நுகர்வோருக்குப் பாதுகாப்பு!

கடந்த திங்கள்கிழமை முதல் மத்திய அரசின் மனைவணிகச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. மனைவணிகப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவதும், வீடு வாங்குவோரின் நலனைப் பாதுகாப்பதும்தான்

கடந்த திங்கள்கிழமை முதல் மத்திய அரசின் மனைவணிகச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. மனைவணிகப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவதும், வீடு வாங்குவோரின் நலனைப் பாதுகாப்பதும்தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், வரைமுறைகளும் இல்லாமல் இருக்கும் இந்தியாவில், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்த மனைவணிகத் தொழிலுக்கு, இந்தச் சட்டத்தின் மூலம் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தால் கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, மனைவணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களோ, நபர்களோ மாநிலங்களில் அமைக்கப்படும் மனைவணிக ஒழுங்காற்று ஆணையத்திடம் தங்களது திட்டப் பணியை (ப்ராஜெக்ட்) விளம்பரப்படுத்தி அறிவிப்பதற்கு முன்னால் பதிவு செய்து கொண்டாக வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்டால் மட்டுமே புதிதாக எந்தவொரு திட்டத்தையும் தொடங்க முடியும்.
மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டது என்றாலும்கூட, இதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். இதுவரை 13 மாநிலங்கள் மட்டும்தான் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்திருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் மட்டும்தான் மாநில மனைவணிக ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறது. ஒன்பது மாநிலங்களில் இவற்றுக்கான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்துவிட்டிருப்பதால், காலதாமதம் இல்லாமல் எல்லா மாநிலங்களும் மனைவணிக ஒழுங்காற்று ஆணையம் அமைத்து, இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முற்படும் என்று நம்பலாம்.
மனைவணிக நடவடிக்கைகள் எப்போதுமே நுகர்வோருக்கு சாதகமானதாக இருப்பதில்லை. ஒருதலைபட்சமான ஒப்பந்தங்களில் வீடு அல்லது மனை வாங்குவோர் கையொப்பம் இடுவதுதான் வழக்கம். அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவோர் தங்கள் மனம்போன போக்கில் விலையை அதிகரிப்பதும், தங்கள் வசதிக்கேற்ப முன்பு தெரிவித்த கட்டட வரைபடத்தை மாற்றி அமைப்பதும் சர்வசாதாரணம். குறிப்பிட்ட காலத்தில் குடியிருப்புகள் ஒப்படைக்கப்படுவது கிடையாது. பெரிய நிறுவனங்களேகூட, சில நிகழ்வுகளில் குடியிருப்பு வாங்குவோருடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறுவது உண்டு எனும்போது சிறிய மனைவணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வஞ்சிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
புதிய சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒளிவு மறைவான செயல்பாடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடும். அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் மனைவணிக நிறுவனங்கள், தாங்கள் விளம்பரப்படுத்தி இருந்த அனைத்து அம்சங்களும் இருப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். அதுமட்டுமல்ல, வீடு வாங்குவோர் வருங்காலத்தில் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களது நலன் பாதுகாக்கப்படும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பவர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் முன் பணத்தில் 70 சதவீதத் தொகையை அந்தக் குறிப்பிட்ட குடியிருப்புத் திட்டத்தின் பேரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதில் வைப்புத் தொகையாக வைத்தாக வேண்டும். இதனால், ஒரு திட்டத்திற்காகப் பெறப்பட்ட முன் பணத்தை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்துவது தடுக்கப்படும். பெரும்பாலான, அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கும் மனைவணிக வியாபாரிகள், அதிக முதலீடு இல்லாமல், வாடிக்கையாளர்களின் முன் பணத்தை பயன்படுத்தித்தான் தொழிலே செய்கிறார்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பவர்கள், அந்தத் திட்டம் குறித்த விவரங்கள், மனைப்பிரிவு தொடர்பான வரைபடங்கள் (லே அவுட்), அனுமதிகள், குடியிருப்பின் விலை, வீடு வாங்குவோரிடம் செய்துகொள்ளும் ஒப்பந்த நிபந்தனைகள் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் ஒழுங்காற்று ஆணையத்தில் சமர்ப்பித்தாக வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த விவரங்களை எல்லாம் இணையத்தில் அனைவரும் பார்க்கும் விதத்தில் பதிவேற்றம் செய்யவும் வேண்டும். குடியிருப்புகளை வாங்கியவர்களிடம் ஒப்படைத்த 45 நாட்களுக்குள், அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை ஏதாவது இருந்தால் அதைக் கொடுத்துக் கணக்கை முடித்துக் கொள்ளவும் வேண்டும்.
இந்தச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருப்பதன் காரணமே, எந்தக் காரணத்தைக் கொண்டும் சாமானிய, நடுத்தர வர்கத்தினர் மனைவணிக வியாபாரிகளால் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். மனைவணிக ஒழுங்காற்று ஆணையம் நடைமுறைக்கு வந்தால், அந்தத் திட்டத்துக்கான வரைபடங்கள், சந்தை மதிப்பு, பெறப்பட்ட வைப்புத் தொகை, அனுமதிகள் எல்லாமே தெளிவாக உறுதிப்படுத்தப்படும். மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், வீடு வாங்குவோர் வஞ்சிக்கப்பட மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அத்தொழிலும் அடுத்த இரண்டாண்டுகளில் புத்துயிர் பெறும்.
மத்திய அரசு காட்டியிருக்கும் அவசரம்போல, மாநில அரசுகள் முனைப்புக் காட்டாமல் இருப்பதற்குக் காரணம், மனைவணிகத் தொழிலில் அரசியல்வாதிகள் பலர் ஈடுபட்டிருப்பதாகக்கூட இருக்கலாம். மனைவணிகத் தொழில் மந்த நிலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற இந்த மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அனுமதிகள் வழங்கும் அரசுத் துறை அதிகாரிகள் மனைவணிகத் துறையில் ஈடுபடுவோரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சும் அட்டைபோலக் கையூட்டுப் பெறுகிறார்களே, அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். கையூட்டைத் தடுக்கும் ஒழுங்காற்றுச் சட்டத்தை யார் கொண்டு வருவது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com