இனிமேலாவது...

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான், சில அடிப்படைத் தகவல்களைக்கூட சேகரிக்காமல் இருக்கிறோம் என்பதை நாம் உணர முற்பட்டிருக்கிறோம். ஆண்டுதோறும் மக்களிடமிருந்து வரி வசூல் செய்யப்பட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே தவிர, அப்படி ஒதுக்கீடு செய்த நிதி முறையாகக் கடைசி வரை சென்றடைகிறதா, பயனளிக்கிறதா என்பதைக் கண்காணித்துத் தகவல்கள் சேகரிக்கப்படுகிறதா என்றால் இல்லை. இப்படியே 70 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியாவின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்திருக்கிறார். இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்பு, வேலைவாய்ப்பு குறித்த நம்பகமான புள்ளிவிவரங்களைத் தேவைப்படும் போதெல்லாம் தயார் நிலையில் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, உருவாக்குவது, எப்போதோ செய்திருக்க வேண்டிய இந்த அடிப்படை நடைமுறையை இப்
போதாவது செய்ய முற்பட்டிருக்கிறோமே என்பது ஆறுதல்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஏறத்தாழ 90% வேலைவாய்ப்புகள் மரபுசாராத் துறைகளில்தான் காணப்படுகிறது. குறிப்பாக, விவசாயம், கட்டடத் தொழில், மீன் பிடித்தல், வீட்டு வேலை செய்தல், கூலித் தொழிலில் ஈடுபட்டிருப்போர், சுயவேலைவாய்ப்பில் இருப்பவர்கள் ஆகியோர் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டுவது குறித்து நாம் இதுவரை சிந்தித்ததே இல்லை.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் வேலைவாய்ப்புக் குறித்த புள்ளிவிவரங்களை ஐந்தாண்டுக்கு ஒருமுறை திரட்டுகிறது. இது, மாதிரிக் கணக்கெடுப்பே தவிர துல்லியமான கணக்கெடுப்பு அல்ல. மேலும் ஐந்தாண்டுக்கு முற்பட்ட அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முற்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எந்தவிதத் திட்டமிடலும் சாத்தியமுமில்லை, சரியாகவும் இருக்காது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, எட்டு முக்கியமான உற்பத்தித் துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புக் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய உண்மையை நாம் உணர வேண்டும். மத்திய, மாநில அரசுகள்தான் இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய முதலீட்டாளர்கள். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து, ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.47 லட்சம் கோடி செலவழிக்கின்றன. கல்வி, சுகாதாரத்திற்காக மட்டும் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடி. அதுமட்டுமல்ல, தொழில் துறை என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் மிகப்பெரிய தொழில் நிறுவனம் அரசுதான். இங்கே 234 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.
நரேந்திர மோடி அரசு, போக்குவரத்துத் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.2.4 லட்சம் கோடி செலவிடப் போவதாக நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ரூ.64,900 கோடி சாலைகள் மேம்பாட்டுக்காகவும், ரூ.55,000 கோடி ரயில்வேத் துறைக்காகவும் செலவிட இருக்கிறது. இந்த அளவு செலவழிக்கும் பணம், எங்கே எப்படிப் போய்ச் சேர்கிறது, அதனால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவது என்பது ஒன்றும் சிரமமானதல்ல. அதற்கு முனைப்பும், செயல் உறுதியும் வேண்டும், அவ்வளவே.
புதிய ரயில் பாதைகள், துறைமுகங்கள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைத்தல், நாளொன்றுக்கு 17 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைத்தல், நாளொன்றுக்கு 133 கி.மீ. கிராமப்புற சாலைகள் அமைத்தல், "நபார்ட்' உதவியுடனான பாசனப் பணிகள், பொலிவுறு நகரப் பணிகள், கிராமப்புற மின்சார விரிவாக்கப் பணி என்று பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அமைப்புகள் பல புதிய கட்டுமான, நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்றன.
இவற்றினால் எல்லாம், எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு
எத்தனை பேருக்கு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து இது
வரையில் எந்தவிதப் புள்ளிவிவரங்களும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யும்போது, ஒவ்வொரு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமும் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு, அடுத்த ஆண்டில் அந்த இலக்கு எட்டப்பட்டதா, அதனால் கிடைத்த பயன் என்ன
என்பதையும் அரசு தெரிவிக்குமானால், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரமும் கிடைக்கும், செலவழித்த பணம் குறித்த விவரமும் கிடைக்கும்.
ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய உத்தேசிக்கின்றன என்பதைத்தான் நிதிநிலை அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றனவே தவிர, கடந்த நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளால் ஏற்பட்ட பயன்பாடுகள் குறித்த அறிக்கைகளைத் தாக்கல் செய்வதில்லை. அந்தப் புள்ளிவிவரங்களைத் திரட்டினாலே போதும், ஓரளவுக்கு வேலைவாய்ப்புக் குறித்த புள்ளிவிவரங்கள் கிடைத்துவிடும்.
இந்தியாவின் பெரும்பகுதி உழைக்கும் மக்கள், குறைந்த
ஊதியத்தில், மரபு சாராத் தொழில்களிலோ, சுய தொழில்களிலோ ஈடுபட்டிருப்பவர்கள். வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க முடியாமல் போயிருப்பதும், வேலைவாய்ப்புடன் இணைந்த கல்வி முறை இல்லாமல் இருப்பதும்தான் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களுக்குக் காரணம். அரவிந்த் பனகாரியா குழு ஒரு தொடக்கம் மட்டுமே. மிகவும் காலதாமதமாக நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com