவரவர் பங்குக்கு தேர்தல் நடைமுறையில் மாற்றங்களையும் வெளிப்படைத்தன்மையையும் குறையின்மையையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
டி.என். சேஷனுக்கு முற்பட்ட காலத்தில் வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குச் சாவடிகள் சூறையாடப்படுவது, கொலைகள் நடப்பது, வலுக்கட்டாயமாக கள்ள வாக்குகள் பதிவு செய்வது என்றெல்லாம் இருந்த நிலைமை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டிருக்கிறது. தேர்தல் நடைமுறையில் தவறுகளே இல்லை என்று உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயகத்திலும் சொல்லிவிட முடியாது. கூடியவரையில் இந்திய தேர்தல் வாக்கெடுப்பு முறையில் தவறுகள் களையப்பட்டு வந்திருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுமானால் அவற்றை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு வாய் பூட்டுப்போட முயற்சிப்பது என்பது மக்களாட்சி தத்துவத்தின் கழுத்தை நெரிப்பதற்கு இணையானது. இந்த பிரச்னையில் தேர்தல் ஆணையம் தன்னை நீதித்துறையுடன் ஒப்பிட முயற்சிப்பது சரியல்ல.
நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது. ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு அப்படியொரு கட்டுப்பாடு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு என்பதே கூட விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு சட்டம் - 1971 மிகவும் அரிதான பிரச்னைகளில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்று கூறப்படும்போது, தேர்தல் ஆணையம், அதேபோன்ற அதிகாரத்தை கோருவது ஜனநாயக நடைமுறையையே குலைத்துவிடும்.
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் அல்ல. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு இதுபோன்ற கட்டாயம் இருப்பதுபோல இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அச்சுறுத்தலோ எதிர்ப்போ இல்லை. நேர்மைக்கும் திறமைக்கும் கட்சி சார்பில்லாத தன்மைக்கும் இந்திய தேர்தல் ஆணையம் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் நிலையில், குறை சொல்பவர்களை கண்டிக்கும் அதிகாரத்தை கோர வேண்டிய அவசியம் அதற்கு நிச்சயமாக இல்லை.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரங்கள் ஆணைய அதிகாரிகளுக்கு வழங்குவது குறித்து அரசு சிந்திப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் ஆணையத்தை குறைகூறுபவர்கள், ஆணையத்தின் நேர்மையை சந்தேகிப்பவர்கள், ஆணையத்தின் செயல்பாட்டில் குற்றம் காண்பவர்கள் மீது ஆணையம் அவமதிப்புக்காக தண்டனை வழங்க முற்படுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம்போல, தேர்தல் ஆணையமும் அரசமைப்புச் சட்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றமாகத் தேர்தல் ஆணையம் தன்னை கருதுவது தவறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com