ராஜதந்திர சவால்!

பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில்

பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில் நேற்று முன்தினம், இரண்டு நாள் சர்வதேசப் பொருளாதார வழித்தட மாநாடு கூட்டப்பட்டது. இதில் 29 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பூடானைத் தவிர, நமது அண்டை நாடுகள் அனைத்துமே கலந்து கொண்டன.
சீனாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை ஒரு நெடுஞ்சாலை அமைத்து ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களை இணைப்பது என்பதுதான் சீனா முன்வைக்கும் திட்டம். தரைவழி மார்க்கமாக ஒரு நெடுஞ்சாலை என்பது, மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை என்பதால், அத்தனை நாடு
களும் சீனாவின் திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன. இதற்குப் பின்னால், சீனாவின் ரகசிய வல்லரசு ஆசையும், அதை பயன்படுத்தி பாகிஸ்தான் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியும் இருக்கின்றன என்பதுதான் வெளியில் தெரியாத சூட்சுமம்.
"நாங்கள் எங்களது பொருளாதார வெற்றியின் ரகசியங்களை எல்லா நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதையோ, எங்கள் கருத்தை மற்ற நாடுகளின் மீது திணிப்பதையோ விரும்பவில்லை. தடையற்ற வர்த்தகம், முதலீடு, சமாதானம் ஆகியவற்றிற்காக 124 பில்லியன் டாலர்களைக் (சுமார் ரூ.7.94 லட்சம் கோடி) கூடுதலாக நாங்கள் ஒதுக்கீடு செய்து, 1950-இல் ஏற்றுக்கொண்ட பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உலகமயமாக்கலை நிரந்தரப்படுத்துவோம்' என்று அந்தக் கூட்டத்தில் தனது தலைமை உரையில் தெரிவித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
உலகில் உள்ள பல நாடுகளில் சீனா தனது முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் தனது செல்வாக்கைத் தவிர்க்க முடியாததாக்கி விட்டிருக்கிறது. அமெரிக்காவிலேயேகூட சீனாவின் முதலீடு கணிசமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவும், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஒருபுறம் முதலீட்டின் மூலம் தனது நெருக்கத்தை அதிகரிப்பதும், அதைத் தொடர்ந்து ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதும் சீனாவின் கொள்கையாக இருந்து வருகிறது.
ஜீ ஜின்பிங் சீனாவை ஆண்ட ஹான், தாய் வம்ச அரசர்களை எல்லாம் தனது வல்லரசு ஆசையில் மிஞ்சிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. மார்க்கோ போலோ என்கிற சரித்திர ஆய்வாளர் பயணித்த வழியாக நெடுஞ்சாலை அமைப்பது என்பதுடன் நின்றுவிடவில்லை அதிபர் ஜீ ஜின்பிங்கின் திட்டம்.
ஏற்கெனவே சீனாவின் தலைமையில் இயங்கும் ஆசிய கூட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6.40 லட்சம் கோடி)அல்லாமல் இப்போது மேலும் 40 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.56 லட்சம் கோடி) நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது அவரது அரசு. அமைக்க இருக்கும் நெடுஞ்
சாலைத் தடத்தில் 1,700 புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கின்றன 50 சீன அரசு நிறுவனங்கள். இதில் துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள், தொழிற்பேட்டைகள் போன்ற பலவும் அடங்கும். ஒருபுறம் தரைவழிப் பாதை உருவாக்க முற்பட்டிருக்கிறது என்றால், இன்னொருபுறம் இந்துமகா சமுத்திரம் வழியாகக் கடல்வழிப் பாதையும் உருவாக இருக்கிறது. இவைகளின் மூலம் வருடாந்திர வர்த்தகம் 2.5 டிரில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.1 கோடியே 60 லட்சம் கோடி) உயரும் என்றும், 100 கோடி மக்களுக்குப் பொருளாதார மேம்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான், உலகில் உள்ள 29 நாடுகள் மட்டுமல்லாமல், உலகமே சீனாவின் பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறது.
இந்த முயற்சி இந்தியாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தானுடன் சீன - பாகிஸ்தான் வர்த்தக வழித்தடத்துக்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது சீனா. இந்த சீன - பாகிஸ்தான் வர்த்தக வழித்தடம் என்பதேகூட, சீனாவின் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதி. அந்த நெடுஞ்சாலையும் சரி, சீன - பாகிஸ்தான் வர்த்தக வழித்தடமும் சரி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரத்தையும் பிரச்னைக்குரிய கில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளையும் மட்டுமல்ல, நம்மிடம் இருக்கும் லடாக்கையும் ஊடுருவிச் செல்கிறது.
சர்வதேச அளவில், பிரச்னைக்குரிய பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. தைவானுடன் வேறு எந்த நாடும் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்வதை சீனா ஆமோதிப்பதில்லை. அப்படி இருக்கும்போது, பிரச்னைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜிட் - பால்டிஸ்தான், லடாக் ஆகிய பகுதிகளின் வழியாகப் பாதை அமைப்
பதும், வர்த்தக வழித்தடம் அமைப்பதும் தவறு என்பது சீனாவுக்கு தெரியாதா என்ன? சீனாவும் பாகிஸ்தானும் தெரிந்தே திட்டமிட்டிருக்கும் தந்திரமான முயற்சி இது என்றுதான் தோன்றுகிறது.
சீனப் பொருளாதாரம், இந்தியாவைவிட ஐந்து மடங்கு பெரியது. அதனால், ஏனைய நாடுகளுக்குப் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்க சீனாவால் முடிகிறது. தெற்காசியாவில் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்துமே சீனாவின் தயவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் நிலைமை. இதை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. அதில் பாகிஸ்தான் குளிர் காய்கிறது.
சீனாவின் திட்டத்தில் பங்கு பெறுவதன் மூலம் தாங்களும் லாபம் அடையலாம் என்று உலக வல்லரசுகள் அனைத்தும் விரும்புவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம், எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளப் போகிறோம்?
நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய ராஜதந்திர சோதனை இது. இதை எதிர்கொள்வதில் பிரதமர் மோடியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியும் அடங்கி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com