துப்பாக்கி தீர்வாகாது!

ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன என்பது ஆறுதல் அளிக்கும்

ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன என்பது ஆறுதல் அளிக்கும் முன்னேற்றம்தான். ஊரடங்கு (கர்ஃப்யூ), போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து பள்ளிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. தொடர்ந்து குளிர்கால விடுமுறையும் வந்துவிட்டதால் இப்போதுதான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதுவே காஷ்மீர் முற்றிலுமாக சகஜநிலைக்குத் திரும்பிவிட்டது என்பதற்கான அடையாளமா என்றால் இல்லை.

கடந்த ஜூலை மாதம் பர்ஹான் வானி என்கிற பயங்கரவாத இளைஞர் ராணுவத்தினரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் உச்சகட்டத்தை அடைந்தது. எங்கு பார்த்தாலும் போராட்டம், காவல் துறையினர் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் கல்லெறிவது என்று கட்டுக்கடங்காத அளவில் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகளால் தாக்கும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்களின் கல்வீச்சால் காயமடைந்த பாதுகாப்புப் படையினரைப் போலவே, அதிக அளவிலான போராட்டக்காரர்களும் பெல்லட் துப்பாக்கித் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் கை மீறிப் போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில் குளிர்காலம் தொடங்கியது. வழக்கத்துக்கும் அதிகமாகக் குளிர் காணப்பட்டதால், போராட்டம் தொடர முடியாமல் முடிவுக்கு வந்தது.
அப்படி முடிவுக்கு வந்திருந்த சகஜநிலை இப்போது மீண்டும் தகர்ந்திருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பழையபடி போராட்டக்களமாக மாறக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. உடனடியாகத் தீர்வு காணாமல் போனால், மீண்டும் கடந்த ஆண்டில் காணப்பட்ட நிலைமைக்கே காஷ்மீர் திரும்பக்கூடும் என்று தோன்றுகிறது.
பிப்ரவரி 12-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்கம் மாவட்டத்தில் ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள். ஒருவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தவறுதலாகக் கொல்லப்பட்டவர். இன்னொருவர், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலின்போது இடையில் சிக்கி உயிரிழந்தவர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காகப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்திப் பார்த்தும் அவர்கள் கலையாதபோது, துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் உயிரிழந்தார்.
குல்காமில் கொல்லப்பட்டிருக்கும் நான்கு பயங்கரவாத இளைஞர்களும், பர்ஹான் வானியைப் போலவே, உள்ளூர்க்காரர்கள். இவர்கள் சமூகவலைதளங்களின் மூலம், தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் பரப்புகிறவர்கள். கூட்டத்தைக் கூட்டிப் போராட்டங்களை நடத்துபவர்கள். எல்லை கடந்து வரும் பாகிஸ்தானியத் தயாரிப்பு பயங்கரவாதிகளிடம் காட்டும் அதே அணுகுமுறையை இவர்களிடம் காட்டிவிட முடியாது.
கடந்த ஆண்டு நடந்த தீவிரவாதப் போராட்டங்கள் அடங்கிய பிறகு முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி இதுகுறித்துத் தெளிவான சிந்தனையுடன் பேட்டி அளித்திருந்தார். ’தீவிரவாதத்தில் ஈடுபடும் பெரும்பான்மையான காஷ்மீர இளைஞர்கள், பயங்கரவாதிகள் அல்ல. யாரையும் கொன்றவர்கள் அல்ல. அவர்கள் தவறான புரிதலில் இருக்கிறார்கள். அவர்களை எப்படிப் பொது நீரோட்டத்தில் இணைத்து எல்லோரையும்போல சகஜ வாழ்க்கை வாழ வழிகோலுவது என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்தித்தாக வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும், உள்ளூர் தீவிரவாத இளைஞர்களையும் வேறுபடுத்திப் பார்த்துதான் நாங்கள் அணுகுகிறோம்' என்பதுதான் அவரது பேட்டியின் அடிப்படைக் கருத்து.
குல்காமில் கொல்லப்பட்ட பயங்கரவாத இளைஞர்களின் மரண ஊர்வலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும், கடந்த ஆண்டு காணப்பட்ட கோபமும், ஆத்திரமும் இன்னமும் அடங்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. கடுமையான குளிர்தான் போராட்டத்திற்கும் கலவரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததே தவிர, ஊரடங்கும்,
பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையும் அல்ல என்பதும் தெளிவாகிறது.
மீண்டும் கிளர்ச்சியும், கலவரமும் பெரிய அளவில் வெடித்தால் அதை எதிர்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் தயாராக இருக்கிறது. சிறப்புக் காவல் படையினருக்குக் கூடுதலாக 4,949 பெல்லட் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆறு லட்சம் ரப்பர் தோட்டா கேட்ரிஜ்களும் தரப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உடல் முழுவதையும் பாதுகாக்கும் விதத்திலான கவச உடைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் எவ்வளவு மோசமான கல்வீச்சுத் தாக்குதல் நடந்தாலும், படைவீரர்கள் காயமடைய மாட்டார்கள். பாதுகாப்புப் படையினருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் நின்றுவிடாமல், கல்வீச்சில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை நேரத்தில் பண உதவியும் தரப்படுகிறது.
கலவரக்காரர்களை எதிர்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் முழுவீச்சில் தயாராகிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. இதனால் கலவரத்தை எதிர்கொள்ள முடியுமே தவிர முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது என்பதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டதுபோல, தீவிரவாதத்தால் வழிதவறிப் போய் இருக்கும் இளைஞர்களைப் பொது நீரோட்டத்திற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com