ஏமாற்றம்!

நரேந்திர மோடி அரசு கடந்த வாரம் அறிவித்திருக்கும் புதிய சுகாதாரக் கொள்கை, முந்தைய சுகாதாரக் கொள்கையிலிருந்து சற்றே மாறுபடுகிறது.

நரேந்திர மோடி அரசு கடந்த வாரம் அறிவித்திருக்கும் புதிய சுகாதாரக் கொள்கை, முந்தைய சுகாதாரக் கொள்கையிலிருந்து சற்றே மாறுபடுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சுகாதாரக் கொள்கை அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை என்கிற கண்ணோட்டத்திலிருந்து, சுகாதாரம் பேணுதல் குறித்தும், பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பது குறித்தும் முனைப்புக் காட்டுகிறது என்பதுதான் வித்தியாசம். 'வந்தபின் காப்பது' என்கிற நிலையைக் கைவிட்டு 'வருமுன் காப்பது' குறித்து சிந்திப்பது என்பது வரவேற்புக்குரிய மாற்றம்தான்.
தேசிய சுகாதாரக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் பல அம்சங்கள் நிதிநிலை அறிக்கையிலேயே சொல்லப்பட்டு விட்டிருக்கிறது. பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' அணியில், சுகாதாரத்திற்காக மிகக்குறைவான தொகை ஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை மொத்த உற்பத்தி விகிதத்தில் 2.5%-ஆக உயர்த்துவது, சிசு மரணத்தைக் குறைப்பது, காசம், யானைக்கால், தொழுநோய் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிப்பது என்று பல உயரிய இலக்குகளைப் புதிய சுகாதாரக் கொள்கை வகுத்துக் கொண்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
உலகில் உள்ள நோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று இல்லாத நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருவதையும், அவற்றிற்கான மருத்துவச் செலவை எதிர்கொள்ள முடியாமல் பல கீழ் நடுத்தர, அடித்தட்டு மக்கள் அவதிப்படுவதையும் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனிமேல் 'நல்வாழ்வு மையங்கள்' என்று அழைக்கப்படும் என்று புதிய சுகாதாரக் கொள்கை தெரிவிக்கிறது. இந்த 'நல்வாழ்வு மையங்கள்' அனைத்திலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பு, வாய், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றிக்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்கிறது புதிய சுகாதாரக் கொள்கை. அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எங்கிருந்து பெறுவார் என்பது தெரியவில்லை. அது குறித்து விளக்கமும் இல்லை.
உடல்நலன் பேணுதல், அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை என்பதெல்லாம் உயர்ந்த குறிக்கோள்கள்தான் என்றாலும் அதற்கு அடிப்படையாகப் போதிய மருத்துவர்கள் தேவை. கடந்த 2009 - 2015 காலகட்டத்தில் புதிதாகப் பல மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவர்கள் பலர் உருவாக்கப்பட்டனர் என்றாலும் இதன்மூலம் சுகாதாரக் கொள்கையின் இலக்கை எட்டிப்பிடிப்பது என்பது இயலாது. 2014 நிலவரப்படி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் 11.3% பேர் மட்டுமே. அவர்களிலும் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் பணி புரிகிறார்களே தவிர, ஊரக அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலைதான் இன்றும் காணப்படுகிறது.
முறையான மருத்துவமனைப் பிரசவங்களின் எண்ணிக்கை 80%-ஆக உயர்ந்திருப்பது உண்மை. ஆனால் போதிய அளவிலான மருத்துவர்கள் ஊரக மருத்துவமனைகளில் பணிபுரிய ஊக்குவிக்கப்பட்டால் மட்டும்தான் புதிய சுகாதாரக் கொள்கையில் சிசு மரணம், பேறுகால மரணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
இன்றைய சூழலில் 70% புற நோயாளிகளும், 60% மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும் தனியார் மருத்துவமனைகளை நாடுபவர்கள். தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை நியாயமான கட்டணத்தில் அளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முறையான அமைப்பு எதுவும் இல்லை. அப்படி இல்லாத நிலையில் அரசு அளிக்கும் மருத்துவக் காப்பீடு கூடத் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எல்லா மருத்துவமனைகளும் தங்களது மருத்துவக் கட்டணங்கள் குறித்து நோயாளிகளின் பார்வையில் படும்படி தகவல் பலகை வைப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகள், நோயாளிகள், பல்வேறு நோய்கள் குறித்தெல்லாம் முழுமையான புள்ளிவிவரங்கள் நம்மிடம் கிடையாது. மேலும், தனியார் மருத்துவமனைகளின் உதவி இல்லாமல் இதுபோன்ற ஆய்வுகள் சாத்தியமுமில்லை. அப்படியொரு ஆய்வு குறித்துப் புதிய சுகாதாரக் கொள்கையில் ஏன் குறிப்பிடப்படவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.
எல்லா பொது மருத்துவமனைகளிலும், முக்கியமான மருந்துகளும், தரமான இலவசப் பரிசோதனை நிலையங்களும் அமைக்கப்பட்டு, அவை முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதுதான் சுகாதார அமைச்சகத்தின் முதல் வேலையாக இருக்க வேண்டும். தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் இதில் முனைப்புக் காட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சுகாதாரத் தரக் கட்டுப்பாடு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகள் தேவையில்லாத பரிசோதனைகளாலும், நியாயமற்ற கட்டணங்களாலும் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்க எந்தவித முனைப்பையும் புதிய சுகாதாரக் கொள்கை முன்வைக்காதது ஏமாற்றமளிக்கிறது. நோய்களைத் தடுப்பது என்பது இலக்காக இருந்தால், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மருத்துவக் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சையை உறுதிப்படுத்துவதும் அவசியம்.
புதிய சுகாதாரக் கொள்கையின் மாதிரி வடிவில் குறிப்பிடப்பட்டிருந்த 'தேசிய சுகாதார உரிமைச் சட்டம்' கைவிடப்பட்டிருப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது. நோக்கம் திசை மாறிவிட்டிருக்கிறது என்பதுதான் அது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com