பத்திரம், பத்திரம்!

நமது அரசியல் கட்சிகள் வெளியுலகுக்குக் கீரியும் பாம்புமாக

நமது அரசியல் கட்சிகள் வெளியுலகுக்குக் கீரியும் பாம்புமாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு வரும் நன்கொடைகள் குறித்தும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் குறித்தும் ஒத்த கருத்துடையவையாகத் திகழ்கின்றன. வாக்களிக்கும் மக்கள்தான் ஏமாளிகளாகவே இருக்கிறார்களே தவிர, நமது வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது அவர்களுக்குப் பெரும் பணம் திரட்டும் பொழுதுபோக்காகத்தான் இருக்கிறதோ என்று சிந்திக்க வைக்கிறது அவற்றின் நடவடிக்கை.
தேர்தல் சீர்திருத்தம் குறித்த 255-ஆவது சட்ட ஆணைய அறிக்கை, அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, பெரும் நன்கொடையாளர்களால் அரசைக் கைப்பற்றவும், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படவும் வைத்துவிடும் என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69% இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்பதே தெரியாதவை. மீதமுள்ள 31% தான் வரிமான வரித்துறைக்கு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் கணக்கிலிருந்து வெளியில் தெரிபவை. அரசியல் கட்சிகளின் உண்மையான வருவாய் அவர்கள் தாக்கல் செய்வதைவிட, இரண்டு மடங்கு அதிகம். அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ, வருமான வரித்துறையிடமோ எந்த அதிகாரபூர்வ ஆவணமும் கிடையாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.20,000-க்கும் மேல் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அனைத்தும் கணக்கில் காட்டப்பட வேண்டும். அதேபோல, தொழில் நிறுவனங்களும் தங்களது அரசியல் நன்கொடைகளை லாப - நஷ்ட கணக்கு அறிக்கையில், எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தரப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். நிறுவனத்தின் மூன்று ஆண்டு நிகர சராசரி லாபத்தில் 7.5%-க்கும் அதிகமாக அரசியல் நன்கொடை தரக்கூடாது. அதேபோல, அரசியல் கட்சிகள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற முடியாது. இவையெல்லாம் இனிமேல் கைவிடப்படப் போகின்றன.
இப்போது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் குறித்து சில தகவல்களைப் பெற முடிகிறது. ஆனால், அரசு அறிவித்திருக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை குறித்த கொஞ்சநஞ்ச வெளிப்படைத்தன்மையையும் அகற்றிவிடுகிறது. நிதிச்சட்டம் 2016, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அந்நிய நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை அனுமதித்தது என்றால், நிதிச்சட்டம் 2017-இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தி, குறிப்பிட்ட வங்கிகள் மூலம் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்க வழிகோலியிருக்கிறது. 
தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்பது நன்கொடையாளர் பெயர் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வழங்கப்படும் பத்திரங்கள். காலாவதி தேதி அறிவிக்கப்பட்ட ரொக்கத்துக்கு நிகரான பத்திரங்கள். ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்பினால், ஒவ்வொன்றும் பத்து கோடி மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்களைக் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பெற்று வழங்கலாம். அந்தப் பத்திரங்களில் வரிசை எண் இருக்குமே தவிர, வாங்கியவரின் பெயர் இருக்காது. அவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் அந்த பத்திரத்தை போடலாம். அதைப் பெரும் வங்கிக்கு எந்த அரசியல் கட்சிகளின் பெயரில் போடப்பட்டது என்பது தெரியுமே தவிர, யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்த எந்த ஆவணமும் இருக்காது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 7.5% கட்டுப்பாட்டை அகற்றுகிறது. அரசியல் நன்கொடையை வழங்க நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும் என்கிற வரம்பும் அகற்றப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் கூட இனிமேல் இஷ்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். இதன் மூலம் நிழல் நிறுவனங்களும், போலி நிறுவனங்களும் தங்களை அடையாளம் காட்டாமல் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். அதுமட்டுமல்ல, கம்பெனிகளின் பங்குதாரர்களுக்கு எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சிதான் இதனால் பெருமளவு பயன்பெறும் என்பதும், எதிர்க்கட்சிகள் அரசியல் நன்கொடை பெறுவதற்குப் போராட வேண்டி இருக்கும் என்பதும் தெளிவு. இதனால், ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்து என்ன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
ஒருபுறம் கருப்புப் பணத்துக்கும், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்துக்கும் எதிராக போர் தொடுக்கப்படும் நிலையில், அதற்கு நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இது குறித்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கவலைப்படாவிட்டாலும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள வாக்காளர்கள் கவலைப்பட்டாக வேண்டும். அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. என்ன செய்யப்போகிறோம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com