தெற்குக்கு வாய்ப்பு...

குடியரசுத் தலைவர் பதவி தேர்தல் தேதி ஜூலை 17 என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் பதவி தேர்தல் தேதி ஜூலை 17 என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யாராக இருக்கக்கூடும் என்பதுதான் ஊடகங்களில் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி. பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை பிரதமர் நரேந்திர மோடிதான் தீர்மானிப்பார் என்பதும், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்றாலும்கூட, இந்தக் குழு எந்தவித முடிவையும் எடுத்துவிடாது என்பதும் அனைவருக்குமே தெரியும். எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியைத் தொடங்கிவிட்டிருக்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, குடியரசுத் தலைவர் பதவி என்பது 'முதல் குடிமகன்' என்கிற அலங்காரப் பதவிதானே ஒழிய, நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பு அவரிடம் கிடையாது. அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி கூறிப் பதவியேற்றுக் கொள்கிறார்கள் என்றால், குடியரசுத் தலைவரோ, 'அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும்' என்று உறுதிமொழி கூறிப் பதவி ஏற்கிறார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல்கள், 1969 வரை பெரிய முக்கியத்துவம் பெறவில்லை. பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின என்றாலும், அவர்களது வெற்றி ஆரம்பம் முதலே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. 1969-இல், ஜாகீர் ஹுசைனின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்தான், இதுவரை நடைபெற்ற தேர்தல் களிலேயே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய ஒரே தேர்தல்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, நீலம் சஞ்சீவ ரெட்டியை காங்கிரஸ் செயற்குழுவில் முன்மொழிந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரை எதிர்த்துக் களமிறங்கிய அன்றைய குடியரசுத் துணைத்தலைவர் வி.வி. கிரிக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தபோது, ஆளும் கட்சியின் வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் பேரியக்கம் பிளவுபட்டது என்பது வரலாறு.
வி.வி. கிரி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1969 தேர்தலுக்குப் பிறகு நடந்த எல்லா தேர்தல்களிலுமே மத்தியில் ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த முறையும்கூட, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி பெறுமளவுக்கான 5,49,442 வாக்குகளுக்கு 18,000 வாக்குகள் தான் குறைவாகக் காணப்படுகிறது. அ.தி.மு.க. கோஷ்டியால் பிளவுபட்டுக் கிடந்தாலும் எல்லா கோஷ்டிகளுமே பா.ஜ.க.வின் வேட்பாளரைத்தான் ஆதரிக்கும் என்பதால், பிரதமர் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது.
ஆனாலும்கூட, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்காமல் போனால், தங்களது அரசியல் முக்கியத்துவத்தைத் தாங்களே குறைத்துக் கொள்வதாகிவிடும். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னால், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு கூட்டணியை ஏற்படுத்த, குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும்.
2007-இல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிக்காமல், மராட்டியர் என்பதால் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிவசேனை ஆதரித்தது. பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் ஏற்புடையவராக இல்லாமல் போனாலோ, எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்ப்பது அரசியல் ரீதியாக இயலாமல் போனாலோ, சிவசேனை, அகாலிதளம், பிஜு ஜனதா தளம் ஆகியவை எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கக்கூடும்.
எதிர்க்கட்சி அணியிலும்கூட, இதேபோலப் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளர் ஏற்புடையவராக இல்லாமல் போனாலோ, 2002-இல் டாக்டர் அப்துல் கலாம் நிறுத்தப்பட்டதுபோல, அனைவருக்கும் ஏற்புடைய வேட்பாளர் ஒருவரை பா.ஜ.க. அறிவித்தாலோ, எதிர்க்கட்சிகளிலும் பிளவு ஏற்பட வாய்ப்புண்டு. 36,549 வாக்குகள் பெற்றிருக்கும் பிஜு ஜனதா தளம் என்ன முடிவு எடுக்கும் என்பதும்கூட, குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது.
2007 குடியரசுத் தலைவர் தேர்தல் வரை, அந்தப் பதவிக்கு வட இந்தியர், தென்னிந்தியர் என்று மாறிமாறித் தேர்ந்தெடுக்கப்படும் மரபு பின்பற்றப்பட்டு வந்தது. 2007-இல் தென்னிந்தியர் ஒருவருக்குப் பதிலாக ஹமீது அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012-இல் தென்னிந்தியர் ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டிய முறை. ஆனால், வங்கத்தவரான பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவியாவது தென்னிந்தியருக்குத் தரப்பட்டதா என்றால் இல்லை. ஹமீது அன்சாரியே மீண்டும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முறையாவது, பழையபடி மரபு பின்பற்றப்பட்டு, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக்கப்பட வேண்டும். தென்னிந்தியாவில் தடம் பதித்துத் தனது செல்வாக்கை விரிவுபடுத்த நினைக்கும் பா.ஜ.க. தலைமைக்கு தென்னிந்தியர் ஒருவரைக் குடியரசுத் தலைவராக்குவது அரசியல் ரீதியாகவும் வலு சேர்க்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com