ஆசியானில் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பின்ஸ் தலைநகரம் மணிலாவில்

பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பின்ஸ் தலைநகரம் மணிலாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார். இதற்கு முன்னால் இந்தியப் பிரதமர்கள் பலர் ஆசியான் மாநாடுகளில் கலந்துகொண்டாலும்கூட, பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆண்டு விஜயம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை விஜயமாக இருக்கக் கூடும். அதற்கு காரணம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு ஆசியான் மாநாட்டில் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதுதான்.
1967, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றுகூடி உருவாக்கியதுதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு எனப்படும் 'ஆசியான்'. இந்த அமைப்பில் புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியத்நாம் ஆகிய நாடுகளும் இணைந்தபோது, இது 10 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக மாறியது. ஏறத்தாழ 44 லட்சம் சதுர கி.மீ. பரப்பும், உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்று விழுக்காடும் கொண்ட ஆசியானின் கடற்கரை பரப்பு, நிலப்பரப்பை விட மூன்று மடங்கு அதிகம்.
ஆசியான் உறுப்பினர் நாடுகளின் மொத்த மக்கள்தொகை 64 கோடி. அதாவது உலக மக்கள்தொகையில் 8.8%. ஆசியானை ஐரோப்பியக் கூட்டமைப்பு போல ஒரு பொருளாதார அமைப்பாக எடுத்துக்கொண்டால் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் ஆசியானுடையன. ஆசியான் நாடுகள் இந்தியாவுடன் நில ரீதியாகவும், கடல் ரீதியாகவும் தொடர்புடையவை. இந்தியாவுடைய ஒட்டுமொத்த சர்வதேச வணிகத்தில் 11% ஆசியான் நாடுகளைச் சார்ந்தது. ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் நெருக்கத்தை வலுப்படுத்தும் விதமாக அந்தக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களையும் வரவிருக்கும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். 
ஆசியான் மாநாட்டுக்கு இடையில், மணிலாவில் நடந்த 15-ஆவது இந்திய - ஆசியான் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஆசியான் நாடுகளையும் அச்சுறுத்தும் தீவிரவாதம் குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடத் தவறவில்லை. பெரும்பாலான ஆசியான் நாடுகள் பெளத்த மதத்துடன் தொடர்புடையவை என்பதாலும் அவர்களுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றுப் பூர்வமான தொடர்புகளும், கலாசார விழுமியங்களும் உள்ளன என்பதாலும் இந்திய - ஆசியான் நெருக்கம் என்பது இயற்கையான ஒன்று என்கிற அவரது கூற்று உணர்வு பூர்வமாக வரவேற்கப்பட்டது.
ஆசியான் மாநாட்டுடன் தொடர்புடைய கிழக்காசிய மாநாடும் மணிலாவில் நடந்தது. ஆசியான் உறுப்பினர்களான 10 நாடுகள் மட்டுமல்லாமல், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் இவற்றுடன் உலக வல்லரசுகளான அமெரிக்காவும், ரஷியாவும் இதில் கலந்துகொண்டன. இந்த மாநாட்டிலும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் மாநாட்டின்போது, இன்னொரு மிக முக்கியமான நிகழ்வு அரங்கேறியது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு ஜனநாயக நாடுகளும் இணைந்து ஒரு புதிய அமைப்புசாரா கூட்டணியை உருவாக்க ஆசியான் மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு சீனாவின் கடுமையான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இப்போது சீனா, தென்சீனக் கடலில் தன்னுடைய மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டிருப்பதால், இப்படியொரு கூட்டணி மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதலாம். 
ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் ஏற்கெனவே அமெரிக்காவுடன் கடந்த 70 ஆண்டுகளாக ராணுவ ஒப்பந்தத்தில் இருக்கும் நிலையில், இப்போது இந்தியா இணைந்திருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதேநேரத்தில், எல்லை ஓரத்தில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீனாவையும், தீவிரவாதத்தின் மூலம் தொடர்ந்து இந்தியாவைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தானையும் எதிர்கொள்ளவும் கட்டுக்குள் வைக்கவும் இந்தக் கூட்டணி தேவை என்று பிரதமர் மோடி கருதுகிறார் என்று தோன்றுகிறது.
ஆசியான் மாநாட்டின்போது, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்துக்கொண்டதும், அமெரிக்காவுடனான நான்கு நாடுகள் கூட்டணி ஏற்பட்டிருப்பதும், சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியாவுக்குத் தரும் முக்கியத்துவம் அதிகரித்திருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதுவரை ஆசிய பசிபிக் கூட்டணி என்று கிழக்காசிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுக்கு பெயரிட்டிருந்த அமெரிக்கா, இப்போது அதை 'இந்தோ - பசிபிக்' என்று பெயர் மாற்றியிருப்பதும், அதிபர் டிரம்ப் தனது உரையில் அவ்வாறே அழைத்ததும், ஆசியாவில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று கொள்ளலாம்.
ஆசியான் அமைப்பின் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், கம்போடியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு தளர்ந்து வருவதும் வெளிப்படை. இந்தியாவைப் பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை மீட்டெடுக்கவும் நிலைநிறுத்தவும் அமெரிக்கா முயற்சி செய்கிறதோ என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவின் உதவியும் நட்புறவும் தேவைப்படுகிறதே, என்ன செய்ய?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com