ராகுலின் தலைமை...?

காங்கிரஸ் செயற்குழு அறிவித்திருக்கும் உள்கட்சித் தேர்தல்

காங்கிரஸ் செயற்குழு அறிவித்திருக்கும் உள்கட்சித் தேர்தல் அட்டவணைப்படி டிசம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் புதிய தலைவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அநேகமாக ராகுல் காந்தியின் வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால், அவரது தேர்வு என்பது தீர்மானிக்கப்பட்ட முடிவு!
சமீபகாலமாக ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா சென்றிருந்தபோது பெர்க்கலேயில் தனது உரையில், 'வாரிசு அரசியல்' குறித்து அவர் குறிப்பிட்டது விவாதத்தை எழுப்பியது. பா.ஜ.க. தலைவர்களும், 10-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்களும் அவரது உரைக்கு எதிர்வினை எழுப்பியதால், அவர்கள் அறியாமல் ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மை எதிர்க்கட்சித் தலைவராக உயர்த்திவிட்டனர். 
கடந்த 19 ஆண்டுகள் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வகித்த சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முற்பட்டிருப்பதற்கு அவரது உடல்நிலை மட்டுமே காரணமல்ல. 2019-இல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கட்சி அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், காங்கிரஸின் அனைத்து நிலைகளிலும் இளைய தலைமுறைத் தலைவர்களை நியமிக்கவும் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. 
இந்தியாவிலுள்ள வாரிசு முறையைக் கடைப்பிடிக்கும் பல்வேறு அரசியல்கட்சிகளில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் கட்சிப் பொறுப்புக்கு வரத்தொடங்கிவிட்டார்கள். சமாஜவாதி கட்சியில் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும், தெலுங்கு தேசம் கட்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷூம், தேசிய மாநாட்டுக் கட்சியில் ஒமர் அப்துல்லாவும் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருப்பவர்கள் காங்கிரஸில் ராகுல் காந்தியும், தி.மு.க.வில் மு.க. ஸ்டாலினும் மட்டுமே.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல் நீரோட்டத்துக்கு இளைஞர்களைக் கொண்டுவருவது என்கிற 47 வயது ராகுல் காந்தியின் முனைப்பு அவரது பலங்களில் ஒன்று. இளைஞர் காங்கிரஸிலும், மாணவர் காங்கிரஸிலும், உள்கட்சித் தேர்தலை நடத்திப் பல இளைஞர்களுக்கு அவர் கட்சியில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளால், காங்கிரஸுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சும் அவரது முயற்சி, எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. 
அதேபோல, காங்கிரஸ் கட்சியில் மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு, வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு என்று உருவாக்கி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் அவரது முயற்சி அந்தக் கட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. பல மாநிலங்களில் இளைய தலைமுறைத் தலைவர்கள் ராகுல் காந்தியால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்சி விவகாரங்களில் மூத்தவர்களானாலும், இளையவர்களானாலும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பதும், பொறுமையாக அனைவரது கருத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்வதும் ராகுல் காந்தியின் பாராட்டுக்குரிய செயல்பாடு. அது கட்சிப் போராட்டங்களாகட்டும், தேர்தல் பிரசாரமாகட்டும் கடுமையாக உழைப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. இவையெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புதிய வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை குஜராத் தேர்தல் பிரசாரம் வெளிப்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்டவை எல்லாம் ராகுல் காந்தியின் பலங்கள் என்று சொன்னால், அவரது மிகப்பெரிய பலவீனமாகக் கருதப்படுவது எந்தவித முடிவையும் எடுக்காமல் தாமதப்படுத்தும் அவரது போக்கு. கடந்த ஆறு மாதங்களாக மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், ஒடிஸாவிலிருந்தும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து கலந்தாலோசித்துக்கொண்டும், கருத்துக் கேட்டுக்கொண்டும் இருந்து வருகிறாரே தவிர, இன்னும் அந்த இரண்டு முக்கியமான மாநிலங்களுக்கும் கட்சித் தலைவரை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. பஞ்சாப் முதல்வராகக் கேப்டன் அமரீந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. மக்களவை காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவராக இருந்த அவருக்குப் பதிலாக ஒருவரை ராகுல் காந்தியால் இன்னும்கூட அடையாளம் காண முடியவில்லை. 
பத்தாண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தும் அவர் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவரது நிர்வாகத் திறமை என்பது இன்னும் வெளிப்படாமலேயே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த தடையோ, சிக்கலோ கிடையாது. ஆனால், தலைவராகக் கட்சித் தொண்டர்களாலும் மக்களாலும் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றியடைவதில்தான் இருக்கிறது. 
குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமையுமானால், ராகுல் காந்தியின் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலிமையான சக்தியாக பா.ஜ.க.வை களத்தில் எதிர்கொள்ளும். இல்லையென்றால், பா.ஜ.க.வின் செல்வாக்குச் சரிவைப் பொருத்துத்தான் காங்கிரஸின் எதிர்காலம் அமையுமே தவிர, ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பதாலேயே எதையும் சாதித்துவிட முடியும் என்றுதோன்றவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com