சீனாவும் தலாய் லாமாவும்!

உலக நாடுகளின் தலைவர்கள், பௌத்தமத குருவும் நோபல் விருது

உலக நாடுகளின் தலைவர்கள், பௌத்தமத குருவும் நோபல் விருது பெற்ற சமாதானத் தூதுவருமான தலாய் லாமாவைச் சந்திப்பதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தலாய் லாமாவுடனான சந்திப்புகளைக் கடுமையான குற்றமாகக் கருதுவதாக சீனா தெரிவித்திருக்கிறது. அது தனிப்பட்ட முறையிலான சந்திப்பாக இருந்தாலும்கூட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுடனான எந்த ஒரு சந்திப்பும் தனது நாட்டுக்கு எதிரான செயல் என்று சீன அரசு குறிப்பிடுகிறது.
சீனாவின் அறிவிப்பு புதிதொன்றுமல்ல. பல முறை சீனாவின் இதுபோன்ற அச்சுறுத்தல்களையும் அறிவிப்புகளையும் உலக நாடுகள் சட்டை செய்யாமல் புறக்கணித்திருக்கின்றன. ஆன்மிகத் தலைவர் ஒருவரைச் சந்திக்கக் கூடாது என்று சீனா தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
யாரைச் சந்திப்பது? எங்கே, எப்போது சந்திப்பது என்பதெல்லாம் அந்தந்த நாட்டின் அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட தலைவர்களுக்குமான விருப்பம். பிற நாடுகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் கூறும் அதிகாரமோ, உரிமையோ சீனாவுக்குக் கிடையாது என்று சில நாடுகள் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், அங்குள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் தங்களது நாட்டுக்கு வரும்படி தலாய் லாமாவுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை தலாய் லாமா ஏதாவது ஒரு நாட்டிற்கு விஜயம் செய்யும்போதும், அந்த அழைப்புக்கும் தலாய் லாமாவுக்குத் தரப்படும் மரியாதைக்கும் சீனா கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, திபெத்திய தலைவரான தலாய் லாமாவை நான்கு முறை சந்தித்திருக்கிறார். ஒவ்வொரு சந்திப்பின்போதும் சீனாவிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. 
அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் தலாய் லாமா இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தவாங் மடாலயத்திற்கு விஜயம் செய்தபோது, இதேபோல சீனா வெகுண்டெழுந்தது. சீனாவால் தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சொந்தம் கொண்டாடப்படும் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா சென்றபோது, அது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இரு நாட்டு உறவை கடுமையாகப் பாதிக்கும் என்றும், அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் பெய்ஜிங் எச்சரித்தது.
கடந்த டிசம்பர் மாதம் ராஷ்டிரபதி பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நோபல் விருது பெற்றவர்களுக்கு விருந்து ஒன்றை அளித்தார். அந்த விருந்துக்கு நோபல் விருது பெற்ற தலாய் லாமா அழைக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. இது பொறுக்காத சீனா இந்தியாவுக்குத் தூதரக நிலையில் கண்டனத்தைத் தெரிவித்தது.
சீன எல்லையை ஒட்டியுள்ள நாடு மங்கோலியா. தலாய் லாமா அந்த நாட்டுக்குப் பயணம் செய்வதை மங்கோலிய அரசு அனுமதித்தது. இது சீனாவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. மங்கோலியாவுக்குச் செல்லும் அத்துணை சாலைகளையும் முடக்கி, எந்த ஒரு பொருளையும் மங்கோலியாவுக்கு எடுத்துச்செல்ல முடியாமல் முடக்கிப்போட்டது சீனா. இதனால் மங்கோலியாவின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, வேறு வழியில்லாமல் சீனாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இனிமேல் தலாய் லாமாவை எந்தக் காரணம் கொண்டும் மங்கோலியாவுக்கு அழைக்கவோ, மங்கோலியாவுக்கு அவர் வருவதை அனுமதிக்கவோ மாட்டோம் என்று உறுதி அளித்த பிறகுதான் மங்கோலியா மீதான தடையை சீனா அகற்றியது.
தலாய் லாமா திபெத்திய மக்களால் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். பௌத்தர்களின் தலையாய மத குரு. திபெத்திய தலைநகரமான லாசாவில் அமைந்த திபெத் அரசுக்குத் தலைமை தாங்கியவர்கள் தலாய் லாமாக்கள்தான். சீனாவின் க்விங் வம்சத்தினரின் ஆட்சியின்போது முழு சுதந்திரத்துடனான நாடாக திபெத் திகழ்ந்தது. மாசே துங் தலைமையிலான மக்கள் புரட்சி வெடித்து, சீன மக்கள் குடியரசு ஆட்சியைக் கைப்பற்றியபோது, திபெத்தைத் தங்களது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியாக சீனா அறிவித்தது.
இப்போதைய 14-ஆவது தலாய் லாமா 1939-இல் இவருக்கு முந்தைய 13-ஆவது தலாய் லாமாவால் அடையாளம் காணப்பட்டு 1940-இல் திபெத்தின் தலைநகரமான லாசாவில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். சீனா திபெத்தை இணைத்துக்கொண்டபோது, 1950 நவம்பர் 17-ஆம் தேதி தனது 15-ஆவது வயதில் திபெத்தின் முழு அதிகாரத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அவர் அறிவித்தார். சீனாவின் தலையீடும் ஆக்கிரமிப்பும் நடந்ததைத் தொடர்ந்து 1959-இல், இப்போதிருக்கும் 14-ஆவது தலாய் லாமா இந்தியாவிடம் சரணடைந்தார். சொல்லப்போனால் 1962-இல் சீனா இந்தியாவின்மீது படையெடுப்பு நடத்துவதற்கு காரணமே இந்தியா தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததுதான். இத்தனைக்கும் இந்தியா, திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரித்திருக்கிறது.
சீன அரசு தலாய் லாமாவை தீவிரவாதி என்றும், திபெத்தை சுதந்திர நாடாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. அவரை ஆன்மிகத் தீவிரவாதி என்றும், துறவியின் அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய் என்றும் சீனா வர்ணிக்கிறது. சமாதானத் தூதுவரான தலாய் லாமாவைக் கண்டு சீனா ஏன் பயப்பட வேண்டும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com