தெரிந்தே நடக்கும் தவறு!

தமிழகத்தில் கட்டுமானத் தொழில் அநேகமாக

தமிழகத்தில் கட்டுமானத் தொழில் அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலைமை. அதற்குக் காரணம் ஆற்று மணல் தட்டுப்பாடு. ஒரு லாரி ஆற்று மணலுக்குக் குறைந்தது ரூ.35,000 வரை தர வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. மூன்று யூனிட் கொண்ட லாரிக்கு, குவாரியில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை வெறும் ரூ.1,500
மட்டுமே எனும்போது, இப்படியொரு கொள்ளை மயக்கமடைய வைக்கிறது.
தமிழகத்தில் இனிமேல் அரசே ஆற்று மணல் விற்பனையை முழுமையாக ஏற்று நடத்தும் என்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்புக்குரியதுதான். ஆனால், அதனால் எல்லாம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளுக்கு அருகேயுள்ள "டாஸ்மாக்' மது விற்பனை நிலையங்கள் பல மூடப்பட்டுவிட்டதால் அரசு வருமானத்தில் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட, அரசு மணல் விற்பனையில் நேரிடையாக ஈடுபடத் தீர்
மானித்திருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் 38 இடங்களில் ஆற்று மணல் அள்ளப்படுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 10 மட்டுமே செயல்படுகின்றன. மீதியுள்ள இடங்களில் அள்ளுவதற்கு இனிமேல் மணல் இல்லை என்பதுதான் உண்மை. தமிழக அரசின் பொதுப்பணித்துறை தரும் தகவலின்படி, தினந்தோறும் வாகனம் ஒன்றிற்கு 200 கன அடி வீதம் 5,500 முதல் 6,000 லாரிகளில் மணல் ஏற்றப்
படுகிறது. ஆனால், உண்மையான நிலவரம் என்னவென்றால், 400 கன அடி வீதம் ஏறத்தாழ 55,000 லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது என்று தெரிகிறது.
மக்கள் பார்வையில் படும் ஆறுகளில் மணல் அள்ளுவதை உள்ளூர் மக்களே எதிர்க்கிறார்கள். அதனால், சட்டவிரோதமாக மண் அள்ளுவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால், சிறிய சிறிய ஆறுகளில் எந்தவிதத் தடையும் இல்லாமல் மணல் அள்ளப்படு
கிறது. அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டுவிடும்போது, களிமண்ணும், சகதியும் சேர்ந்த மண்தான் கிடைக்கிறது. மணலுக்குப் பதிலாக இந்த மண்ணைப் பயன்படுத்துவது ஆபத்தானது. அதிக நீர்ச்சத்துள்ள மண் கான்கிரீட்டின் சக்தியை மட்டுப்படுத்தி, கட்டடத்தின் உறுதியைக் குலைத்துவிடும்.
மைகா, கரி, தொல்பொருள் (பாசில்ஸ்) ரசாயனக் கழிவுகள் ஆகியவை கலந்த மணல், கான்கிரீட் கட்டுமானத்திற்கு ஏற்றதல்ல; கட்டடங்கள் பலவீனமாக இருக்கும். ஆற்று மணலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சிலர் கடற்கரை மணலைக் கலந்து விற்று வருகிறார்கள். இது அதைவிடப் பெரிய ஆபத்து.
ஆற்று மணல் தட்டுப்பாட்டை எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் மூலம் ஈடுகட்டலாம் என்கிற யோசனை முன்வைக்கப்படுகிறது. பல அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்கள் இந்த எம்.சாண்டை பயன்படுத்துகின்றன. கட்டுமானங்களுக்கு எம்.சாண்ட் பயன்படுத்தலாம் என்றாலும்கூட, வெளிப்பூச்சுக்கு ஆற்று மணல்தான் தேவை. ஆற்றுமணலைக் கட்டடப் பணிகளி
லிருந்து முற்றிலுமாக அகற்றுவது இயலாது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக எல்லா ஆறுகளிலும் எந்தவிதக் கட்டுப்பாடோ, வரைமுறையோ இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வந்திருப்பதால், இப்போது ஆற்றுமணல் அறவே இல்லாத சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். பருவமழை பொய்க்காமல் தொடர்ந்து பெய்து வந்திருந்தாலாவது, ஓரளவுக்கு பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கும். ஆற்றில் மணலை அள்ளுவதுபோல காடுகளில் மரங்களையும் வெட்டி வந்ததால், மழையும் பொய்க்கிறது.
ஆற்றில் மணல் எடுப்பது என்பது கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழில் என்பதால், இதில் சமூகவிரோதிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று எல்லா தரப்பினரும் கைகோத்து லாபத்தைப் பங்கு போட்டுக் கொள்ள முற்பட்டதன் விளைவு, ஆறுகள் தண்ணீரும் இல்லாமல், மணலும் இல்லாமல் பாலையாய்க் காய்கின்றன.
ஆற்றுமணல் அளவுக்கதிகமாக அள்ளப்படுவதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு இன்னும்கூட ஏற்பட்டிருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஆற்றுமணல் உருவாவதற்குப் பல ஆண்டுகளாகும் என்பது மட்டுமல்ல, ஆற்றுமணல் அள்ளப்படும்போது நிலத்தடி நீர் குறையும் என்பதையும், உப்புநீர் புகுந்துவிடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இதெல்லாம் தெரிந்தும்கூட கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த எல்லா அரசுகளும், ஆற்றுமணல் பிரச்னை குறித்து கவனம் செலுத்தாததற்குக் காரணம், அதிகாரிகளுக்கும், ஆளும்கட்சியினருக்கும் இதிலிருந்து கிடைத்த பெரும் பணம்தான்.
ஆற்றுமணல் தட்டுப்பாட்டுக்கான மிகப்பெரிய காரணி, தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதுதான். கடந்த 2009-ஆம் ஆண்டிலேயே இதற்குத் தடை விதிக்கப்பட்டது என்றாலும், தங்குதடை இல்லாமல் கேரளத்திற்கும், கர்நாடகத்துக்கும் இங்கிருந்து ஆற்றுமணல் கடத்தப்படுவது தொடர்கிறது. அங்கே ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருப்பது மட்டுமல்ல, அரசும், பொதுமக்களும் விழிப்புணர்
வுடன் மணல் அள்ளப்படாமல் கண்காணிக்கின்றனர். ஆனால், இங்கு அதிகாரவர்க்கத்தின் துணையோடு மாஃபியாக்கள் செயல்படுவதைத் தடுக்கப் பொதுமக்களால் முடியவில்லை; அதுதான் பிரச்னை.
தமிழகத்திலிருந்து ஆற்றுமணல் அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படாமல் தடுத்துவிட்டாலே போதும், இங்கே தட்டுப்பாடும் இருக்காது. நமது ஆறுகளும் காப்பாற்றப்படும். இது எல்லோருக்குமே தெரியும். தெரிந்தும் செயல்படாமல் இருப்பதற்கு என்ன பெயர்? என்ன காரணம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com