இது போதாது!

உலக வங்கியின் தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப் பட்டியலில், இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்

உலக வங்கியின் தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப் பட்டியலில், இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். உலகின் 190 நாடுகளில் கடந்த ஆண்டு உலக வங்கியின் தரவரிசைப்படி இந்தியா 130-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 100-ஆவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
 சுலபமாகத் தொழில் தொடங்குவது, தொழிற்சாலை நிறுவுவதற்கான அசையாச் சொத்தைப் பதிவு செய்வது, கட்டுமானத்திற்கு அனுமதி பெறுவது, மின் இணைப்புப் பெறுவது, சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு, சுலபமாக வரிகளைச் செலுத்துவது, ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது, நொடிப்பு ஏற்பட்டால் சரி செய்வது உள்ளிட்ட 11 தேவைகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு அவசியம் என்று உலக வங்கி நிர்ணயித்திருக்கிறது. இவற்றில் புதிய திவால் சட்டத்தின் மூலம் நொடிப்பை சரி செய்வது, வரி செலுத்துவதில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது முதலீட்டுக்கான சூழலை உருவாக்கி இருப்பது, சிறுபான்மை முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பதால் தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப்பட்டியலில் 30 இடங்கள் முன்னேறி இருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது.
 அந்நிய முதலீடுகளை சுலபமாக கொண்டுவரவும், தொழில் தொடங்கவும் சூழலை நாம் உருவாக்கி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல், நமது இலக்கு தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடத்திற்குள் வர வேண்டும் என்பது நனவாகுமேயானால், இந்தியாவை அச்சுறுத்தி வரும் வேலைவாய்ப்பின்மையை நாம் எதிர்கொள்ள முடியும்.
 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நிலை உயர்ந்திருந்தாலும்கூட, உலக வங்கி இந்தியாவில் காணப்படும் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் சுட்டிக்காட்டாமல் இல்லை. தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திச் செயல்பட கட்டுமான அனுமதி, சொத்துப் பதிவு, ஒப்பந்த நடைமுறை ஆகியவற்றை பின்பற்றுவதில் பல்வேறு தொந்தரவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதாய் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், உலக வங்கியின் இந்த ஆய்வு, இந்தியாவின் இரண்டு முக்கியமான மும்பை மற்றும் தில்லி பெருநகரங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 உலகின் ஏனைய நாடுகளில் ஒரு தொழிலைத் தொடங்க அனுமதி பெறுவது, தொழிற்சாலையை நிறுவுவது, ஊழியர்களை ஒப்பந்தம் செய்து கொள்வது, உற்பத்தியில் இறங்குவது, அதற்கான வரிகளைச் செலுத்துவது போன்றவை எந்தவிதத் தடையும் இன்றி சுலபமாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இந்தியாவில் இன்னும்கூட, எந்த முதலீட்டாளருக்கும் இவை சுலபமானதாக இல்லை.
 உலக வங்கியின் புள்ளிவிவரத்தின்படி, 55 நாடுகளில் எந்த ஒரு தொழில்முனைவோரும் ஒரு வார காலத்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து தனது வேலையைத் தொடங்கி விடலாம். நியூஸிலாந்தில் ஒரு தொழில் தொடங்குவதற்கு அரை நாள்தான் ஆகிறது. ஹாங்காங்கில் 30 நிமிடங்களில், மின்அஞ்சலில் அனுமதி பெறப்படுகிறது. மியான்மரில் 14 நாட்கள் என்றால், மலாவி, கோசோவா, இராக் ஆகிய நாடுகளை எல்லாவற்றையும்விட பின்தங்கிய நிலையில் இந்தியா காணப்படுகிறது.
 முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான முனைப்பில் இறங்கிவிட்டால் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு அவர்கள் தடுமாறும் சூழல்தான் இந்தியாவில் காணப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து நாடுகளில், இந்தியாவைத் தவிர, ஏனைய நான்கு நாடுகளிலுமே நம்மைவிடத் தொழில்முனைவோருக்கு சாதக நிலை காணப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரிக்ஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகளில் சீனா ஐந்தாவது இடத்திலும், ரஷியா 18-ஆவது இடத்திலும், பிரேஸில் 47-ஆவது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 115-ஆவது இடத்திலும், இந்தியா 164-ஆவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம், நிர்வாகத் தடைகளும், சட்டச் சிக்கல்களும்.
 கட்டுமான அனுமதி பெறுவதிலும் தெற்கு சூடான், கம்போடியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகியவற்றை விட, இந்தியா பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. தொழிற்சாலை நிறுவுவதற்காக இடத்தை தேர்வு செய்தாலும்கூட, அதைப் பதிவு செய்வதற்கு ஜாம்பியா, சோமாலியா, டிரைடன் ஆகிய மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியாவில் பல்வேறு தடைகள், பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன.
 இடத்தைப் பதிவு செய்வதற்கு இப்போது உள்ள 53 நாட்களை 9 நாட்களாகவும், கட்டுமான அனுமதிபெறுவதற்கு 143 நாட்களை 97 நாட்களாகவும், ஒப்பந்தங்களை முறைப்படுத்த 1445 நாட்களை 560 நாட்களாகவும், வரி செலுத்துவதற்கான நேரத்தை ஆண்டுக்கு 483 மணி நேரத்திலிருந்து 314 மணி நேரமாகவும் குறைத்தால் ஒழிய, நாம் முதலீட்டாளர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்த முடியாது.
 இந்தியாவில் தொழில்நுட்பத் திறமையில்லாமலோ, மனித வளம் இல்லாமலோ இல்லை. ஆனால், நம்முடைய அரசு நிர்வாகம் அசைந்து கொடுக்காமல் இருப்பது, ஆமை வேகத்தில் செயல்படுவது, திரும்பும் இடமெல்லாம் கையூட்டுத் தர வேண்டிய சூழல் காணப்படுவது ஆகியவைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனங்களாகக் காணப்படுகின்றன. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே சுமுகமான தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மனப்போக்கு காணாமல் இருப்பதும்கூட இதற்குக் காரணம்.
 எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு முதலீட்டால் மட்டுமே எந்த ஒரு நாடும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது. தனியார் முதலீடு அதிகரித்தால்தான் தொழில் வளர்ச்சி சாத்தியப்படும். அதற்கான சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியாக வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com