தாய்மைக்கு மரியாதை!

அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ’பேறுகால நலத்திட்ட (திருத்த) மசோதா - 2016' அமைப்பு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மகளிருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதுடன் பணிபுரியும்

அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ’பேறுகால நலத்திட்ட (திருத்த) மசோதா - 2016' அமைப்பு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மகளிருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதுடன் பணிபுரியும் பெண்கள் பலர் பேறுகாலத்தைக் காரணம் காட்டிப் பணியிலிருந்து விலகுவதைக் கணிசமாகக் குறைக்கவும் செய்யும். அரசுத் துறைகள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்பு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் மகளிருக்கு இதுவரை தரப்பட்ட முழுச் சம்பளத்துடன் கூடிய 12 வாரப் பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 1961-இல் கொண்டுவரப்பட்ட பேறுகால திட்ட மசோதாவில் பல திருத்தங்களை செய்து கொண்டுவரப்பட்ட இந்த திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஏறத்தாழ 18 லட்சம் பணி புரியும் மகளிர் பயனடைவார்கள்.
குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்ட தாய்மார்களுக்கும், செயற்கை முறைக் கருத்தரிப்பு மூலம் மகப்பேறு பெறும் பெண்டிருக்கும்கூட மகப்பேறு நலத்திட்டத்தின் பயன் சென்றடையும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தனியார் துறையில் அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இதனால் எந்த பயனும் கிடைக்காது என்றாலும், அமைப்பு சார்ந்த துறைகளில் தரப்படும் சலுகைகளும் உதவிகளும் காலப் போக்கில் அவர்களையும் சென்றடையும், சென்றடைய வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் மகளிர் நலம் பேணுதலில் இந்தியா தனது மதிப்பை சர்வதேச அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் 14 வாரங்களும், ஆஸ்திரேலியாவில் 18 வாரங்களும் மட்டும்தான் மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. நார்வேயில் 36 முதல் 46 வாரங்கள் விடுப்பு தரப்பட்டாலும் அனைவருக்கும் முழுச் சம்பளமும் வழங்கப்படுவதில்லை. டென்மார்க்கில் 52 வாரங்கள் பேறுகால விடுப்பு தரப்படுகிறது. கனடாவிலும் 52 வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டாலும், கடைசி 17 வாரங்களுக்கு 55% சம்பளம்தான் அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 12 வார விடுப்பு தரப்படுகிறது. ஆனால் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் எல்லா நிறுவனங்களிலும் இந்தப் பேறுகாலச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்கிறது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா. 50 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் குழந்தைகள் காப்பகம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மசோதா, அந்தக் காப்பகத்தில் பாதுகாப்பாக விடப்படும் குழந்தைகளை பணிபுரியும் தாய்மார்கள் தினமும் நான்கு தடவை சென்று சந்திக்கவும் அனுமதிக்கிறது. அதுமட்டுமல்ல, பணியில் சேரும்போதே, எல்லா நிறுவனங்களும் மகப்பேறு நலத்திட்டம் குறித்த உரிமைகள் இன்னின்ன என்பதைப் பெண் ஊழியர்களுக்குக் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மசோதா வலியுறுத்துகிறது.
பேறுகால விடுப்புக்கும் பெண்கள் பணியில் தொடர்வதற்கும் தொடர்பு இருப்பதாகப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த மசோதாவின் மூலம் பணிபுரியும் மகளிரில் 4.4% பேர் மட்டுமே பயனடையப் போகிறார்கள் என்பதும் அமைப்பு சாராத விவசாயம், கட்டடத் தொழில், கூலிப் பணிகள், வீட்டு வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் 95% பெண்கள் பயனடையப் போவதில்லை என்பதும் உண்மைதான் என்றாலும், தாய் - சேய் நலம் காக்கப்படுவதும், மகளிர் அதிக அளவில் பணிபுரிவதை உறுதிப்படுத்துவதும் பேறுகால விடுப்பின் முக்கியமான பலன்கள்.
மகப்பேறு திட்டங்களைப் பொருத்தவரை தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது என்பதுடன், பல புரட்சிகரமான திட்டங்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியும் வருகிறது. இவற்றின் மூலம் அமைப்பு சாரா வேலைகளில் ஈடுபடும் மகளிரும், வேலைக்குப் போகாமல் இருக்கும் மகளிரும்கூடப் பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் தரப்படும் அளவுக்கு தாய் - சேய் நலன்காக்கும் திட்டங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
2006-ஆம் ஆண்டு முதல் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.12,000, நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில் ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.1,001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2016-17 நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் 5.81 லட்சம் தாய்மார்கள் ரூ.551.61 கோடி நிதியுதவி பெற்றிருக்கிறார்கள்.
தொழில் கல்வியில் தேர்ச்சி பெற்ற பலர் வீட்டில் குடும்பத் தலைவியாக முடங்கி விடுவதுதான் அதிகம். கிராமப்புறங்களில் 24.8% பேரும், நகர்ப்புறங்களில் 14.7% பேரும் மட்டுமே வேலைக்குப் போகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
வேலையில் சேரும் நிலையில் 25%-ஆக இருக்கும் பெண்களின் விகிதம், அடுத்த பத்து ஆண்டுகளில் 16% குறைந்துவிடுகிறது. அதற்குக் காரணம் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம். அதனால் உயர்பதவிகளை அடையும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 4% மட்டுமே. பேறுகால நலத்திட்ட மசோதாவில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்கள் இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
நாம் எந்த அளவுக்கு மகளிர் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்பதை மக்களவையில் பேறுகால நலத்திட்ட மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, 543 பேர் கொண்ட மக்களவையில் வெறும் 53 உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பெற்றது வெளிச்சம்போடுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com