பின்வாங்கக் கூடாது!

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 7% முதல் 13% வரையிலும், கிராமப் புறங்களில் 2% முதல் 7% வரையிலும் இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த நிலை தொடருமானால் இந்தியாவில் 2030-இல் 35.9% மரணங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள்தான் காரணமாக இருக்கக்கூடும்.
ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகும்போது, அது ரத்தக் குழாயில் படிந்து விடுகிறது. அப்படிப் படிந்து விடுவதால் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் விதத்தில் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. அடைப்பை அகற்றினாலும்கூட ரத்தக் குழாயின் அந்தப் பகுதி பலவீனமாகி விட்டிருக்கும். அதனால், அடைப்பை அகற்றி, மீண்டும் ரத்தக் குழாய் சுருங்கி விடாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் பொருத்தப்படும் கருவியின் பெயர்தான் சுருங்காக் குழாய் (ஸ்டென்ட்). கரோனரி ஸ்டென்ட் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கருவியில், வெற்று உலோக ஸ்டென்ட், மருந்து கரையும் ஸ்டென்ட், பயோ அப்சார்பபிள் ஸ்டென்ட், இரட்டை சிகிச்சை ஸ்டென்ட் என்று பல வகைகள் உள்ளன.
இதய அடைப்புக்கு பயன்படுத்தப்படும் சுருங்காக் குழாய் என்கிற இந்தக் கருவியை, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான விலையில் விற்பனை செய்து வந்தன. இதனால் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்கூட பயனடைந்தன. சாமானியர்களால் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவுக்குப் பல லட்சங்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டது. இந்திய மக்கள் ஏமாற்றப்படுவதைக் கண்டுபிடித்த தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (நேஷனல் பார்மசூட்டிகல் ப்ரைஸிங் அத்தாரிட்டி) கடந்த பிப்ரவரி மாதத்தில் சுருங்காக் குழாய்களுக்கான விலையை நிர்ணயம் செய்தது.
சர்வதேச அளவில் சுருங்காக் குழாய்கள் என்ன விலையில் நோயாளிகளுக்குப் பொருத்தப்படுகின்றன என்பதைத் தீர விசாரித்த பிறகுதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சில வகை சுருங்காக் குழாய் கருவிகளின் விலை 75% வரை குறைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விலைக் குறைப்புக்கு முன்னால், சுருங்காக் குழாய் தயாரிப்பு நிறுவனங்களுடன் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் அவர்களது விற்பனை விலையை எடுத்துக்காட்டி, இந்தியாவிலும் அதே விலைக்கு அவர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டது.
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், சுருங்காக் குழாய்க்கான விலை நிர்ணயம் செய்ததுதான் தாமதம், பல நிறுவனங்களும் சுருங்காக் குழாய் விற்பனையைக் குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆபோட்ஸ் உள்ளிட்ட சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், மனசாட்சியே இல்லாமல் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கட்டுப்படியாகாது என்று கூறி சியன்ஸ் ஸ்டென்ட் உள்ளிட்டவற்றின் தயாரிப்பையே நிறுத்த அனுமதி கோரியிருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் விற்பனையாவதைவிட மிகக் குறைவான அளவே விற்பனையாகும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இதே நிறுவனங்கள், இதே சுருங்காக் குழாய்களை இங்கே விற்பனை செய்வதைவிட மிகக் குறைந்த விலையில் விற்கின்றன என்பதுதான். அமெரிக்காவில் டி.இ.எஸ். எனப்படும் ட்ரக் எலுட்டிங் ஸ்டென்ட்டின் விலை ரூ.62,000 (950 டாலர்) முதல் ரூ.78,000 (1,200 டாலர்). அதே ஸ்டென்ட் பொருத்துவதற்கு இந்தியாவில் சில மருத்துவமனைகள் ரூ.1.7 லட்சம் வசூலிக்கின்றன.
ஆபோட்ஸ் நிறுவனத்தின் பயோ அப்சார்பபிள் ஸ்டென்ட் வகைகள் பயன்பாட்டைப் பொருத்து அமெரிக்காவில் ரூ.6,500 முதல் ரூ.13,000 வரை வசூலிக்கப்படுகிறது என்றால், இந்தியாவில் அதே சுருங்காக் குழாய்கள் பொருத்துவதற்கு ரூ.1.9 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் டி.இ.எஸ். ஸ்டென்டுகளின் விலை ரூ.20,000-த்திலிருந்து ரூ.30,000 வரைதான்.
அங்கே ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் சுருங்காக் குழாய்கள் விற்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் ஏறத்தாழ 6 லட்சம் டி.இ.எஸ். ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. ஐரோப்பாவில் குறைந்த விலையில் விற்கும் அதே சுருங்காக் குழாய்களைப் பல மடங்கு அதிக விலைக்கு இந்தியாவில் இத்தனை காலமும் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தன.
ஜெர்மனியில் டி.இ.எஸ். ஸ்டென்ட் விலை வெறும் ரூ.14,000 மட்டுமே. இங்கே அரசு நிர்ணயித்திருக்கும் விலையில் பாதிக்கும் குறைவு. அப்படி இருந்தும், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்திருக்கும் விலைக்கு இங்கே விற்பனை செய்யத் தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று இந்த மருந்து நிறுவனங்கள் சுருங்காக் குழாய்களின் விற்பனையை நிறுத்துவது என்பது, எப்படிப்பட்ட அராஜகமான வியாபார உத்தி என்பதை நாம் உணர வேண்டும்.
சுருங்காக் குழாய்களின் விலையை அரசு நிர்ணயம் செய்தும்கூட மருத்துவமனைகள் எந்தவிதக் கட்டணக் குறைப்பும் செய்யாமல் பழைய கட்டணத்தையே வசூலிக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
சுருங்காக் குழாய்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவோ, விற்பனையைக் குறைக்கவோ முற்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை தயவுதாட்சண்யமில்லாமல் இந்தியாவில் தடை செய்வதும், தேவைப்பட்டால் அரசே சுருங்காக் குழாய்களை இறக்குமதி செய்து விற்கவும் முன் வந்தாக வேண்டும். முந்தைய அரசுகள் செய்யத் துணியாத ஒன்றை இப்போது மத்திய அரசு தைரியமாகச் செய்ய முற்பட்டிருக்கிறது. இதிலிருந்து பின்வாங்கி விடாமல் இருக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com