வரிப்பணம் வீணாகிறது!

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் சில சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றன என்றாலும்கூட, ஒலிம்பிக் போன்ற பந்தயங்களை நடத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பை

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் சில சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றன என்றாலும்கூட, ஒலிம்பிக் போன்ற பந்தயங்களை நடத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பை நாம் ஏற்படுத்தியபாடில்லை. இந்தியாவில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கங்கள் என்று சொல்வதாக இருந்தால், பெரும்பாலானவை கிரிக்கெட் மைதானங்களாகத்தான் இருக்கின்றன.
கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானம், உலகின் இரண்டாவது பெரிய கால்பந்து மைதானமாகக் கருதப்படுகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், தில்லி ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், நவி மும்பையிலுள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் மைதானம், கொச்சியிலுள்ள ஜவாஹர்லால் நேரு கால் பந்தாட்ட அரங்கம், ராய்ப்பூரிலுள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், பெங்களூரு சின்னசாமி மைதானம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா தன்னை சர்வதேச விளையாட்டுத் தரத்துக்கு உயர்த்திக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளையாட்டுக் கட்டமைப்புகள்.
1951 மற்றும் 1982-இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1996 உலகக் கோப்பைக் கிரிக்கெட் பந்தயம், 2003-இல் நடந்த ஆசிய - ஆப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகள், 2010 சர்வதேச ஹாக்கி போட்டி, 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நாம் இதுவரை நடத்திய மிகப்பெரிய விளையாட்டுப் பந்தயங்கள். இவையல்லாமல், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளும், பல டென்னிஸ், கால்பந்து, பூப்பந்து, செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தித்தான் வந்திருக்கிறோம்.
கடைசியாக நாம் நடத்திய சர்வதேச அளவிலான மிகப்பெரிய போட்டி என்று சொன்னால் அது 2010 காமன்வெல்த் போட்டிதான். இதுபோன்ற போட்டிகள் நடைபெறும்போதுதான் இந்தியாவில் விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரிப்பதுடன், சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை என்பதுதான் பரவலாக நமது விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கும் குறை. அவர்களுக்குத் தேவையான பயிற்சிக்கு சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்கள் கிடைப்பதில்லை என்கிற குறையைப் போக்குவதற்காகத்தான் அவ்வப்போது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நாம் நடத்த முற்படுகிறோம். துப்பாக்கி சுடுதல், பூப்பந்தாட்டம், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், செஸ், கபடி, கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்தாட்டம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் நமது வீரர்கள் சர்வதேச அளவில் முத்திரை பதித்திருக்கிறார்கள் என்றாலும்கூட, ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளை ஒப்பிடும்போது, நாம் இப்போதும் மிகவும் பின்தங்கியே காணப்படுகிறோம்.
சர்வதேச அளவில் சாதனை புரிந்திருக்கும் நமது விளையாட்டு வீரர்களில் பலரும் அவர்களது சொந்த முயற்சியில் அந்தப் பெருமையை இந்தியாவுக்குத் தேடித் தந்திருக்கிறார்கள். அரசின் பங்களிப்போ, இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஊக்குவித்தலோ அவர்களது வெற்றிக்குக் காரணமல்ல என்பதை நமது ஆட்சியாளர்களின் மனசாட்சி தெரிவிக்கும். கடந்த ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் பாட்மிண்டனில் சிந்து அடைந்த வெற்றிக்கும், ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா கர்மாக்கர் 4-ஆவது இடம் பெற்றதற்கும், மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் பெற்ற வெற்றிக்கும் அவர்களது தனிப்பட்ட உழைப்பும், பயிற்சியும்தான் காரணமாக இருந்தன.
நாம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கும் விளையாட்டு அரங்கங்கள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா, விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறதா என்றால் இல்லை. விளையாட்டு அரங்கங்களை நிர்மாணிப்பதிலும், போட்டிகளை நடத்துவதிலும் அக்கறை செலுத்தும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், போட்டிகள் முடிந்த பிறகு அந்த அரங்கங்களை முறையாகப் பராமரிப்பதிலும், அவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட ஒரு சில விளையாட்டு அரங்கங்கள், அவற்றிற்கென செயல்படும் வாரியங்கள் இருப்பதால் பராமரிக்கப்படுகின்றன. ஏனைய விளையாட்டு அரங்கங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றை பயன்படுத்திக் கொள்ள இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதும் இல்லை. அந்த அரங்கங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு (குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிகளுக்கு) பயன்படுத்தப்படுவதால், அரங்கங்கள் பாழடிக்கப்பட்டு விளையாட்டுப் பயிற்சிக்கு பயனற்றவையாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தரமான விளையாட்டு அரங்கங்கள் அமைக்க முடியும். அவற்றில் இளம் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு வழிகோல முடியும். அதற்கான முனைப்பை மாநில அரசுகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் முன்னெடுத்தால்தான் சர்வதேச அரங்கில் இந்தியா கெளரவமான அளவு வெற்றியை எதிர்பார்க்க முடியும்.
மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாமையும், விளையாட்டுக் குறித்து நாம் அக்கறை கொள்ளாமல் இருப்பதும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com